புதுமைகள் சொன்ன பூரணர்
ஆலிம் புலவர்
தானே தன்னில் தானானான்
லாஇலாஹ இல்லல்லாஹ்.
இஸ்லாம் எத்துணை பரந்த அறிவுப்பரப்பு கொண்டது? அதன் விளக்கம் குர்ஆனாகவும், ஹதீஸாகவும் ஸஹாபாக்களின் மனதில் பதிந்த அறிவா கவும், முஹத்திஸ்கள் இமாம்களின் விரிந்த விளக்கமாகவும், பெருமானாருக்குப் பின் மார்க்க அறிஞர்கள் எழுதிக் குவித்த நூல்களின் வரிகளாகவும் பொருள்களாகவும்....அப்பப்பா... சிந்தித்துப் பார்த்தால், எழு கடலினும் பரந்து விரிந்த தன்மையதாக இருப்பதை உணர்கிறோம். இந்தப் பரந்து விரிந்த அறிவு எதிலிருந்து பிறந்தது? எந்த விதையிலிருந்து இந்த அகன்ற ஆலமரம் தழைத்துள்ளது? லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுற் றசூலுல்லாஹ் என்னும் கலிமா எனும் மூலச்சொல் தான் இத்தனை அறிவாகவும் - விரிவாகவும் மலர்ந்திருக்கிறது - இவ்வளவு விரிந்த அறிவையும் ஒற்றை வரிச்சொல் உள்ளடக்கியிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?
உலகில் எந்த மதமும் இதுபோன்ற மூல மந்திரச் சொல்லைப் பெற்றிருக்கவில்லை. கலிமா என்பது உண்மையில் ஒரு மந்திரச் சொல்தான். அண்டாகா கஸம்! - அபூகாஹுகும்! திறந்துவிடு ஜிஸே! என்ற ரகசியச்சொல்லை உச்சரித்தவுடன் அலிபாபா குகையின் கதவு திறந்து கொள்வதுபோல - இந்த கலிமா மந்திரத்தைச் சொன்னவுடன், சொன்னவன் பூமியில் இருந்தாலும் இந்தப் பிரபஞ்சம் அனைத்தோடும் அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டுப்போகிறது. அவனுக்கு இம்மையின் சுபிட்சம் தொடங்குகிறது. மறுமையின் வசந்தக் கதவு திறக்கிறது. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களி லிருந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை அருமையான ஆதரவாளர்களைப் பெறுகின்றான் - மறைந்து போன கோடான கோடி முஸ்லிம்களும் - வாழும் 120 கோடி முஸ்லிம்களும் அவனுக்கு சகோதரர்களாக மாறிப்போகிறார்கள். சுப்ஹானல்லாஹ்! எல்லாம் இந்தக் கலிமா எனும் ஒற்றை வரி செய்த உள்ளமைப் புரட்சிதான்.
இந்த அருமையான கலிமாவின் உள்ளடக்கப் பொருள் - நுட்ப நுணுக்கத்தை - தமிழில் தர முடியுமா? முடியாது.... முடியாது... நமக்கெல்லாம் முடியாது. வேண்டுமால் வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவன் இல்லை என ரீஅத் பாங்கில் மொழிப்படுத்தலாம். இல்லையயனில், அல்லாஹ்வைத்தவிர வேறொன்றுமில்லை என மஃரிபா விளக்கமாக உணரப்படுத்தலாம்.
ஆனால்.....
கலிமாவின் அடிநாதமாக இழையோடும் தத்துவப் பொருள் - ஆன்மீக அர்த்தத்தை - மெய்ஞ் ஞானிகளின் தேடு பொருளாகக் கிடைத்த இரகசியப் பொருளை, ஒற்றை வரியில் உருக்கி வார்த்துள்ளார்கள் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்.
அதுதான்....
தானே தன்னில் தானானான்.
சந்தம் கொஞ்சி இழையோடும் இந்த வாக்கியம், மெய்ஞ்ஞான மூல மந்திரமாக விளங்குவதை நன்கு விளங்கியவர்கள் அறிந்து விளங்கிக் கொள்வார்கள்.
சற்று சிந்தனையை பின்னோக்கிச் செலுத்தினால்.....இந்த மந்திரச் சொல்லுக்கு எதிர்ப்புகள் இருந்த காலம் அது.
