• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »  யாஸீன் நாயகரின் கராமத் - அற்புதங்கள்


யாஸீன் நாயகரின் கராமத் - அற்புதங்கள்

அபூபாஹிரா

 

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணையும், இலங்கை மண்ணையும் இரண்டு பாதங்கள் புனிதப் படுத்திக் கொண்டிருந்தன.  அந்த மகானைப் பார்ப்பதன் மூலம் ஓர் இறைத் தொடர்புள்ள புனிதரை நேரில் காணும் பேற்றை மக்கள் பெற்றுக் கொண்டிருந்தனர்.  பள்ளிகள் அவர்களின் பயான் மஜ்லிஸால் புத்துயிர் பெற்றன.

அவர்கள் கற்ற கல்விக் கூடமும் அவர்கள் கற்றுக் கொடுத்த கல்விக்கூடமும் அவர்களால் அலங்காரம் பெற்றன.  அவர்களைச் சந்தித்த மனிதர்களெல்லாம் அவர்களைப் போன்ற வேறொருவரை சந்தித்ததில்லையே என வியப்பால் விழிகளை விரித்தனர்.

­ரீஅத்தும் - ஹகீகத்தும் சங்கமிக்கும் கடலாக விளங்கிய அவர்கள் யார்?

அவர்கள் தாம்..... நபிகளாரின் திருப்பேரர், வலிகள் கோமானின் வாரிசுக்காரர், குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயகம்  (ரலி) அவர்கள்.  யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள் வந்தார்கள்.  வாழ்ந்தார்கள்.  இன்று நம் கண்களுக்கு மறைந்து வாழ்கின்றார்கள். அவர்களை முற்றுமாக அறிந்தவர்கள் யார்? அவர்களின் அகமிய உயர்வையும் அறிவாற்றலையும் அவர்களின் நிகரற்ற நேர்த்தியையும் உள்ளால் உள்ளபடி அறிந்தவர்கள் இன்று ஒருவருண்டா?

ஏன் இல்லை......? இருக்கிறார்கள்! ஒருவர் மட்டும் உள்ளார்கள்! அவர்கள் தாம்.  அவர்களின் பிரதியாக - பிரதிநிதியாக அவர்களின் திருமகவாக உதித்த ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்கள். 

அவர்கள் தங்கள் தந்தையை தந்தையாகவும் கண்டார்கள்.  குருவாகவும் பார்த்தார்கள்.  தந்தை மூலம் தங்களுக்குக் கிடைத்த உள்-வெளி பாக்கியத்தை உணர்ந்தார்கள்.  தந்தையாரை எண்ணும் போதெல்லாம் தங்களுக்குள்ளேயே கசிந்தார்கள்.  மனதுக்குள்ளே போற்றினார்கள்.  மகன் தந்தையைப் போற்றுவது மரபு தானே என மக்கள் எண்ணிவிடக் கூடாதே எனப் பெற்றார் சிறப்பை பேணுதலாகவே வெளியிட் டார்கள்! ஆனால், உண்மையை உள்ளபடி உணர்த்துதல் உலகத்துக்குத் தேவை யன்றோ?தந்தை தந்தை மட்டுமல்ல! ஆன்மத்தந்தையுமல்லவா! ஆதலால் குருவைப் போற்றுதல் திருவைச் சேர்க்குமல்லவா? எனவே குருவாகிய தந்தையாரின் கோடி மேன்மையை பாக்களாக - தமிழ்ப்பூக்களாக குத்புகள் திலகம் யாஸீன் மெளலானா அல்ஹா´மிய் (ரலி) எனும் பெயரில் கவிதை நூல் ஒன்று இசைத்தார்கள். 

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்.  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கலீபா பீர் முஹம்மது அவர்கள் பொறுப்பேற்று வெளியிட்டுள்ள அந்நூலிருந்து சில பாக்களை இப்போது நாம் படித்துச் சுவைப்போம். வலிமார்கள் என்றாலே கராமாத்துகள் எனும் அற்புதங்கள் தான் 

     

 

மக்களின் நினைவுக்கு முதலில் தோன்றும்.  ஏனெனில் அது நேரடியாக மக்கள் அனுபவிப்பது. நடைமுறை சாட்சியாக உணரப்படுவது. யாஸீன் நாயகம் (ரலி) அவர்களின் வாழ்விலும் ஏராளமான காரணம் எனும் கராமத்துகள் நடந்துள்ளன.  அவற்றில் ஒன்றை இப்பாடல் கூறுகிறது.

