ஞானத்துளிகள்
தொகுத்தவர்: - செல்வி G.R.J திவ்யா பிரபு I.F.S, சென்னை
கர்மம் ஒவ்வொன்றுக்கும் கர்ம பலன் உண்டு. மிளகாயைச் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் உண்டாவது திண்ணம். பாபம் செய்கிறவனுக்கு அதன் விளைவு வந்தே தீரும். ஆனால் இறையருள் பெற்றவன் பின்பு பாபம் எதையும் செய்வதில்லை.
அவரவர் செயலுக்கு அவரவர் பொறுப்பாளி என்னும் எண்ணம் உள்ளத்தில் ஊறாவிட்டால் மனிதன் துணிந்து பாபத்தை ஏராளமாகச் செய்வான். இறையருள் அடையப் பெற்றவர்கள் மனிதனுக்கு இச்சுதந்திரம் சிறிதேனும் இல்லையயன்பதை நன்கு அறிகின்றார்கள். மனிதன் யந்திரம்; இறைவன் அதை இயக்குகின்ற யந்த்ரீ. செயல் அனைத்துக்கும் அவரே கர்த்தா.
பூக் கைலாசம் என்னும் ஊரில் ஆழ்ந்து சமாதியிலிருந்த சாது ஒருவரை அவ்வூரார் சித்திரவதை செய்து கொன்று விட்டனர். எல்லாம் ஈசன் செயல் என்கிறீர்கள்; இதையும் ஈசன் செயல் என்பதா? சமாதியில் மனம் லயமாயிருந்த சாதுவுக்கு இத்தகைய கதியை ஈசன் ஏன் கொண்டு வந்தார்? என்னும் கேள்வி பிறந்தது.
அதற்குப் பரமஹம்ஸர் விடை விடுத்தார். வினைப்பயன் எல்லா சரீரங்களுக்கும் உண்டு. அந்த வினைப்பயன்களும் ஈசன் செயலே. தங்கபஸ்பம் செய்கிற வைத்தியர்கள் ஒரு மூசைக்குள் ஏதேதோ ரசாயன வகைகளையும் மூலிகைகளையும் போட்டுத் தங்கத்துண்டு ஒன்றையும் அதனுள் வைத்துப் புடம்போட்டு ஊதுகின்றனர். தங்கம் உருகி மற்ற மூலிகைகளோடு கூடி தங்கபஸ்பம் ஆகிறது. அதன் பிறகு மூசையை ஜாக்கிரதையாக வைத்திருந்தால் என்ன? அல்லது உடைத்துத் தள்ளினால் என்ன? பெறவேண்டிய தங்கப் பஸ்பத்தைச் செய்தாய்விட்டது. பூக் கைலாசத்திலிருந்த சாது பிரம்ம ஞானத்தை அடைந்துவிட்டார். அவர் உடலுக்கு அழிவு எவ்விதத்தில் வந்தால்தான் என்ன? அதனால் அவருக்கு நஷ்டம் ஒன்றுமில்லை. அவர் கஷ்டப்பட்டார் என்று அறியாமையால் நாம் எண்ணுகிறோம்.
பிறர்க்குப் போதிப்பது சுலபமன்று. ஒருவன் முதலில் அனுபூதிமானாக வேண்டும். அடுத்தபடி இறையுடைய ஆதேசம் அவனுக்கு வரவேண்டும். அதன் பிறகு அவன் போதிக்க முன்வருவானாகில் அது நல்ல பயன் விளைவிக்கும்.

இறையருள் அடையப் பெறாதவனுக்குத் தான் செய்கிற பிரசாரத்தைப் பற்றி வீண் கர்வம் வருகிறது. பிறரை நான் நல்வழியில் நடத்துகிறேன் என்று அவன் எண்ணுகிறான். அக்ஞானத்திலிருப்பவனே செயலுக்குத் தன்னைக் கர்த்தாவாக வைத்துக் கொள்கிறான்.
உலகுக்கு நலம் செய்ய வேண்டும் என்னும் பேச்சு தாராளமாக மக்களிடத்திலிருந்து வருகிறது. உலகம் அத்தகைய அல்ப வஸ்துவா? உலகுக்கு நலம் செய்வதற்கேற்ற யோக்யதை மனிதனிடத்து யாது உளது? சாதனங்கள் புரிந்து முதலில் மனிதன் இறையருளைப் பெறவேண்டும். அவரிடமிருந்து ஆதேசம் வந்தால் மனிதன் உலகுக்கு நலம் செய்யத் தகுதியுடையவனாகிறான்.
குரு ஸ்தானத்திலிருந்து பிறர்க்குப் போதிப்பது எளிதன்று. இறையுடைய ஆதேசத்தை அடையப்பெற்றவனுக்கே அது சாத்தியம்.
குளக்கரையை மக்கள் பொறுப்பில்லாது அசுசிப்படுத்துகிறார்கள். ஊரார் அதைக் குறித்துத் திட்டுவதையும் அவர்கள் பொருட் படுத்துவதில்லை. ஆனால் ‘குளக்கரையை அசிங்கப் படுத்துகிறவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்’ என அரசாங்கத் திலிருந்து அறிவிப்பு வந்ததும் அந்தப் பொருந்தாச் செயல் உடனே நின்றுவிட்டது. இறையிடமிருந்து அருளைப் பெற்ற பிறகு மதப்பிரசாரம் செய்கிறவர்களுடைய வல்லமையும் அத்தகையது.
