• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »  வலிகமாவில் எழுச்சிமிகு விழா!


வரலாற்றுச் சிறப்புமிக்க வலிகமாவில் எழுச்சிமிகு விழா!

புனித வலிகம எழுச்சிமிகு விழாவில் வெளியீடு செய்யப்பட்ட  காமூஸ் என்னும் அறபுத் தமிழ் அகராதியை உருவாக்கிய வரலாற்று நாயகர் அவர்கள் குறித்து, மறைஞானப் பேழை ஆசிரியர், ஆலிம் புலவர், கலீபா. S. ஹுஸைன் முஹம்மது மன்பஈ அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....


மக்கா மாநகரிலே அவதாரஞ் செய்தருளிய எம்பெருமானார் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச பாரம்பரிய மதனிலே முப்பத்து மூன்றாம் அருந்தவத் தோன்றலாயும் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானிய் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச பாரம்பரியம் தன்னிலே இருபதாம் தோன்றலாயும் மாதா வழியிலே ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து முப்பத்திரண்டாவது தோன்றலாயும், முஹிய்யுத்தீன் ஆண்டவர்களிலிருந்து பத்தொன்பதாவது தோன்றலாயும், அருந்தவப் பெரியார், குருநாதர், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹா´மிய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், திக்குவல்லை என்னும் ஊரிலே திருவவதாரஞ் செய்தருளினார்கள்.

ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் தவமிகு தந்தையார் ஆத்ம ஞானச் சுடர் அல் - ஆரிபுஸ் ஸமதானிய் வல் வலிய்யுல் வஹ்தானிய் வல் கெளதுல் பர்தானிய் அஷ்ய­ய்கு அஸ்ஸய்யித் முஹம்மத் மெளலானல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்  நாயகம் (ரலி) ஆவார்கள். ஜமாலிய்யா மெளலானா  நாயகம்(  ரலி) அவர்களின் அன்புத்தாயார் ஸய்யிதா ஆபிதா ஆவார்கள்.

ஜமாலிய்யா மெளலானா  நாயகம் (ரலி) அவர்கள் அருண்மிகு நகராம் பக்தாத்தனிலே உள்ள பாபுஷ் ய­ய்க்  என்ற இடத்தில் பைதுஷ் ஷிரபாஉ என்ற இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பிறை இரண்டு முஹர்ரம் மாதம் ஹிஜ்ரி 1264 இல் திருவவதாரஞ் செய்தருளினார்கள். 

ஜமாலிய்யா மெளலானா நாயகம் அவர்கள், தங்கள் மாமனாரின் மகளாரைத் திருமணஞ் செய்தருளினார்கள். அவர்களுக்கு ஆங்கு அவதரித்த அருந்தவப் புதல்வரே ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானா அல் ஹா´மிய் ஆவார்கள். ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் தாயார் அஸ்ஸய்யிதா உம்முஹபீபா கண்ணே ஆவார்கள்.

ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானா அல் - ஹா´மிய் நாயகம் அவர்கள் மாத்தறையைச் சேர்ந்த திருப்பதியாம் திக்குவல்லை என்னும் ஊரிலே சனிக்கிழமை பின்னேரம் இஷாப்பொழுதில் ஞாயிறு இரவு ­ஃபான் பிறை இருபத்தேழு ஹிஜ்ரி ஆண்டு 1317 இல் ஆங்கில வருடம் 1899 டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம்  திகதி தமிழ் வருடம் விகாரி, மார்கழி மாதம் திருவவதாரஞ் செய்தருளினார்கள்.

அருமை அன்னையாரின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த போது கற்ற நன்னடத்தைகளும், ஒழுக்க நெறிகளும். பச்சைமரத்தாணி போல் உள்ளத்துட் பதிந்திருந்தமையால் என்றும் ஒழுக்க நெறி பிறழ்ந்திலர். தம் தாயை இழந்தமையால் அவர்கள் இந்தியா செல்லவாயினர். இந்தியா சென்றமையால் அருங்கலைத் தேர்ச்சியும், பெறற்கரிய பேறும் பெறலாயினர்.