 

அன்றையில் முஸ்லிம்கள் வாழ்ந்த

            அரிய நல்லூர்களிலே  சீர்த்த 

      நன்கொழுகும் விதிமுறைகள்  யாவும்

            நன்றாக விருந்ததிலை யாங்கும்.

      பள்ளிக ளுண்டுதொழச் செல்வர்

            பார்ப்பதற்கோ   சமுதாயப் பற்றும்

      விள்ளுதற்கோ வொற்றுமையு(ம்) மற்றும்

            வேறெந்த முன்னேற்றங் கண்டதுமில்லை.

      ஐயகோ இம்மக்க ளேனோ

            அமைவின்றி வாழ்கின்றார் வீணே

      மையல்கொ ளிவ்வாழ்விற் சீர்மை

            மலர்வித்த லவசியமு  மாமே.

      என்றெல்லா  மெண்ணியிப் பெரியார்

            இனியதா(ம்) முஸ்லிம்சமு தாயம்

      ஒன்றினை யமைத்திடல் தாமே

            உத்தம மாமென்றே ஆங்கண்.

      பற்பாலுஞ் சென்றாங்க ணிஸ்லாம்

            பகருந்நன் வேதமொழி விளக்கி

      பற்றுடனே சமுதாயக் கட்டுப்

            பாடும்விதி முறைபலவும் கூறி,

      வழிவகுத்தின் னின்னசெய்க வென்ன

            வழிமுறைகள் பலகூறி னார்கள்

      இழிவின்றித் தொழிற்பட்டு வருங்கால்

            இருவர்தாஞ்  செய்தவினைக் கேடால்,

 

அறிவித்தா  ரிச்செயலை முதல்வர்

            பெரியாராம்(ம்) மெளலானா தமக்கு

      நெறிதவறிச் செய்தவரைப் பார்த்து

            நேர்படுத்தச் சென்றார்க ளாங்கண்.

       இருவரையு மழைத்தார்கள் வினவ

            இல்லத்தி லிருந்தவண்ண மவர்கள்

      இருவருமே யில்லையயனக் கூற

            உரைத்தார்கட் சென்றவர்கண் மாட்டே.

      இல்லையில்லை யிருவருமே யாங்கண்

            இல்லத்தி லுள்ளார்கட் சென்று

      நல்லதீ தில்லையயனக் கூறி

            நயமாக வருமாறு கூறும்.

      என்றவுடன் சென்றவருங் கூறச்

            சென்றார்கட் பேருந்தி லேறிச்

      சென்றுவிட்டோ  மென்றேநீர் கூறும்

            என்றுரைத்துச் சென்றார்கள் வீணே (வேறு)

      பேருந்தி லிருவருமே சென்றுவிட்டார்

            பெரியாரே யயன்றவருங் கூறிடவே

      ஊருக்கவ் விருவருமே திரும்ப மாட்டார்

            உத்தமனுக் கஞ்சாத பாபிகளாம்.

      என்றார்கள் மெளலானா கோபத்தோடு

            இருவருமே யுயிருடனே திரும்பவில்லை

      அன்றேதாம் வந்தவைகட் கட்டைகளாம்

            அருஞ்சொல்லி னாற்றலதை யறிந்திடுவீரே

 

பாடல் விளக்கம்

 

அன்று முஸ்லிம்கள் வாழ்ந்த ஊர்களில் வேத விதிமுறைகளை உள்ளாரப் பின்பற்றி வாழவில்லை.  பள்ளிகளில் கூட்டம் கூட்டமாகத் தொழச் செல்வார்கள்.  பார்த்தால் சமுதாயப் பற்றும் ஒற்றுமையுடன் வாழ்வதாய் காணப்படுவர். ஆனால் அகப்பண்புகள் சீரில்லாமல் வாழ்ந்தனர்.  ஐயகோ

 

இம்மக்கள் ஏன் இப்படி அமைவின்றி வீணே வாழ்கின்றனர்? இவர்கள் வாழ்வை சீர்படுத்துதல் அவசியமெனக்கருதிய இப்பெரியார், இனிய புதிய முஸ்லிம் சமுதாயம் அமைத்திடல் உத்தமம் எனக் கருதி ஊக்கங் கொண்டு பல ஊர்களுக்கும் சென்று வேதமொழி விளக்கி  உண்மையான  மார்க்கப் பற்றும் சமுதாயக் கட்டுப்பாட்டையும் வகுத்து இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென மார்க்க - சமூக சேவையாற்றி வந்தார்கள்.