சபை தொடங்கப்பட்ட ஊர்களில் முரீதுப் பிள்ளைகளின் முற்றிய ஞான விளங்கங்களைக் கேட்ட முஸ்லிம்கள் - அவர்களில் அறிஞர்கள் - மிரண்டு போய், பொறாமையும் சேர்ந்து கொள்ள, பொல்லாங்குகளைக் கூறத் தொடங்கினார்கள். எதிர்ப்புகளையும் தூண்டினார்கள். ஆனால் அது கண்டெல்லாம் அஞ்சுதல் ஆகாது என அறிவுறுத்திய சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள், உண்மையை ஓங்கி உரைக்குமாறு பணித்தார்கள். அதன் அடையாளமாக லாவுஜூத இல்லாஹூ - என அறபியிலும் ஹிலி சிஐமிஷ்மிதீ யற்மி றூலி என ஆங்கிலத்திலும், தானே தன்னில் தானான் எனத் தமிழிலும் பொறித்த சின்னத்தை (பேட்ஜ்) சட்டைப் பாக்கெட்டில் தொங்க விடுமாறு ஆணையிட்டார்கள் முரீதுகள் அப்படியே பின்பற்றினார்கள்.
எதிர்ப்புகள் பேசிய மக்களிடையே இந்த பேட்ஜை அணிந்து நெஞ்சை நிமிர்த்திச் சென்ற முரீதுகளின் ஊக்கத்தை நினைத்தால் இன்றும் புல்லரிக்கிறது.
இந்த பேட்ஜை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களே வடிவமைத்து, இதிலுள்ள வெள்ளை நிறம் முரீதுகளின் பால்போன்ற மனத்தையும், கறுப்பு அறிவையும், ஊதா அகன்ற ஆகாயத்தையும்,சிவப்பு ஜலாலியத்தையும், பச்சை ஜமாலியத் தையும் குறிப்பதாக விளக்கினார்கள். இதனை மதுரையில் ஒரு கலைக் கூடத்தில் வடிவமைத்து வந்தவர் அப்போதைய ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைச் செயலாளராக இருந்த திண்டுக்கல் S.காஜா நஜ்முத்தீன் அவர்கள். இன்றும் அவரது இல்ல வரவேற்பறையில் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருப்பதைக் காணமுடியும். மதுரை ஜபருல்லாஹ் அவர்கள் தினசரி காலண்டரில் வாப்பா நாயகம் அவர்களின் புகைப்படத்தை அச்சிட்டு அதனைச் சுற்றிலும், தானே தன்னில் தானானான் என்ற மோட்டோவை பதிந்து வெளியிட, முரீதுகளின் கடைகள் - வீடுகளெங்கும் அந்த நாட்காட்டி கம்பீரமாக காட்சியளித்ததையும், அதில் சங்கைமிகு யய்கு நாயகம் அவர்களின் அழகிய இளமைத் தோற்றம் எழில் மிளிர காட்சியளித்ததையும் எண்ணிப்பார்க்கிறேன். அப்போதெல்லாம் ஞானமறியா எதிரிகள் முரீதுப் பிள்ளைகள் நடமாடும் இடங்களில் அவர்களை முன்னே விட்டுப் பின்னே நின்று, இதோ, தானே தன்னில் தானானான் போகிறது.... என்றெல்லாம் கேலி செய்வது வழக்கம். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது தானே தன்னில் தானானான் என்ற மந்திரத்தின் மகத்துவம்? அண்ணலார் கலிமாவை அறிமுகப் படுத்திய போது மக்காவாசிகள் செய்த அதே செயலை அறியா அப்பாவிகளும் செய்தனர்.
அதையயல்லாம் வென்று ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை உயிர்ப்புடன் உலாவருகிறது. தானே தன்னில் தானானான் தத்துவத்தை உரைத்துக் கொண்டே இருக்கிறது. அதனைத் தந்த தன்னிகரில்லா ஆன்மீகத் தந்தை செய்கு நாயகம் அவர்கள் தானே தன்னில் தானாக விளங்கி நம் ஆன்மதாகத்தை தீர்த்துக் கொண்டே இருக்கிறோர்கள். அல்ஹம்து லில்லாஹ்!
(புதுமைகள் பூக்கும்)