இதனாலேயே, மெளலானா நாயகம் வாழ்ந்து வரும் நாட்களிலே  “எம் தாயாரை சிறு வயதிலேயே நாம் இழந்தமை எமக்கு ஹக்குச் செய்த பேருபகாரமும், அதன் அருளுமாகும்”என்று கூறித் தம்மை வளர்த்து வந்த  ஹக்குக்கு இடைக்கிடை நன்றி பாராட்டுவார்கள். இஃது அவர்களின் சிறப்புக்குரிய நூலான “கலிமா விருட்சக் கனிந்த கனி”என்னும் நூலின் ஐம்பதாவது பக்கத்தில் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளதையும் கண்டுகொள்ளவியலும். அது:

“ஹக்குத் தன்னளவில் என்னை இழுத்துக் கொள்ளவும் என்மீது அதன் செல்வத்தைச் சம்பூரணமாக்கவும் எனது பத்துவயதிலேயே என் அருமைத் தாயார்அவர்கள் ஹக்களவில் சேர்ந்தமை அல்லாஹ் எமக்குச் செய்த மிகப் பெரிய உபகாரமாயிருந்தது. அதனால் ஹக்கல்லாத ஆதரவாளரை நான் காணாதவரை.(எனக்குச் சுபீட்சம் அருளினான்)”

தமது அறபுக் கல்வியை ஆரம்பிக்கும் நோக்கமாக மேலப்பாளையத்திலே இருந்த அரபிக் கலைக் கருவூலமாய் அமைந்திருந்த “மஃநல் அஸ்பியாஉ” என்ற கசடறக் கற்பித்த அறபிக்கலைக்  கூடத்திற்குச் சென்றார்கள்.  அக்கலைக் கூடத்தின் அதிபராய்ச் செயலாற்றி வந்தவர்கள்

“அஹ்மத்அலி நஹ்வில்புலி” என்ற அரும்பெரும் அறபிக்கடலும் அரிய அறபுக் கவிஞரும் மாதிஹூஸ்ஸிபுதைன் என்ற புகழ்ப் பெயர் கொண்டவர்களுமான ஆரிப்பில்லாஹ்வலியுல்லாஹ், மேன்மைமிகு மாப்பிள்ளை ஆலிம் (ரலி) அவர்களால் அழைக்கப்பட்டவர்களுமாகிய கலைச்சிகரம் என்று கருதப்பட்ட அல்ஹாஜ் ஹாபிஸ் முப்தீ அஹ்மத் அலிய், அல்ஆலிமுல் பாஸிலுல் அஉலா  என்றவர்களாவர்.

மெளலானா நாயகம் அவர்கள்  அக்கலைக் கூடத்திற்குச் சேரச் சென்ற அக்காலை, அதிபர் அவர்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றத் திருப்பதியாம் திருக்கா மாநகர் சென்றிருந்தார்கள். அப்போது அக்கலைக்கூடத்திலே பதில் அதிபராகக் கடமையாற்றி வந்தவர்கள் யூஸுப் வலியுல்லாஹ் என்றவர்கள். அவர்கள்  மெய்ஞான அறிவிலும் தத்துவ ஞானத்திலும் மற்றும் கலைகளிலும் சிறந்து விளங்கியவர்கள்.

மெளலானா நாயகம் அவர்கள் யூஸுப் வலியுல்லாஹ் அவர்களிடத்துச் சென்று தம்மையும் இக்கலைக் கூடத்திற்  சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்போது யூஸுப் வலியுல்லாஹ் அவர்கள் “நீங்கள் ரஸூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உங்கள் தந்தையார்  மிகச் சிறந்த செய்காகவுமிருக்கின்றார்கள். ஸய்யித்மாருக்குக் கல்வி அவசிய மில்லை; கல்வியும் வராது; உங்கள் தந்தையார் அவர்களின் சிறப்பே போதும் என்று கூறிக் கையை விரித்து விட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறக் காரணம் யாதெனில் மெளலானா என்ற பெயருடன் கல்விகற்கச் சென்றோரின் ஒழுக்கக் கேடேயாகும். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த யூஸுப் வலியுல்லாஹ் அவர்களின் தகப்பனார் மீரா முஹிய்யுத்தீன்ஆலிம் அவர்கள் மகனை “யூஸுப்” என்றழைத்து, “பொது மக்களுக்குக் கல்வி கற்பிப்பது அவசியமாயின் ஸய்யித்மாருக்குக் கல்வி கற்பிப்பது அவசியத்திலும் மிக அவசியமாகும்.