இவ்வண்ணமிருக்க, ஓருரில் இரண்டு ஊர்முக்கியஸ்தர்கள் நெறிதவறி வாழ்வதாய் பலரும் கூறக்கேட்டு அவர்கள் இருவரையும் நல்வழிப்படுத்துவோம் என எண்ணி அவர்கள் வாழ்ந்த ஊருக்குச் சென்று அவர்களை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். .  அந்த இருவரும் வீட்டிலிருந்து கொண்டே மெளலானா அவர்களின் அழைப்பை மதிக்காது, நாங்கள் வீட்டில் இல்லையயனக் கூறிவிடுங்கள்!  என அழைக்கச் சென்றவர்களிடம் கூறினார்கள். 

வந்தவர்கள் திரும்பிச் சென்று வி­யத்தைக் கூறியதும். இல்லை... இல்லை.... அவர்கள் வீட்டில் தான் இருக்கின்றனர்.  இப்படிச் செய்வது சரியில்லை.  எனவே வரச் சொல்லுங்கள்! என மீண்டும் ஆள் அனுப்பிட, அவர்கள் இருவரும்“நாங்கள் பேருந்தில் ஏறிச் சென்று விட்டோம் என்று கூறிவிடுங்கள்”எனச் சொல்லிவிட்டு, வேறு ஊருக்கு பேருந்தில் ஏறிப் புறப்பட்டுப்போய் விட்டார்கள். அழைக்கச் சென்றவர் “அவர்கள் பேருந்தில் புறப்பட்டுப் போய்விட்டனர் என மெளலானா நாயகம் அவர்களிடம் வந்து கூற, மெளலானா அவர்கள், இறைவனுக் கஞ்சாத பாவிகள் அவ்விருவரும் ஊர்” திரும்ப மாட்டார்கள் என கோபத்தோடு கூறினார்கள்.

அதன்பின் என்ன நடந்தது? மெளலானா நாயகம் அவர்கள்  கூறியது போலவே அவர்கள் இருவரும் உயிரோடு ஊர்திரும்பவில்லை.  அவர்களின் பிணம்தான் உயிரற்ற கட்டைகளாகக் கொண்டு வரப்பட்டது. இறைநேசர்களின் நாவு இறையின் வார்த்தைகள் வெளிவரும் இடம் என்பதும் இறைநேசர்களின் கோபமும் சாபமும் இறைவனின் கோபமே சாபமே என்பதும் சரித்திர உண்மையாயிற்று.

 

இதேபோன்று இன்னுமொரு நிகழ்ச்சி மாதம்பை எனும் ஊரில் நடந்தது. அதன் விபரம் இதோ.....

 

 

(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)

 

 

மாதம்பை யயன்னு மூரில்

      வழியினிற் சென்ற போது

      நீதத்தி னின்ற மனிதர்

      நீங்களா ரெங்கு வந்தீர்

      ரேதுங்க ளூரென் றாரே

      எம்மூர் தெற்கி லுள்ள

      ஓதஞ்சூழ் வெலிக மந்தான்

      உணர்வீ ரென்று சொன்னோம்.

      அவ்வூரி லறிஞ ரொருவர்

      அறநெறி நடந்த வர்கள்

      மவ்லானா ஸய்யித் யாஸீன்

      மற்றும வர்க டம்மை

      அவ்வாறே  யாயி னீங்கள்

      அறிவீரோ வென்ற போது

      எவ்வெர்க் குந்த லைவர்

      எந்தையயன் றோதி னோமே.

 

ஆகா நன்று நன்று

      அவர்களின் கராமத் தொன்று

      வாகா யயடுத்து ரைப்பேன்

      மதிப்புடன் கேட்பீ ரென்றார்

      நாகாக்  காத மைத்து

      னனுநா னுமூர்த்த லைவ

      ராகவே லையும் பார்த்தோம்

      அவ்வினை கூறு வேனே.

