மகளிர் பக்கம் நெடுந்தொடர் ....
நல்ல பென்மணி
( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு - எம். ஆர். எம். முகம்மது முஸ்தபா)
ஓர் ஆண், மற்றோர் ஆணைச் சந்தித்தால், அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அறிய அவரின் வாயைக் கவனிப்பார். ஒரு பெண் மற்றோரு பெண்ணைச் சந்தித்தால், அவள் என்ன அணிந்திருக்கிறாள் என்பதைத் தெரிய அவளின் கழுத்தை, காதை,கையைத் தான் கவனிப்பாள். அவள் கழுத்தில், காதில், கையில் நகை அணிந்திருந்தால், அவளை மதிப்பாள், நகை அணியாதிருந்தால் மதிக்க மாட்டாள்.

இரவலாக நகை வாங்கிப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இப்பொழுது ஏற்பட்டதல்ல, அது எப்பொழுதோ ஏற்பட்டுவிட்டது. அலீ (ரலி) அவர்கள் கலீபாவாக இருந்த போது, அவர்களின் புதல்வி ஒருவர், பொதுநிதியிலிருந்து பொன்னரிய மாலை ஒன்றை பொது நிதிக் காப்பாளரிடமிருந்து மூன்று நாள்களில் திருப்பித் தந்து விடுவதாகக் கூறி, இரவலாகப் பெற்றுத் தம் கழுத்தில் அணிந்து கொண்டார். அதை அலீ (ரலி) அவர்கள் அறிந்ததும், பொது நிதிக் காப்பாளரைக் கண்டித்து விட்டு, தம் புதல்வியிடம் அதனை உடனே கழற்றிப் பொது நிதியில் சேர்த்து விடும்படிக் கூறினர்.
அலீ (ரலி) அவர்களின் புதல்வியை மட்டும் அல்ல, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர் சிலரையும், இந்த நகை ஆசை விடவில்லை. ‘அல்லாஹ் வின் தூதர் அவர்களை மணந்திருக்கிறோம் என்பதைக் கூட மறந்து விட்டு’ அவர்கள், அண்ணல் நபி அவர்களிடம் நகை கேட்டனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ இருப்பவை அனைத்தையும், இருட்டுவதற்கு முன் கொடுத்து விட வேண்டும் எனும் கொள்கையைக் கொண்டவர்கள். அதனால் ஏழைக்கும் ஏழையாய் இருந்தவர்கள். அவர்களிடம் போய் அவர்களின் மனைவியரில் சிலர் நகை கேட்ட போது தான், அல்லாஹ் விடமிருந்து கீழ்க்கண்ட வசனம் இறங்கியது; “நபியே! உம்முடைய மனைவிகளுக்கு நீர் கூறும் : நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டிலுமே)விரும்புகிறவர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு (உரியதை)க் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கூறி) உங்களை நீக்கிவிடுகிறேன். அன்றி, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறுதி வீட்டையும் விரும்புபவர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நன்மையைக் கருதுவோருக்கு மகத்தான கூலியைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறான்”. (33 : 28, 29).
பெண்கள் பெரும்பாலும் நகைகளை விரும்புவது மூன்று காரணங்களுக்காக. ஒன்று, அணிந்து கொள்வதற்கு, இரண்டு அணிந்து காட்டுவதற்கு, மூன்று சேமிப்பதற்கு. அவர்கள் தங்களை அடக்கமாக அலங்கரித்துக் கொள்வதற்குச் சிறு, சிறு துண்டுகளாகவுள்ள நகைகளை அணிந்து கொள்ள அனுமதி உண்டு. அதிக நகைகள் அணிந்து கொள்ள அனுமதியில்லை. இதை அறியாமல் சில பெண்கள் அதிக நகைகளும் வைத்திருப்பார்கள். அவற்றை, செளகரியத்தை பொருட் படுத்தாமல் அள்ளிப் போட்டுக் கொள்வார்கள். இப்படிப் போட்டுக் கொள்வதற்குப் பிரதான காரணம் பிறருக்குக் காட்ட வேண்டும் என்பது. இதனால் உடலில் கனம் ஏறுவதுடன், மனத்திலும் கனம் ஏறிவிடுகிறது. மனத்தில் கனம் ஏறுவது, அதாவது கர்வம் ஏறுவது வெறுக்கத் தக்கதாகும். சேமிப்பு என்ற முறையில் அதிக நகைகள் வைத்தி ருந்தால், அவற்றிற்கு ஜகாத் உண்டு என்பதை மறந்து விடக் கூடாது. நீங்கள் குறைவாகவே நகை அணிந்திருந்தாலும் அடக்கமாகவே உடை அணிந்திருந்தாலும், அந்நியர்கள் முன் வருவதை முடிந்த மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்! உங்கள் வீட்டிற்கு உங்கள் கணவரின் நண்பர்கள் வரலாம். அவர்களுக்கு நீங்கள் விருந்தும் கொடுக்கலாம். அவர்கள் முன் வருவதையும் முடிந்த மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்! இப்படி நடக்காததால் தான் சில குடும்பங்களில் விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. அந்நிய ஆண்களுடன் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒரு பெண் தனித்திருப்பது நல்லதல்ல. “அந்நியர்களான ஓர் ஆணும், பெண்ணும் ஓர் இடத்தில் தனித்திருக்க நேர்ந்தால்,ஷைத்தான் தன் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி அவர்கள் இருவரும் பாவகாரியத்தில் ஈடுபட்டு விடத்தூண்டுகிறான்” என்று நபி மூஸா(அலை) அவர்களும், “ஒரு பெண்ணும், ஓர் ஆணும் தனித்திருப்பார் களாயின், அவர்கள் இருவர் மட்டும் அங்கிருக்கவில்லை. அவர்களின் ஊடே ஷைத்தானும் இருக்கிறான்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றனர்.
(தொடரும்)