• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »  ஜனாஸாவின் சட்டங்கள்


சென்ற இதழ் தொடர்ச்சி....           

ஜனாஸாவின் சட்டங்கள்


ஆலிமாக்கள் பேரவை. சக்கராப்பள்ளி


 

ஹதீஸ் : அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.  நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தாயாருடைய கப்ரை ஜியாரத் செய்வார்கள்.  அப்போது அவர்களும் அழுவார்கள்.  அவர்களைச் சுற்றி நிற்பவர்களும் அழுவார்கள்.  எனது தாயாருடைய கப்ரை ஜியாரத் செய்வதற்கு எனது இறைவனிடம் அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கினான் என்று நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல் : முஸ்னது அஹ்மது 9548)

பாடம் : பெற்றோரின் மண்ணறையை ஜியாரத் செய்வது கட்டாயமான சுன்னத்தாகும்.  அதுபோன்ற நேரங்களில் மறுமையை நினைத்து அழுவதும் நம்மை நல்வழிப்படுத்தும்.

ஹதீஸ் : ஹஜ்ரத் அலீ (ரலி) கூறுகிறார்கள்.  அன்னை பாத்திமா நாயகியவர்கள் ஹம்ஜா (ரலி) வுடைய கப்ரை, ஒவ்வொரு வாரமும் ஜியாரத் செய்து விட்டு வருவார்கள். (நூல் : பைஹகீ 7239)

இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  நான் இமாம் அபூஹனீபா (ரஹ்) வுடைய கப்ருக்கு ஜியாரத்துக்காக வருவேன்.  அதன் மூலம் பரக்கத் பெற்றிருக்கிறேன்.   (நூல் : பதவா ஷாமீ)

பெண்கள் ஜியரத்


ஹதீஸ் : அப்துல்லாஹ் இப்னு அபீ மலீக்கா (ரலி) அறிவிக்கிறார்கள்.  ஒரு நாள் ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் கப்ருஸ்தானிலிருந்து வரும் போது எங்கே போய்விட்டு வருகிறீர்! எனக் கேட்டேன்.   அதற்கு எனது சகோதரர் அப்துர் ரஹ்மானை ஜியாரத் செய்துவிட்டு வருகிறேன் என்றார்.  அதற்கு நான் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண்கள் ஜியாரத் செய்வதை தடுக்கவில்லையா? எனக் கேட்டேன்.  ஆமாம் முன்பு தடுத்திருந்தார்கள்.  பின்பு ஜியாரத் செய்யுமாறு உத்தரவிட்டார்கள் என ஆயிஷா (ரலி) பதில் கூறினார். (நூல் : பைஹகீ 7238)

ஹதீஸ் : அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.  எனது கணவர் ரசூலுல்லாஹ்வும், எனது தந்தை அபூபக்கரும் அடக்கம் செய்யப்பட்டுள்ள வீட்டுக்கு நான் முக்காடு இல்லாமல் செல்வேன்.  பின்பு அவர்களுடன் உமர் (ரலி)வும் அடக்கம் செய்யப்பட்டதும் உமருக்கு வெட்கப்பட்டுக் கொண்டு எனது ஆடையை முழுமையாக கட்டிக் கொண்டு செல்வேன். (நூல் : முஸ்னது அஹ்மது 25263)

ஹதீஸ் : கப்ருக்கருகில் அழுது கொண்டிருக்கிற ஒரு பெண்ணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடந்து சென்ற போது “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” பொறுமையாக இரு! என்றார்கள்.  அதற்கு அந்தப் பெண் “என்னை விட்டு தள்ளிச் சென்று விடு” எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை என்று நாயகத்தை யாரென்று அறியாமலே கூறினாள். அவளிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள் நபியயனக் கூறியதும் அப்பெண், நாயகம் இருக்கும் இடத்திற்கே வந்தார்.  அங்கே காவலாளிகள் யாருமில்லை (நாயகமே) நான் உங்களை யாரெனஅறியவில்லை எனக் கூறினார்.  அப்போது பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் கடைப் பிடிப்பதே என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல் : புகாரி 1283)

பாடம் : மேலே குறிப்பிட்ட நான்கு ஹதீஸ்களிலிருந்தும் ஓர் உண்மை தெரிகிறது.  இறந்து போனவர்களை ஜியாரத் செய்வது ஆண்களைப் போன்று பெண்களுக்கும் சுன்னத்தாகும்.  ஆரம்ப காலத்தில்தான் பெண்கள் ஜியாரத் செய்வது தடுக்கப்பட்டிருந்தது.  பின்னர் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.  ஏனெனில் கப்ருஸ்தானில் நின்று அழுது கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழாதே என்று மட்டும் சொன்னார்கள்.  ஜியாரத் செய்யாதே எனத் தடுக்கவில்லை.