ஆதலால், உமக்குக் கல்வி கற்பிக்க முடியாதெனின் என்னிடம் அவர்களை அனுப்பு. யான் அவர்களுக்குக் கல்வி புகட்டுவேன்”, என்று  உருக்கமாகத் தந்தை தமக்குக் கூறியதனைச் செவிமடுத்த யூஸுப் வலியுல்லாஹ் தாமதமின்றியே மெளலானா அவர்களைக் கலைக் கூடத்திற் சேர்த்துக் கொண்டார்கள்.

மக்கா நகர் சென்று ஹஜ்ஜூக் கடமையைச் சிறப்புறச் செய்துமுடித்து அஹ்மத் அலி ஆலிம் அவர்கள் தாய்நாடு திரும்பினார்கள். மத்ரஸாவிலே மெளலானா நாயகம் அவர்களைக் கண்டவர்கள் தம்பக்கம் அழைத்து “பாதையிற் செல்லும் போதெல்லாம் நீங்கள் உங்கள் பாதக்குறடையே பார்த்த வண்ணம் செல்ல வேண்டும்” என்று கூறி வேறு ஒழுக்க முறைகளையும் அவர்களுக்கெடுத்தியம்பினார்கள்.

அதன்படியே மெளலானா நாயகம் அவர்களும் நடந்து வந்தார்கள். அவ்வண்ணமே அவர்கள் அக்கலைக் கூடத்திலிருக்கும் போதெல்லாம் பெண்களையே தாம் பார்க்கவில்லை என்று அவர்கள் வாழ்நாட்களில் கூறிக் கொள்வார்கள். மேலைப்பாளையத்தில் ஓரில்லத்தில் உணவருந்தி வந்த நாயகம் அவர்கள், அவர்களுக்கு வழக்கமாக உணவு பரிமாற வந்த பெண்மணியைக் கூட ஏறிட்டும் பார்த்தார்களில்லை.

அவர்கள் கல்வி கற்கும் காலத்தில் உணவருந்தி வந்த இல்லத்தவர் ஏ.சாஹுல் ஹமீத் லெப்பை அவர்கள் நிறைய ஆதரவு வழங்கி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மெளலானா நாயகம் அவர்கள் தங்கள் பதினேழாம் வயதிலே  அறபியில் திறன்படக் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.  இச்சிறு வயதிலேயே  “மாதிஹுர்  ரஸூல்” என்றும் “ஷாஇர்” என்றும் புகழ்ப்பெயர் பெற்றார்கள். இச்சிறு வயதிலேயே“பத்வா”என்னும் அரும்பெரும் மார்க்கத் தீர்ப்புகளும் வழங்கினார்கள்.

மேலைப்பாளையத்திலே கல்வி கற்று வருமக்காலை தங்கள் அதிபராகவிருந்த அல்ஹாஜ்ஜுல் ஹரமைன். பஹ்ருல் உலூம், ஹாபிளுல் குர்ஆன், அல் ஆலிமுல் பாளில் + அன்னஹ்விய்யல் மாஹிர், அஹ்மத் அலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இறையடியயய்திய போது மெளலானா நாயகம் அவர்கள் உளம் நெகிழ்ந்து“இபுதிதாஉல் மகானிம் பீ மிதுஹதி அஹ்மத் அலிய் தில் மகாரிம்”என்னும் தலைப்பின் கீழ் ஓர் இரங்கற்பா