உள்ளம் என்னும் தொட்டிலில் இறைவனை முதலில் நிலைநாட்டு. பிறகு நீ வேண்டியவாறு பிரசங்கங்கள் செய்யலாம். விவேகமும் வைராக்கியமும் அடையப் பெறாது வெறும் வாயால் பிரம்மம் என்று பகர்வதில் பயன் என்ன? அது பொருளற்ற சங்கநாதமாகும்.
ஒரு கிராமத்தில் பாழடைந்த கோயில் ஒன்று இருந்தது. அதில் ஒருநாள் மாலை சந்தியாவேளையில் சங்கு ஊதுவது கேட்டது. யாரோ கோயிலைப் புதுப்பித்து மூர்த்தி பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்று கருதி ஊரார் அங்கு ஓடினர். மூடியிருந்த கதவைச் சிறிது திறந்து பார்த்தார்கள். உள்ளே அவ்வூர்ச் சோம்பேறி பத்மலோசன் என்பவன் ஒரு மூலையில் நின்றுகொண்டு வெறுமனே சங்கு ஊதிக் கொண்டிருந்தான். ஊராருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. “அடே பது! கோயில் பாழடைந்து கிடக்கிறது. ஆராதனைக்கு மூர்த்தி ஒன்றும் இல்லை. பதினொரு வெளவால்கள் இவ்விடத்தை அழுக்குப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விடத்தில் சங்கு ஊதுவதால் குழப்பத்துக்குமேல் குழப்பத்தை உண்டுபண்ணுகின்றாய்” என்றனர்.
நாம் நம் உடலைப் பாழும் கோயிலாக்கிவிட்டோம். உள்ளத்தைத் தூயதாக்கவில்லை. அதனுள் தெய்வத்தை எழுந்தருளப்பண்ணவில்லை. ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனது ஒன்று ஆகிய இந்தப்பதினோரு வெளவால்களும் உடல் வாழ்க்கையை அசுசியாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்போக்கில் போக மனிதன் தன் வாழ்வை விட்டுவிடலாகாது.
பிறருக்கு உபதேசிப்பதில் நீங்கள் கண்ணும் கருத்துமா யிருக்கிறீர்கள். எவ்வளவு தூரம் உங்களுக்கு மெய்ஞ்ஞானம் வாய்த்திருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. பிறர்க்கு எடுத்துப் புகட்டுதற்கே நீங்கள் பிறந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறீர்கள். உலகைப் படைத்த கடவுள், யார் யாருக்கு எது தேவை என்பதை அறிகிறார். அவரவர்க்கு ஏற்றதை அவர் வழங்குகிறார்.
வெறும் பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டிருப்பதில் பயன் என்ன? ஏதாவது சாதனம் செய்.
சிலர் சாஸ்திரங்களிலுள்ள பெரிய வியங்களைப் பற்றித் தாராளமாகப் பேசுகின்றனர். ஆனால் செயலிலோ அல்பர்கள் போன்று நடந்துகொள்கின்றனர்.
இறைவனிடமிருந்து ஆதேசம் வந்தாலொழிய பிறர்க்கு சமய போதனை பண்ணுவது மிகக் கடினம்.
சிவம் பெரியவரா அல்லது விஷ்ணு பெரியவரா என்னும் சர்ச்சை பண்டிதர்களுடைய சபையயான்றில் கிளம்பியது. பேச்சு மிகப்பலமாக நடந்தது. ஆனால் அவர்கள் அதற்கு முடிவு காணவில்லை. பண்டிதர் பத்மலோசனரை வரவழைத்து இக்கேள்வியை அச்சபையினர் அவரிடம் தெரிவித்தார்கள். பணிவுடன் அவர் பகர்வாராயினர் : “நான் எப்படி இக்கேள்விக்கு விடை சொல்ல முடியும்? நானோ, என் தந்தையோ, பாட்டனாரோ அல்லது கடந்து போன பதினான்கு தலைமுறைகளில் என் முன்னோர்களில் யாருமே சிவத்தையாவது விஷ்ணுவையாவது கண்டதில்லை”.
பெரிய பண்ணை யயான்றில் காரியஸ்தனாக இருக்கிற ஒருவன் அதன் ஒரு பகுதியில் ஒழுங்குப்பாட்டை நிர்வகித்து வைத்தால் பிறகு ஒழுங்குப்பாடில்லாத மற்றொரு பகுதிக்குப் பண்ணையின் சொந்தக்காரன் அந்தக் காரியஸ்தனை அனுப்பி வைப்பான். அதேவிதத்தில் தர்மப் பிரசாரகன் ஒருவனுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லை. தேவையேற்படுகிற இடங்களுக்கெல்லாம் சென்று அவன் சன்மார்க்கத்தைப் புகட்டியாகவேண்டும்.
(தொடரும்)