முஹர்ரம் பேசுகிறேன்
அன்பு நண்பர்களே! என்னைத் தெரியுமா உங்களுக்கு!
என் பெயர் முஹர்ரம். ஆங்கில வருடப் பிறப்பு ஜனவரி எனவும் தமிழ் வருடப்பிறப்பு சித்திரை எனவும் நன்கு அறிந்து வைத்திருக்கும் நீங்கள் இஸ்லாமிய ஆண்டின் முதல்மாதம் முஹர்ரம் என உங்களில் குறைந்த சதவீதத்தினர்தாம் அறிந்திருப்பீர்கள் என நான் துணிந்து சொல்வேன்.
என்னை வைத்துத்தான் ஹிஜ்ரீ ஆண்டு தொடங்குகிறது. முஹர்ரம் என்றால் சங்கை செய்யப்பட்டது, கண்ணியமானது எனப் பொருள். என்னை இஸ்லாம் அரபகத்தில் அறிமுகமாவதற்கு முன்பே அரபு மக்கள் புனித மாதங்கள் நான்கில் ஒன்றாக மதித்து வந்தார்கள். என்னில்தான் ஆஷீரா எனும் முஹர்ரம் பத்தாம் நாள் வருகிறது. இந்த நாளில்தான் நபிமார்களின் வாழ்வில் முக்கிய வெற்றிகள் கிடைத்தது என நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தெளபா ஏற்றுக் கொள்ளப்பட்டதும், நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரளயத்திலிருந்து காக்கப்பட்டதும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நைல்நதியைப் பிளந்து ஃபிர்அவ்னிடமிருந்து ஈடேற்றம் பெற்றதும், இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்ரூதின் நெருப்புக் குண்டத்திலிருந்து சுகமாக வெளியே வந்ததும், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆட்சி மீண்டும் கிடைத்ததும் இந்த நாளில்தான் எனும்போது எனக்கொரு மகத்துவம் - தனித்துவம் - புனிதத்துவம் இருப்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
ஆனால் என்னில்தான் ஒர் வரலாற்றுச் சோகம் நிகழ்ந்துவிட்டது என எண்ணும்போது என் நெஞ்சே வெடிக்கிறது. அது என்ன சோகம்?
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலாக் களத்தில் ஹீதாக்கப்பட்ட அந்தக் கொடிய நிகழ்வுதான். எனக்கொரு சந்தேகம்!
முன்னர் வாழ்ந்த முஸ்லிம்களெல்லாம் முஹர்ரம் 10 நோன்பு பிடித்துக் கொள்வதோடு போன்று கர்பலாவில் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் அஹ்லபைத்துக்களான நபிக்குடும்பத்தாரும் செய்த ஒப்பற்ற தியாகத்தை நினைவுகூர்வார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்களிடம் அந்தப்பேணுதல் - அந்த அக்கறை - அந்த முக்கியத்துவம் - அந்த உணர்வு சிறிதும் தெரியவில்லையே! ஏன்?
என்னைப் பொறுத்தவரை நான் இப்படி நினைப்பதுண்டு. கர்பலாக் களத்தில் கொடியவன் யஜீதால் - தண்ணீர் கூடத் தரப்படாமல் நா வரண்டு வாடிய பெருமானாரின் திருப்பேரரின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளத் தானோ என்னவோ, இறைவன் அந்த நாளில் முஸ்லிம்கள் நோன்பு வைத்து தண்ணீர் பருகாமல் வாடி இருக்கச் செய்தான் என எண்ணுவதுண்டு. அன்பர்களே! என்ன... என் உணர்வும் நினைவும் சரிதானே!