அவர்கள்  மீது அறபியிற் பாடி அப்பாவினைத் தாம் ஆரம்பக்கல்வி கற்கச் சென்றபோது, ஸய்யித் மாருக்குக் கல்வி அவசியமில்லை, கல்வி வராது, என்று கூறிய யூஸுப் வலிய்யுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்துக் கொடுத்தார்கள். கவிதைக் கோவையினைப் பார்த்த அவர்கள் பேராச்சரியமும், பேருவகையுங் கொண்டு அதனைக் கண்களில் வைத்து ஒற்றி “உங்களுக்கோ யான் கல்வி வராது என்று கூறினேன்” என்று கைசேதப்பட்டார்கள். இப்பா, “ஹம்தன்” எனத் தொடங்குகின்றது.

இதில் ஐம்பத்தாறு அடிகள் உள. மேலைப்பாளையத்திலே கற்றுத்தேர்ந்த மெளலானா நாயகம் அவர்கள் சென்னையை அடுத்த பளவரக்காடு என்னும் ஊரிலே  வாழ்ந்துவந்த கலைக்களஞ்சியமான முஹம்மத் அலவிய்யுல் ஜமீலிய் அவர்களிடத்திலே இலக்கிய அறிவு களையும் ஹிகம் என்னும் தத்துவ ஞானக் கலைகளையும் மேலும் கற்றுத் தேர்ந்தார்கள். தங்கள் ஆசிரியரான இவர்களைப் பற்றியும் புகழ் பாடியுள்ளார்கள்.

சென்னையிலே உள்ள பெரம்பூர் மத்ரஸத்துல் ஜமாலிய்யதுல் குல்லிய்யா எனும் மாபெரும் அறபிக் கலாசாலையிலே முதற்றர மெளலவி பாஸில்  என்ற கெளரவப் பட்டம் சூட்டப் பட்டார்கள். தென்னிந்தியாவிலேயே உள்ள பெரும் கலைக் கூடங்களிலே தான் கல்வி பயின்றார்கள் என்பது  இவண் குறிப்பிடற்பாலது.

தாம் கல்வி கற்ற கலைக் கூடங்களிலே தாமும் தம் ஆசிரியர்களைப் போன்ற சிறந்த ஆசிரியராகக் கடமை புரிந்தார்கள். பின்னர் லாகூர்ப் பல்கலைக் கழகம் என விளங்கிய இஸ்லாமியக் கல்லூரிக்குச் சென்றார்கள். அப்பல்கலைக் கழகத்துக்குச் சென்ற மெளலானா நாயகம் அவர்களை ஆங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பரீட்சித்தார்கள். தாமறிந்த தென்னாட்டு அறபிப் புலவர் ஒருவரால் இயற்றப்பட்ட ஒரு கவிதையைப் பாடுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டார்கள்.

அக்கணமே, தமக்கு மனனமான ஓர் அறபுக் கவிதையைப் பாடலானார்கள். பேராசிரியர், இது யார் பாடிய பாடல் என்று வினவினார். அப்போது அருமை நாயகம் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட பேரிலக்கியம். இது வித்ரிய்யாவின் “தக்மீஸ்” (ஈரடிகளை ஐந்தடிகளாக்கிப் பாடிய) கவிதையில் உள்ள கவிதைத் தொடர் ஆகும்.

இஃது அறபுக் கல்விக்கும் இஸ்லாமிய ­ரீஅத்திற்கும் வித்திட்ட கவின்மிகு காயல் நகரிலே  பிறந்து தேமதுர ஞானந்தனை அள்ளிப் பருகவளித்த கீழக்கரை யயன்னும் ஊரிலே மறைந்து விளங்கும் கல்வியூற்றான, அறபுக் கல்விக்குத் தந்தையான,ரீஅத்தின் புலியயன விளங்கிய அஷ்ய­ய்கு அல் வலிய்யுல் காமில் ஸதக்கத்துல்லாஹில் காஹிரிய் (ரலி) என்றவர்கள் பாடிய பேரருட் கவிதை யயன்றார்கள்.

