• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »  ஜமாலிய்யா தோட்டத்தில்


ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


பரிசுத்த கலிமாவினிமித்தமே வேதங்கள், நபிமார்கள், முர்ஸல்கள், வேத பாரங்கதர்கள், பரமார்த்தீக உபந்நியாசர்கள் யாவரும் மனிதரளவில் அனுப்பப்பட்டனர். அதனிமித்தமே சரித்திரங்களில் நிகழ்ந்த - நிகழ்கிற - நிகழப்போகிற சம்பவங்கள் யாவும்,விதியில் நிகழ்ந்தன.  உலக வேறுபாட்டிற்கும் அதன் மோட்சத்திற்கும் ஆம், அதன் பிறப்பு, இருப்பு, இறப்பு எல்லாவற்றிற்கும் அதுவே காரணமாகும்.

மனிதன் சத்திய கர்த்தாவின் சிங்காசனம், அதன் பிரதிபிம்பம், அதன் தோன்றுதுறை என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படுகிறது இந்தக்கலிமாவின் அர்த்தபுஷ்டியே யாகும். மனிதன் ஆத்ம பலம் பெற்று, அவன் புலன்கள் சக்திமிக்கதாகி, சர்வ உலகங்களிலும் ஆத்மார்த்தமாய்ப் பரிணமித்துப் பரமார்த்தீக இலட்சிய இலட்சணங்களுடன் திகழ்ந்து, நித்திய ஜீவன்பெற்று,சம்பூரணானந்தனாகி சர்வமும் சம்பூரணமான சச்சிதானந்தத்தின் அம்சமாகிப் பரிணமிக்க, இந்தக் கலிமா ஜீவாமிர்த ஜீவசக்தி யாயும் ஒப்பற்ற இன்றியமையாத தனிப்பெருஞ் சாதனமாயும் இருக்கிறது.

அதனால் நாமடைந்த திருப்பேறுகள், அருட்பேறுகளை அரபிப்பத வசனங்களில் குறித்துவந்திருந்தோம்.  நமது சிஷ்யர்களின் வேண்டுதலி னிமித்தமும், அவற்றை அவர்களும், மற்றவர்களும் வாசித்து என்றுமிருக்கும் சுத்த சத்திய பரமார்த்தீக அன்பு, அருள்,ஜோதி சமுத்திரங்களில் நீந்தி, நித்திய ஜீவனுள்ள சர்வ சுக சுபீட்ச சுவர்க்கத்திலே வேறு, பேதமற்று மகிழ்ச்சிகரமாய் வாழவேண்டுமெனவும் கருதி “யவானிஉ அத்மாருந் நஃமாஉ” என்ற பெயருடன் ஒரு கிரந்தமாய்க் கோத்திருந்தோம்.  அதை அவர்கள் அச்சிலிட்டனர்.

அவர்கள் அஃது உயர்தர அரபியிலுள்ளதாதலால் அதை விளங்கிப் பலன் பெறுவான்வேண்டி தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு தொடர்ந்து நம்மைக் கேட்டுவந்தனர். எனவேஅதைத் தமிழில் மொழி பெயர்த்தோம். மனிதனுக்கும் அவனது கருத்தாவிற்கு மிடையேயுள்ள நெருங்கிய சம்பந்தத்தையும் மனிதன் அதனாலடையும் மகத்தான நன்மைகளையும் விளக்குகிறதில் இந்நூல் ஓர் அற்புத வழி காட்டியாகும்.

ஆத்ம அன்பர்கள் கலிமா மூலமந்திரத்தினாலே ஹக்கின் திரு அடியார்கள் பெறும் ஆத்மார்த்த செல்வங்கள், சக்திகள்,திருவருட்பேறுகள் இவ்வாறுதான் இருக்கும் என்பதை அறிந்து அதை அடைவான்வேண்டி தங்களால் கூடுமானதையாற்றி அருண் வரம் பெற்று அழியா வாழ்வுடனும், அளப்பற்ற பேரானந்தத்துடனும் வாழ வாழ்த்திப் பிரார்த்தித்து வருகிற

 - அஸ்ஸையிது யாஸீன் பின் சையிது முஹம்மது அல்ஹஸனீயில் ஹாஷிமீ மெளலானா .

 

சங்கைமிகு குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் கலிமா விருட்சக் கனிந்த கனி நூலின் முன்னுரையிலிருந்து....