• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »   மாப்பிள்ளை லெப்பை ஆலிம்


தமிழகத்து வலிமார்கள்.

 

மாப்பிள்ளை லெப்பை ஆலிம்


(கலீபா, எம். சிராஜுத்தீன் பி.எஸ்.ஸி. திருச்சி)


 

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் திருமணம் முடிந்து சில காலம் கழிந்து, கண்ணனூர், தலைச்சேரி, பொன்னானி ஆகிய ஊர்களுக்குச் சென்று, அங்கு வாழ்ந்து வந்த இறைநேசச் செல்வர்களை சந்தித்து நல்லாசி பெற்று வந்தார்கள்.  அதன்பின் காயல்பட்டினம் வந்து அங்கு ஆன்மீக செங்கோல் நடத்தி வந்த தைக்கா காஹிபு அவர்களுடன் சிலகாலம் தங்கி அவர்களிடமும் ஆன்மீக அறிவையும் நல்லாசியையும் பெற்றுக் கொண்டு கீழக்கரைக்குத் திரும்பினார்கள்.

கி.பி. 1835  ஆம் ஆண்டில்  மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் மதுரையில் “தைக்கா ஹார்டுவேர் ஸ்டோர்”  என்னும் பெயரில் இரும்புக்கடையை தொடங்கி வாணிகம் செய்ய ஆரம்பித்தார்கள்.  வாணிபத்தின் பொருட்டு அவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவுக்கும், இலங்கைக்கும் செல்ல வேண்டியிருந்தது.  அப்படி அவர்கள் வியாபார வி­யமாகப் பயணம் மேற்கொண்ட போதிலும் போகுமிடமெல்லாம் மக்களுக்கு ஆன்மீக, மார்க்க அறிவை புகட்டத் தவறியதில்லை.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கைப் பயணம் மேற்கொண்ட சமயம் அங்குள்ள முஸ்லிம்கள் இவர்களின் அறிவின் திறமையால்  ஈர்க்கப்பட்டார்கள்.  இவர்களை அடிக்கடி இலங்கை வந்து மக்களுக்கு அறிவுரை நல்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.  அதன்படி இவர்களும் இலங்கைக்கு தொடர்ந்து போக வேண்டியதாயிற்று.  அப்படிப் போன சமயம் தற்போது நமது உயிரினும் மேலான ய­ய்கு நாயகம் ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹா´மிய்யி நாயகம் அவர்களின் பாட்டனார் செய்யிது முஹம்மது மெளலானா நாயகம் (ரலி) அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றார்கள்.  அந்த நேரத்தில் ஆலிம் அவர்களுக்கு ‘கொன்னை’ இருந்ததால் பேசும்போது திக்கித் திக்கிப் பேசுவார்கள்.  தமது கொன்னை நீங்க வேண்டுமென்று செய்யிது முஹம்மது மெளலானா நாயகம் (ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டார்கள்.  அவர்கள் பொருட்டால் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு ‘கொன்னை’ நீங்கி சுகம் பெற்றார்கள்.  மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் உருவாக்கப்பட்ட பள்ளி, மதரஸா இன்றும் இலங்கையில் வெலிகாமம் என்ற ஊரில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மாமனார் தைக்கா சாஹிபு அவர்களுக்கு இறுதி நேரம் நெருங்கிவிட்ட சமயம் தமக்கு ஆண்பிள்ளை இல்லாததால் மருமகன் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு தாம் பின்பற்றிப் போற்றி வந்த காதிரிய்யா தரீக்காவிற்கு கலீபாவாகவும் அவர் நடத்தி வந்த தைக்காவிற்கு தலைவராகவும் நியமித்து விட்டு ஹிஜ்ரி 1267 இல் (கி.பி. 1851 இல்) இறையடி சேர்ந்து விட்டார்கள்.

இதன்படி தைக்கா சாஹிபு வலீ அவர்கள் நடத்தி வந்த தைக்கா ‘அரூஸிய்யா தைக்கா’ என்ற புதுப் பெயருடன் புது மறுமலர்ச்சி பெற்று விளங்கியது.  நாட்டில் பல பக்கங்களிலிருந்தும், இலங்கை யிலிருந்தும் மாணவர்கள் அங்கு ஓத வரலானார்கள்.  அதன் காரணமாக அதன் மாணவர் எண்ணிக்கை நானூறை எட்டியது.      தைக்காவின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டே அரபியிலும் அரபுத்தமிழிலும் பல நூல்கள் எழுதி மக்களுக்கு அறிவு விருந்து நல்கினார்கள்.  காதிரிய்யா தரீக்காவின் கலீபாவாக இருந்து அதனை நாடெங்கிலும் பரவச் செய்ய அரும்பாடுபட்டார்கள்.

ஒருமுறை இலங்கைக்குச் சென்றால் இரண்டு, மூன்று மாதங்கள் தங்கி அங்கு மார்க்கப்பணி செய்வார்கள்.  இலங்கை அவர்களுக்கு இரண்டாவது தாய்நாடு போலாயிற்று..  உமர் வலீ, காயல் தைக்கா சாஹிபு, கீழக்கரை தைக்கா சாஹிபு ஆகியோரிடம் கல்வி கற்றவர்கள் இலங்கையில் அதிகமானோர் இருந்தனர் அவர்கள் அனைவரும் இவர்களுக்கு நல்லாதரவு நல்கி ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.                                (தொடரும்)