திருமறைப் பக்கம்
அழியாமல் காப்பீர்!
- ஆலிம் புலவர்
ஒருவன் உழைத்துச் சம்பாதித்து யாருக்கும் தெரியாமல் ஒரிடத்தில் பணத்தைச் சேமித்து வந்தான். பல ஆண்டுகள் கழித்து போய்ப்பார்த்தால் அது காணாமல் போயிருக்கிறது. மற்றொருவன், வெளிநாடு சென்று வெயில் மழையயனப் பாராமல் வாடிச் சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பி பத்திரமாகக் காத்து வருமாறு கூறினான். பணி ஓய்வுபெற்று ஊர்வந்து பார்த்தால் பணத்தை வீண் விரையம் செய்த குடும்பத்தார் ஏதுமில்லையயன கையை விரித்தனர்.
இன்னுமொருவன், பத்திரமாக வங்கியில் சேமித்து வந்தான். திடீரென அந்த வங்கி திவாலாகிப் போனதாக தகவல் வருகிறது. இந்த மூவரின் நிலை எவ்வாறு இருக்கும்? பரிதாபமாக - இரங்கத்தக்கதாக - இருக்குமல்லவா?
இதேபோலத்தான்..... இம்மையில் தினமும் அமல்கள் செய்து, தொழுது வணங்கி, மறுமைக்குச் சென்று பார்த்தால் ஒருசிலரின் பதிவேடுகள் காலியாக இருக்கும். இறைவா! நான் இன்ன இன்ன நற்செயல்கள் புரிந்தேனே.... அவையயல்லாம் எங்கே?.... என மனிதன் அங்கலாய்ப்பான்.
அப்போது அவனுக்கு அங்கே கிடைக்கும் பதில்.......! உன் நன்மைகளெல்லாம் அழிந்துவிட்டன என்பதாகும். அப்போது அவன் அதிர்ச்சியில் உறைந்து போவான். ஆம்! நற்செயல்கள் செய்து, அந்த நற்செயல்களைத் தொடர்ந்து சில தீயசெயல்கள் செய்யும்போது நன்மைகளெல்லாம் அழிந்து போகின்றன.
அல்லாஹ் தன்அருள் மறையில், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியத்தில், விசுவாசிகளே! நபியவர்களின் குரலுக்கு மேல் உங்கள் குரலை உயர்த்தாதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலருக்கிடையே சப்தமிட்டுக் கொள்வது போல சப்தமிட்டுப் பேசக்கூடாது. (அதனால்) உங்கள் நற்செயல்கள் நீங்கள் அறியாமலே அழிந்து விடும்.(26: 49,2) என்று எச்சரிக்கின்றான்.
இதேபோலத்தான் மனிதர்களின் நற்செயல்கள் அவர்கள் அறியாமலேயே அழிந்து போவதுண்டு. எனவே எச்சரிக்கையாக இருந்து நன்மைகளைப் பாதுகாத்து நஷ்டவாளிகளாகாமல் தப்பவேண்டும். அல்லாஹ் நம் அனைவரின் நல் அமல்களையும் பாதுகாப்பானாக!