• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »  செயல்படுவீர்


செயல்படுவீர்

விஞ்ஞானி, சந்திரயான் மயில் சாமி அண்ணாதுரை


 

சுற்றுலாவில் சில காட்சிப் பொருள்களைப் பார்க்க முடியவில்லை என்றால் அதை மறந்து அடுத்ததைப் பார்த்தலே சிறந்தது. இல்லையயனில் பயணம் பழுதுபடும்.  வாழ்வும் அதுபோன்றதே! வாழ்வின் பல தருணங்களில், எனக்கும் எமாற்றங்கள் ஏற்பட்டன.  ஆனால் அந்த ஏமாற்றங்கள், எனக்கு மாற்றம் கொடுக்கும் ஏணிகளாயின.  எப்படி அது நடந்தது என்றும் கோடிட்டுக் காட்டியிருந்தேன்.

மனித வாழ்வு பிறந்து, வளர்ந்து, உண்டு, உறங்கி காலம் கடத்திச் செல்வதல்ல... அப்படியானால், தனக்கும் தனது உறவுக்கும் என உணவு, உடை, இருப்பிடத்திற்காக சம்பாதிப்பதுதான் வாழ்க்கையா? அது ஒரு கடமை, வாழ்க்கையின் அர்த்தம் அது மட்டுமா? ஏன்... மரம், செடி, கொடி, பறவைகள் கூட இதைச் செய்கின்றனவே.  அதற்கு மேல் நாம் செய்ய வேண்டியது என்ன? 

நம் மண்ணில் தோன்றிய சான்றோர் பலர், இந்த வகையில் பலதும் யோசித்திருக்கிறார்கள்; யோசித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.  அவர்களின் கருத்துகள் வேதங்களாய், விரிவுரையாய் நிறைய உள்ளன.

மலையளவு கருத்தைவிட, கடுகளவு செயல்தான் சமுதாயத்தை வளப்படுத்தும்.  கருத்துகள் காரியங்களாகஉருப்பெறும்போதுதான் சமுதாயம் உருப்படும்.  செயல், செயல், செயல் என மலரும் களமே வேண்டத்தக்கது.  எண்ணங்களும் நினைப்புகளும் செயல்முறையாக்கப்பட வேண்டும்.  வாழ்க்கையில் நடைமுறையாக வேண்டும்.

அப்படி நடைமுறையாக்க என்ன செய்ய வேண்டும்? இதை உணர்ந்து செய்யும்போது நிலவையும் கையருகே இருப்பதாக எண்ணி கை நீட்டினால் மட்டுமே நமக்குக் கிடைக்கும்.

கை நீட்டுவது..? அதன் அர்த்தம் என்ன?  

கொஞ்சம் அதிக கவனம்​

கொஞ்சம் அதிக உழைப்பு

கொஞ்சம் அதிக வேகம்

கொஞ்சம் அதிக முயற்சி

கொஞ்சம் அதிகத் திட்டம்

அத்துடன் மற்றவரிடம்,

கொஞ்சம் அதிகப்படியான அன்பு.

கொஞ்சம் அதிகப்படியான நட்பு

எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி.  ஆம், கல்வி மட்டுமே தனிமனிதனையும் சமுதாயத்தையும் முன்னேற்றும் முக்கியக் கருவி.  முகவரி தெரியப்படாதிருந்த பலரும், ஏன் -நாடுகளே கூட இன்று முன்னேற்றப் பாதையில் இருக்கக் காரணம் கல்விதான். நாம் யாரென்று உணரவும், நமது செயல் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், நம்மை உலகுக்கு வெளிப்படுத்தவும் முறையான கல்வி தேவை.  எல்லோருக்கும் கல்வி என்பதை நிஜமென்று ஆக்கவேண்டும்.  கல்வி வளாகங்களும் அதற்கென அதிக அளவில் உருவாக வேண்டும்.  படித்து வருபவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளும் விவசாயம் முதல் விண்வெளிவரை எல்லாத் துறைகளிலும் நிறைய உருவாக வேண்டும்.  இப்படி எல்லாம் அமைந்த நாளைய இளைய பாரதமே, வளர்ந்த இந்தியாவின் வாசல்.

இந்நிலை உருவாக அரசாங்கமும் சமுதாயமும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.  அரசாங்கம் மட்டுமே பெருகிவரும் மாணவர் தொகைக்கு ஈடுகட்டும் அளவில் நல்ல தரத்திலும் அதிக எண்ணிக்கையிலும் கல்வி வளாகங்களை உருவாக்க முடியாது.  அதற்காக இளைஞர்கள் வெளிநாட்டிற்குச் செல்வதோ வெளிநாட்டுக் கல்லூரிகள் இங்கு வந்து நமது இளைஞர்களுக்குக் கல்வி புகட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்றதா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இங்கேயே அதற்கு மாற்றுக் காணமுடியும் என்று நினைக்கிறேன்.  அது ஊர்கூடித் தேர் இழுக்கும் வேலை.  இருந்தாலும் ஊர் மக்கள் சேர வேண்டும்; மனங்கள் மாற வேண்டும்.

ஆம், குழந்தைத் தொழிலாளர்கள் கணிசமாக உள்ள இந்தியாவில், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப அதிகமான பெற்றோரால் முடியாத நிலை உள்ளது.  இந்த நிலையைச் சரிக்கட்ட சமுதாய இயக்கம் ஒன்று தேவை என்பது எனது எண்ணம்.  அதன்படி, படித்துச் சம்பாதிக்கும் நிலைக்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் ஒரு மாணவரை அல்லது மாணவியை முழுமையாகப் படிக்க வைக்க முன்வரவேண்டும். முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்  திட்டம் மிகவும் பாராட்டத்தக்கது.  இருந்தும், அது வீட்டில் ஒருவருக்கு மட்டுமே போய்ச் சேர்வதால் சமுதாயத்தின் உதவி மற்றவர்களுக்கும் தேவை.  நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பட்டப்படிப்பு முடியும் வரை உதவி தொடர வேண்டும்.

​இப்படிப் படித்துப் பணிக்குச் செல்லும் இளைஞர்கள், அடுத்து வரும் வசதி குறைவான - தகுதியுள்ள - மாணவர்களுக்கு உதவ வேண்டும்.  இந்தத் தொடர் செயலை நாம் நாட்டுப் பணியாக எண்ணிச் செய்தால் அடுத்த தலைமுறை இந்தியா,ஒன்றுக்கொன்றாய் இணைந்த உள்ளங்களும் படித்தவர்களும் நிறைந்த நாடாகும்.  வளர்ந்த இந்தியாவின் நுழைவாசல் அது.                                                                           

நன்றி: குங்குமம் ​