தொடர்.... தொடர் எண்-17
வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..
இவையனைத்திற்கும் மேம்பட்டு, அவுலியாக்களுக்கெல்லாம் அரசரான, அல்குத்புர் ரப்பானீ, வல் கெளதுஸ் ஸமதானீ யஸய்யிதுனா முஹிய்யுத்தீன் அப்துல் காதிரு ஜீலானீ (ரலி) அவர்கள் ‘ஐய்னிய்யாவில்’ கூறியுள்ளதைப் புத்திசாலிகள் படித்துப் பயனடைவார்களாக!
அவர்கள் உபதேசித்துக் கூறுவது யாதெனில் : -

அஷ்யய்கு முஹிய்யுத்தீன் இபுனு அறபி (ரலி) அவர்கள் இமாம் பகுறுத்தீன் றாஜீ (ரலி) அவர்களுக்கு உபதேசமாக எழுதியதாவது யாதெனில் :-
“எம்மனிதன் உண்மை என சாதிக்க, தர்க்கவாதம் புரிவதை விட்டு வெளிப்படவில்லையோ, அம்மனிதன் அவுலியாக்களிடத்தில் ஒருபோதும் பூரண ஈமான் உடையவனாக மாட்டான். எனெனில், அந்த மனிதன் தான் கற்ற சொற்ப கல்வியை எல்லையில்லாததாகக் கண்டு, அந்த அற்பத்தையே துருவி ஆராய்வதில் தனது மேலான வயதைப் போக்கடிக்கிறான். அசல் நோக்கத்தை அடைந்தவனாக மாட்டான்” என்பதே.
இமாம் அஹ்மது இபுனு ஹம்பல் (ரஹ்), ஷைகு இஸ்ஸுத்தீன் (ரஹ்) ஆகிய இருவரும் தகுதி வாய்ந்த சிறந்த இரு முஹத்திதுகள். இன்காருக்குப் பிறகே இவர்கள் அவுலியாக்களின் அந்தரங்கப் பேறுகளைப் பெற்றார்கள். இமாம் அஹமது இபுனு ஹம்பல் (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் அபூஹம்ஜா பகுதாதீ (ரலி) அவர்களுடைய மஜ்லிஸில் உட்கார்ந்த பிறகுதான் இமாம் அவர்களுக்கு அகக்கண்கள் திறந்தன.
இமாம் அஹ்மது இபுனு ஹம்பல் (ரஹ்) அவர்கள் தமது குமாரருக்கு செய்யும் உபதேசத்தில், “மகனே! அவுலியாக்கள் பால் ஒரு பொழுதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே!. அவர்களுடைய சகவாசத்தை ஒரு போதும் மறந்திருக்காதே! அவர்கள் அகமியத்தின் பொக்கிங்களை அறிந்தவர்கள்; நாமோ, அவ்வாறு அறிந்திராத துரதிஷ்டசாலிகள்” என்று குறிப்பிடுள்ளார்கள்.
ஷெய்கு இஸ்ஸுத்தீன் (ரஹ்) குத்புல் அக்பர் அபுல்ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலீ (ரலி) உடைய சகவாசத்தால் பெரும் பேறுகளைப் பெற்றார்கள். “அவுலியாக்கள் தான் ஹகீகத்தை உடையவர்கள். அவர்களுடைய நேர்மைக்கு இதுவே போதுமான அத்தாட்சியாகும். மற்றவர்கள் வெறும் பழக்க வழக்கங்களில் அகப்பட்டுக் கொண்டு கிடக்கின்றனர்” என்று யய்கு இஸ்ஸூத்தீன் (ரஹ்) அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். உண்மை இவ்வாறிருக்க, ‘வஸீலா’வை நிராகரிக்கக் கூடிய வரம்பு மீறிய கூட்டத்தார்கள். அன்பியாக்களை, அவுலியாக்களை, யாரஸூலல்லாஹ்! யாவலிய்யல்லாஹ்! என்பன போன்ற சொற்களைக் கொண்டு அழைக்கக் கூடாது என பலமாக விவாதம் புரிகின்றார்கள். தங்களுடைய குருட்டுத் தனமான இத்தகைய விதண்டா வாதத்திற்குச் சாதகமாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்தைத் தவறான முறையிலாக்கி தங்களுக்குச் சாதகமான ஆதாரங்கள் என மனப்பால் குடிக்கின்றனர். (பலா தத்ஊ மஅல்லாஹி அஹதன்) என்ற 72:18 குர்ஆன் ஆயத்திற்கு, “எனவே,அல்லாஹ்வுடன் எவரையும் வணங்காதீர்கள்” எனவும் (“வலா தத்உ மஅல்லாஹி இலாஹன் ஆகர லா இலாஹ இல்லாஹுவ) என்ற 28:88 குர்ஆன் ஆயத்திற்கு “அல்லாஹ்வுடன் வேறோரு நாயனை நீர் வணங்காதீர். அவனைத் தவிர்த்து (வணக்கத்துக்குரிய) நாயன் (வேறு) இல்லை” எனவும், ஸூன்னத்து வல்ஜமாஅத்து முபஸ்ஸிரீன்கள் கருத்துத் தெரிவித்திருக்க,வஸீலாவை நிராகரிக்கக் கூடிய மேற்சொன்ன, அகீதாப் பிசகிய கூட்டத்தார்கள், இரு ஆயத்துகளுக்கும் “நீங்கள் அல்லாஹ்வுடன் வேறொரு வரையும் அழைக்கவேண்டாம்” எனவும், “நீர் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க வேண்டாம். அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் (வேறு) இல்லை” எனவும் அர்த்தம் கற்பித்து தங்களது விதண்டாவாதத்திற்கு ஆதாரங் காட்ட முற்படுகின்றனர். இவை போன்ற “வலாதத்உ” என்று வரக்கூடிய மற்ற ஆயத்துகளைக் கொண்டு இவர்கள் இவ்வாறே மேற்கோள் காட்டுகின்றனர்.
அழைத்தல், விளித்தல், கூப்பிடுதல் என்ற வார்த்தைகளுக்குரிய கருத்துடன் திருமறையில் ‘துஆ’ எனும் பதம் சில இடங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ‘வணங்குதல்’ என்ற கருத்துடனும் திருமறையில் சில இடங்களில் ‘துஆ’ எனும் பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ‘துஆ’ எனும் சொல்லிற்கு இருவிதமான பொருட்கள் உள்ளன. வணக்கத்தைப் பொதிந்தில்லாத சாதாரண அழைப்பு விளிப்பு, கூப்பிடுதல் என்ற வகைப் பொருள் ஒன்று. இபாதத்து எனும் வணக்கத்தைத் தன்னுள்ளடக்கிக் கொண்ட பிரார்த்தனையான அர்த்தத்துடன் கூடிய பொருள் மற்றொன்று.
(தொடரும்)