      வினையினை மாசு றுத்தி

      வீண்விரை யங்கள் செய்தார்

      நினையார் மைத்து னர்தாம்

      நீசவிவ் வினை தனையே

      தனையறி நாய  கம்பால்

      தனியே  யயடுத்து ரைத்தேன்

      அனையவர்  வந்து கேட்க

      அரும்பொயுங் கூறினாரே

 

 

 

சொன்ன பொய் கேட்டு ஞான

      சூரியர் பிடரி யாலே

      உன்னா வருமென் றார்கள்

      அன்னணம் பிடரி வீங்கப்

      பன்னவு(ம்) நாவெ ழாது

      படுக்கையி லிறப்பி லாதும்

      இன்னலுங் கொடுமை யாக

      என்னைய ழைத்தா ரன்றே.

 

 

 

றுயான் பார்த்த போது

      செயலறி  யாதி ருந்தார்

      அன்று செய் பாப மெல்லாம்

      அக்கணம் பொறுக்கச் சொன்னார்

      இன்றுயான் பொறுத்து விட்டே

      னென்றலு முயிர்  பிரிந்தார்

      என்றுமே யஞ்சு தற்கிஃ

      தொன்றுமே பொதுமாமே.

 

 

 

பாடல் விளக்கம் 

 

 

ஒரு பணியின் நிமித்தமாக மாதம்பை எனும் ஊரில் நடந்து சென்று கொண்டிருந்தோம். வழியில் எம்மைக் கண்ட நல்லார் ஒருவர் தாங்கள் எந்த ஊர்? எங்கு வந்தீர்கள் என விசாரித்தார்.  எம்மூர் இலங்கையின் தென்பகுதியில் அமைந்த வெலிகமா எனப்  பகர்ந்தபோது, வலிகமாவில் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா என்றொரு இறை நேசர் இருந்தார்கள்.  அவர்களைத் தாங்கள் அறிவீர்களா? என்று வினவினார்.  ஆம்! அவர்களை அறிவோம்.  அவர்கள் எம் தந்தையார்தான் எனக் கூறியபோது.  அவர் வியந்து ஆகா நல்லது! நல்லது! அவர்கள் நடத்திக் காட்டிய கராமத்தொன்றை தங்களுக்கு சொல்லிக் காட்டுகிறேன் கேளுங்கள்! என்று கூறி விபரிக்கத் தொடங்கினார்.

      நானும் என்மைத்துனரும் ஊர்த்தலைவராக பணியாற்றி வந்தோம்.  அப்போது என்மைத்துனர் ஊர்பணத்தை வீண் விரையம் செய்துவந்தார்.  நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் திருந்திய பாடில்லை.  எனவே தங்கள் தந்தையார் இங்கு வந்தபோது, அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்கள் மூலம் அவரைத் திருத்தலாம் என எண்ணினேன்.  யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள் அவரிடம் இது பற்றிக் கேட்ட போது அவர் அதனை மறுத்து அப்படியயல்லாம் இல்லை என பொய் கூறினார்.  பிடிவாதமாக மறுத்துப் பேசினார்.  அதுகேட்டு வெகுண்ட ஞான சூரியனான அவர்கள்.  பொய் கூறும் உன் நாவு உன் பிடரிப் பக்கம் வந்து விடும் என மொழிந்தார்கள்.  அவர்கள் வாக்குக் கொடுத்தது போலவே என் மைத்துனரின் இறுதிக் காலத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு பிடரிவீங்கி, நாவு பேசமுடியாமல் படுத்த படுக்கையில் கிடக்கிறார்.  இருக்க முடியாமலும் இறக்க முடியாமலும் இன்னல்பட்டுக் கிடக்கிறார் என்று மனமிரங்கும் வண்ணம் கூறி மெளலானா அவர்களின் மகவான தாங்கள் அவரை வந்து பார்க்க வேண்டும், அதன் மூலம் அவர் துயர் தீர்க்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். 

சரி! என அவருடன் சென்று அவருடைய நோய்வாய்ப்பட்ட மைத்துனரைக் கண்டோம்.  அவரோ இயங்க முடியாதிருந்தார்.  அன்று  தங்கள் தந்தையாருக்கு நான் செய்த பாபச் செயல்களைத் தாங்கள் பொறுத்தருள வேண்டும் என உருகிக்கரைந்தார்.  அன்று செய்த பிழையை இன்று பொறுத்தோம் என்று நாம் மொழிந்ததும் அவர் நிம்மதியாக மரணத்தைத் தழுவினார்.  இறைநேசர்களிடம் எப்படி அஞ்சி நடக்க வேண்டும் என்பதற்கும் அவர்களிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் இஃதோர் நல்ல படிப்பினையாகும்.