பாடம் : ஜியாரத் என்றால் தரிசிப்பது எனப் பொருள்.  இறந்தவர்களை அவ்வப்போது ஜியாரத் செய்வது நமது மார்க்கத்தில் மிகவும் அவசியமான சுன்னத்தாகும்.   இதன் மூலம் நமக்கு மறுமையின் சிந்தனையும், கப்ருடைய வேதனைகள் பற்றிய அச்சமும் ஏற்படும்.  இதற்கு “கப்ரு வழிபாடு” எனப் பொருள் கூறுவது தவறாகும்.  “இபாதத்” என்றால் தான் வழிபாடு.  “ஜியாரத்” என்றால் தரிசிப்பது என்பதைப் பிரித்தறிய வேண்டும்.  கப்ருஸ்தானில் ஜியாரத்து தான் நடைபெறுமே தவிர இபாதத்து - வழிபாடுகள் நடைபெறுவதில்லை.

ஹதீஸ் : அபூதல்ஹா (ரலி) கூறுகிறார்.  பத்ருப் போர் நடந்த அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குரை´த் தலைவர் (ஈமான் கொள்ளாதவர்)களில் 24 பேர்களின் சடலங்களை பத்ருடைய (பாழடைந்த) கிணற்றில் போடுமாறு உத்தரவிட்டார்கள்.  பத்ருப் போர் முடிந்த மூன்றாம் நாள் அந்த கிணற்றுக்கருகில் போய் நபியவர்கள் நின்று கொண்டு இன்னாரின் மகன் இன்னாரே என அழைத்து எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த நன்மைகளை நாங்கள் பெற்றுக் கொண்டோம்.  உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த (தண்டனைகளை) உண்மையானது தான் என நீங்கள் கண்டு கொண்டீர்களா? எனக் கூறினார்கள்.

உடனே அருகிலிருந்த ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள், யாரசூலல்லாஹ்! உயிரிழந்த சடலங்களிடமா பேசுகிறீர்கள்! எனக் கேட்டார்கள்.  அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுவதை (இறந்து போன) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை என்று கூறினார்கள்.

பாடம் : அதாவது உயிராகவுள்ள உங்களை விட செத்துப்போன அவர்கள் எனது பேச்சை மிகத் தெளிவாக கேட்கிறார்கள் என்று விளக்கம் கூறினார்கள்.  (நூல் : புகாரு 3976/4)    

 

ஹதீஸ் : அப்படியானால் திருக்குர்ஆனில் நபியே, இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறானே (27 - 80) இதற்குரிய விளக்கம் என்னவென்றால் நபியே சலாம் சொல்லுங்கள் என்றால் சொல்லிவிடுங்கள்.  அதை அவர்களுக்கு சேர்த்து வைப்பதும் அதனைக் கேட்கச் செய்வதும் (மனிதர்களாக) உங்களால் முடியாது.  என்னால் தான் முடியும் என்று பொருளாகும்.

புதிய கப்ருகளைத் தோண்டுவது


ஹதீஸ் : நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.  மைய்யிததுக் களுடைய எலும்புகளை உடைப்பது உயிராகவுள்ளவரின் எலும்புகளை உடைப்பது போன்ற குற்றமாகும். (நூல் : அபூதாவூது 3209, முஸ்னது அஹ்மது 23915)

பாடம் : ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக கப்ருகளை தோண்டும் போது புதிய கப்ருகள் இல்லாத இடமாக தேர்வு செய்ய வேண்டும்.  ஏற்கனவே உள்ள மைய்யித்துகளின் எலும்புகள் மக்கிப் போவதற்கு முன்னால் திரும்பவும் அதே இடத்தில் கப்ருகளைத் தோண்டினால் அந்த மைய்யித்துடைய உறுப்புகள் சேதப்படுத்தப்படுகிறது.  அவர் உயிரோடு இருக்கும் போது அவரது உறுப்புகளை வெட்டினால் எவ்வளவு வேதனை இருக்குமோ அதைப் போன்ற வேதனையை அவர் அனுபவிக்கிறார்.

இதனால் கப்ரு வெட்டியவர், அதற்கு உதவியாக இருந்தவர் இதற்கு யோசனை கூறியவர் அனைவரும் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாவர்.  அதைவிட பெரிய வி­யம் உயிருடன் உள்ளவருடைய உறுப்புகளை வெட்டினால் எவ்வளவு பாவமோ அந்தளவு  பாவத்திற்கும் ஆளாக நேரிடும்.  இந்த வி­யத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஹதீஸ் : ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்.  நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு தரைமட்டத்தை விட ஒரு .சாண் அளவுக்கு உயர்த்தப்பட்டிருந்தது.

மற்றொரு அறிவிப்பில் ஒட்டகத்தின் திமிழ்களைப் போல உயர்த்தப்பட்டிருந்ததாக வுள்ளது.

பாடம் : கப்ருகளை தரையோடு தரையாக வைக்காமல் சற்று உயரமாக வைக்க வேண்டும்.  இதனால் பல நன்மைகள் உண்டு.  1. கப்ரின் அடையாளம் இருக்கிறவரை அடுத்தவர் அந்த இடத்தில் கப்ரு தோண்டமாட்டார். 2. மழைக் காலங்களில் மண் கரைந்து உள்வாங்கும் போது பள்ளமாக குழி விழாமல் இது சமன் செய்து கொள்ளும்.  3. அடிக்கடி அடையாளம் தெரிந்து ஜியாரத்து செய்வதற்கு வசதியாக இருக்கும். 4.  கப்ரு இருப்பது தெரிந்தால் தான் அதன் மீது நடந்து செல்ல மாட்டார்கள்.