அவ்வாறாயின், + இவ்வாறு பாடக்கூடிய  அறபுக் கவிஞர்கள், இப்போது தென்னாட்டில் உளரோ? வென கேட்க. மெளலானா நாயகம் அவர்கள் ஆமெனக் கூறித் தரள வாரம் போல் கோத்திலங்கும் எழில் மிகுமொரு கவிதையைச் சரளமாகப் பாடி முடித்தார்கள். ஆச்சரியமெய்திய பேராசிரியர், இது யார் பாடிய கவிதை என்று வினவவே “இஃது உங்கள் முன் நிற்கின்ற யானே பாடினேன்” என்ற பொருட்பட ஒரு கவிதை பாடினார்கள்.

அக்கணமே, பேராசிரியர், அறபு இலக்கண விலக்கியங்களில் மெளலானா நாயகம் அவர்கள் பெற்றுள்ள பேரருளை வியந்து போற்றி “நீங்கள் இங்குக் கற்க வேண்டிய கல்வி எதுவுமில்லை; ஆயினும் மதவாராய்ச்சிக்கென விடப்படுள்ள பகுதியிலே சேர்ந்து மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும் வேறு ஆராய்ச்சிகளிலும். தருக்கங்களிலும்  ஈடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அதன்படியே ஆங்கண் ஒரு வருட காலம் தங்கி ஆய்வுகள் செய்து  சிறந்த தேர்ச்சி பெற்றமையின் “லாகூர் மெளலவி பாஸில்” என்ற சிறப்புப் பட்டமும் அவர்கள் பெற்றார்கள்.

லாகூர் இஸ்லாமிய்யா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் அங்குக் கற்பித்த பேராசிரியர்கள் மெளலானா நாயகம் அவர்களை “தாருல் உலூம்” என வழைக்கப்படும்  “தேவ்பந்த்” பல்கலைக் கழகத்திற்குச் சென்று  “உஸூல்பிக்ஹு”  “உஸூல் ஹதீஸ்”, “தப்ஸீர்”“நாஸிஃ”, “மன்ஸூஃ”, “அஸ்பாபுன் நுதூல்”, “தஜ்வீத்”, “பல்ஸபா”, “மன்திக்”, “இல்முல் பதீஉ”,முதலானவைகளையும்  “உஸூல் புரூஉ”, களுடைய அறிவையும்  “மன்கூல் மஉகூ”  லுடைய அறிவுகளையும் கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டமைக் கிணங்க தேவ்பந்த் பல்கலைக் கழகத்தில் 1918 ஆம் ஆண்டு தங்களின் வயது பதினெட்டில் சேர்ந்தார்கள்.

இப்படிப்பட்ட மகத்துவமும் கீர்த்தியும் பெற்ற மகான் குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மெளலானா(ரலி) அவர்கள் அருளிய மாபெரும் பொக்கி­ங்களில் ஒன்று தான் காமூஸ்  ­ரீஃபாகும். அதனை இப்புனித விழாவில் வெளியீடு செய்வதும், அதுவும் யாஸீன் நாயகம் அவர்களின் திருமகனார் அவர்களின் திருக்கரங்களால் வெளியீடு   செய்வதும்- இப்பெருவிழாவில் நாம் அனைவரும் கலந்துகொள்வதும் பெரும் பாக்கியமாகும்.

காமூஸ் அறபுத்தமிழ் அகராதியை அளித்தமைக்கும்- அன்னவர்களின் ஞானப் பொக்கி­மாக கலீல் நாதரை நமக்கு ஞானகுருவாக அளித்தமைக்கும் குத்புல் ஃபரீத் யாஸீன் நாயகம் (ரலி) அவர்களுக்கு இக்கணத்தில் நன்றியை உரித்தாக்கி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

உரைத் தொகுப்பு : ஆஷிகுர் கலீல் B.Com திருச்சி.

(குறிப்பு: யாஸீன் நாயகர் (ரலி) வரலாற்று நூலிலிருந்து உரை அமைந்திருந்ததால் அந்நூலின் வாசகங்களே உரையாக்கப் பட்டுள்ளது.)