சிந்திக்க சிலந்தி
அதிரை அருட்கவி அல்ஹாஜ். மு.முஹம்மது தாஹா
சிந்திக்க சிலந்தி !
அந்நூர் வெளிச்ச விரிகடல்
விந்தை வேதம் !
நுட்பங்கள் நூற்கும்
நூறுவகை அற்புதங்கள் ஆக்கும் !
உழைப்பைக் காட்ட
உயர்ந்த தியாகத்தைக் காட்ட,
ஓர் படைப்பு அவனாற்றல் !
அது “சிலந்தி !”
அதோ !
வயிறு வெடித்தது - தாய்க்கு,
பயிறு சிதறியதாய்
பச்சிளங் குழந்தைகள்
சிறு, சிறு சிலந்திகள்!
தன் சந்ததி காக்க,
தன் இனம் தழைக்க
தாய்ச் சிலந்தி
விட்டது உயிர் ; தன்
பிள்ளை உயிர் காத்தது !
இது ஒரு தியாகம் !
போர்ப் புண்பட்டு
புழுதியில் மடிந்தனர்
தோழர்கள் - நபித்
தோழர்கள் - ஈ-
மான் காக்க செய்த தியாகம் !
ஓடிய சிலந்திகள்
உருவாக்கின வலையை
பிறந்த அடுத்த
நொடியில் படைப்பாற்றல் !
பிறந்ததும் பேகம்
சிறந்த கலையை
பின்னல் கலையை அளித்தவன்
யார் ? - அந்தப்
பேராற்றல் மிக்கோன் - அவனே
ஆளும் அல்லாஹ் !
தொட்டிலில் ஆடும்
பிள்ளைகள் போல,
தானே கட்டிய
வலைத் தூளியில் ஆடும் சிலந்தி !
காற்று வந்தது
கொடியசைந்தது ! அதோ
சிலந்தி வலை அசைந்தது !
வன்காற்று வந்தது -
கொடி ஒடிந்தது ! - சிலந்தி
வலை அறுந்தது !
ஒடிந்த கொடியை
நிமிர்த்த தாவரம்
சக்தி பெற்ற தில்லை ;
அறுந்த வலையை
உடன்
பின்னிய புதுமை,
வியப்பைப் பின்னியது !
சிம்மா சனத்தில்
சிங்கார ராணி
போல,
வலையின் நடுவில்
வாழ்ந்தது சிலந்தி !
வந்து வலையின்
மடியில்
அமர்ந்தது ஓர் - ஈ
வாரிச் சுருட்டி
உண்டது சிலந்தி !
ஒன்று - மற்
றொன்றிற்கு உணவு !
மன்னவன் ஆட்சியில்
மலர்ந்த நியதி !
தந்திரத் தாலே
மனிதன் பசுத்தோல்
போர்த்திய புலியாய்
அடுத்தவன் நிலத்தை
அபகரிக் கின்றான் ;
எடுத்தவன் நிலத்தை
விடுகிறான் ஏப்பம் !
அடுத்தவன் மனைவிக்
காபத் தானான் !
உழைப்பின் உயர்வை
உலகுக் குணர்த்தி
ஓயாப் பின்னும்
சிலந்தி பாடம் !
மற்றொன்றைப் பிடித்து
உண்டது !
இல்லை “பாவம் !”
தான் மடிந்து
தன் இனத்திற்காய்
உயிர்த் தியாகம்
செய்யும் சிலந்தி சேமம் !
தான் வாழத்
தன் இனத்தையே
அழிக்கிறான் மனிதன் !
அகதிக ளாக்கி
ஆனந்தம்
காண்கின்றான் பாவி !
படைத்தோனை வணங்கப்
படைப்பில் உயரப்
படைக்கப்பட்டான்
மனிதன் !
வழிப்படா , வணங்காப்
பாழ்பட்டான் !
சிந்திக்க சிலந்தி !
மதிப்புரை
அறிஞர்கள் நெஞ்சில் அதிரை தாஹா
நாடறிந்த நற்கவிஞரான பெரும்புலவர் அதிரை தாஹா மதனீ அவர்களின் நூற்களுக்கு அறிஞர்கள் - கவிஞர்கள்தந்த மதிப்புரையினை பேராசிரியர் சா. நசீமா பானு, எஃப் சமீராபானு இருவரும் தொகுத்து வழங்கியுள்ளார்கள். மதிப்புக்குரிய 63 அறிஞர்களின் மதிப்புரைகள் இதைஅணி செய்கின்றன. மதிப்புரை களுக்குள்ளே நாம் சென்று பார்க்கும் போது தான் வாழும் சாதனையாளரானதாஹா அவர்களின் வலிமை புரிகிறது. மதிப்புரைகள் மட்டுமின்றி “இறைவனிடம் முறையீடு”எனும்நெஞ்சை உருக்கும் 100 பாக்களில் இறைவேட்டலும் கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பும் வலம்வருகின்றன. அதிரையார் அவர்கள் இந்த உலகில் “பிறக்கும் முன்னரே பெயர் பெற்றவர்” எனும்இனிய செய்தி அவர் மேல் மேலும் மதிப்பைக் கூட்டுகிறது. தொகுப்பாளர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
விலை : ரூ. 100/-
கிடைக்குமிடம் : கைரிய்யத் பதிப்பகம்
20/51, பெரிய நெசவு தெரு,
அதிராம்பட்டினம்- 614701
செல்: 8148509261
முயற்சி
நாம் முயற்சிக்க வேண்டியது எமது கடமை. அது அப்படியே ஆக வேண்டும்எனக் கருதுவது எமது மடமை. நடப்பதும், நடக்காதிருப்பதும் ஹக்கின் (இறை) பொறுப்பு.