அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு
அத்தியாயம் : 81
- இப்னு மீரான் ஹக்கிய்யுல் காதிரிய்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்திரவை இறுதிவரை பின்பற்றிடாது உஹது மலையின் கணவாயிலிருந்த வில் வீரர்கள் சிலர் கீழே இறங்கி வந்தனர். விளைவு எதிரிகளுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. முஸ்லிம் படைகளுக்கு சற்றுப் பின்னடைவும் ஏற்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கூட எவருக்கும் தெரியவில்லை.
“எது நடந்தாலும் நடக்கட்டும் பார்த்து விடுவோம்” என்று வாளை வீசியவர்களாக ஹள்ரத் அலீ (ரலி) அவர்களும் மற்றவர்களும் போர்க்களத்தில் புகுந்தார்கள். தம் உயிரையும் மதிக்காது வீராவேசத்துடன் போரிட்டார்கள். வீரர் அலீ (ரலி) அவர்களின் ‘ஜூல்பிகார்’ என்ற இரட்டை வாளுக்குப் பலியானோரின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சற்று நேரத்தில் போரின் போக்கு முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறி விட்டது.
குறை´க் காபிர்களின் கோங்களான, ‘ஓஉஸ்ஸா’ ‘ஓ ஹூபல்’ என்பன களம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. உஸ்ஸாவும் ஹுபலும் எங்கே வரப் போகிறார்கள்? அவர்களது கோங்களில் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
முஸ்லிம்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் கவனமெல்லாம் அருமை நபிகளார் எங்கே? அண்ணல் நபிகளார் எங்கே? என்று தேடுவதிலேயே இருந்தது. அப்போது கஅப் - இப்னு மாலிக் அன்சாரி (ரலி) அவர்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டுவிட்டார்.
அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்த உத்வேகத்தில் பல எதிரிகளை வெட்டி வீழ்த்திவிட்டார். “ஓ என் இனிய தோழர்களே! நமது அருமை நபிகாளரைக் கண்டேன். அவர்களுக்கு ஓர் ஆபத்தும் இல்லை. ஆம்! தைரியத்துடன் போரிட்டு எதிரிகளை விரட்டுங்கள்” என்பதாக உரக்கக் கூவினார். அந்த இனிய செய்தியைக் கேட்டதும் முஸ்லிம் வீரர்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்குமிடம் நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
இப்படி முஸ்லிம் வீரர்கள் ஓடுவதைக் கண்ட எதிரிகளும் அவர்களைப் பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள். வீரர் அலீ (ரலி) அவர்களின் மின்னலையயாத்த வாள் வீச்சு அவர்களை சிதறடித்தது. இருப்பினும் எதிரிகளில் சிலர் நபிகளாரை நெருங்கி விட்டனர். அப்போது பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஓ என் தோழர்களே! எனக்காக உயிர் கொடுப்பவர்கள் யார்?” என்று கேட்கவும்,
ஸியாத் (ரலி) அவர்கள் ஐந்து அன்சாரிகளுடன் முன்வந்து எதிரிகளைத் தாக்கத் தொடங்கி விட்டார்கள். எதிரிகளின் தாக்குதல் அண்ணலாரை குறிவைத்திருந்ததால் அது பலமாக இருந்தது. பாவம் எதிர்த்து நின்ற ஐந்து அன்சாரிகளும் ஒருவர் பின் ஒருவராக வீரமரணம் அடைந்து விட்டார்கள். ஆம்! அண்ணலாருக்காக உயிர் கொடுத்த உத்தமர்கள் ஆனார்கள்.
ஸியாத் (ரலி) அவர்கள் குற்றுயிரும் குறையுயிருமாக கிடந்து துடித்துக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்ட அண்ணலார்,தோழர்களே! அவரது உடலை எனக்குச் சமீபமாகக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். அதன்படி அவரின் உடல் கொண்டு வரப்பட்டது. துடித்துக் கொண்டிருந்த தோழரின் உடல் மீது அண்ணலாரின் திருக்கரங்கள் பட்டதும் தோழரின் உயிர் உடலை விட்டுப் பிரிந்து போனது.
காபிர்களில் ஒரு ‘பாவி’ வேகமாக சண்டை செய்து கொண்டே வந்து தமது வாளை அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வீசிவிட்டான். அது அண்ணலாரின் கவசத்தில் பட்டு கவசம் உடைந்து விட்டது. உடைபட்ட இரண்டு துண்டுகள் அண்ணலாரின் திருமுகத்தில் குத்திக் கொண்டன சிரசிலும் சிறு காயம் ஏற்பட்டுவிட்டது. அவர்களின் ஒரு பல்லும் ஹீதாகி விட்டது. காயங்களிலிருந்து இரத்தம் கொட்டியது.
அதே வேளையில் நாலாப்பக்கங்களிலிருந்தும் வாட்கள் வீசப்பட்டும், அம்புகள் எறியப்பட்டுக் கொண்டுமிருந்தன. தோழர்கள் அண்ணலாரைச் சுற்றி வளைத்து கேடயம் போல் நின்று கொண்டார்கள். அப்படி நின்ற தோழர் அபூதஜானா (ரலி) அவர்கள் முதுகில் ஏகப்பட்ட அம்புகள் குத்திக் கொண்டிருந்தன. தோழர் தல்ஹா (ரலி) அவர்கள் எதிரிகளின் வாள்களைத் தம் கைகளினால் தடுத்துக் கொண்டிருந் தார்கள்.
அதனால் அவரின் கை வெட்டுண்டு கீழே விழுந்தது. அவர் உடலில் எண்பதிற்கும் மேலான வெட்டுக் காயங்களிலிருந்தன. இது போதாதென்று எதிரிகள் அவர்கள் மீது இரண்டு வாட்களை வீசினார்கள். “பாவம் எப்படி தாங்குவார் அவர்?” மயங்கிக் கீழே சாய்ந்து விட்டார்கள். உடனே ஹளரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் சற்றே உணர்வு திரும்பியதும் அவர் கேட்ட முதல் கேள்வி, “அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?” என்பதுதான்.
“கவலைப்பட வேண்டாம்” அவர்கள் தாம் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்” என்றார்கள். அதைக் கேட்ட தல்ஹா (ரலி) அவர்கள், அல்ஹம்து லில்லாஹ் என்று கூறியவாறு தம் உயிரை விட்டார்கள். தாம் உயிருடன் இருப்பது தம் அருமைத் தோழர்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக அண்ணலார் ஒரு குன்றின் மீது ஏறி நிற்பதற்காக தம் தோழர் சிலருடன் சென்றார்கள்.
அதைப் பார்த்து விட்ட அபூஸூப்யான் தம் சேனைகளை அப்பக்கமாக திருப்பினார். உடனே ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள், தம் தோழர்கள் சிலருடன் அவர்களைத் தாக்கி சிதறடித்து விட்டார்கள். திடீரென எதிரிகளில் ஒருவனான உபை இப்னு கல்க்ஷூப் என்பவன் பெருமானாரின் சமீபம் வந்துவிட்டான்.
(தொடரும்)