ஸலவாத்தின் மகிமை கேளீர்
உரைத் தொகுப்பு : ஆஷிகுர் கலீல் B.Com திருச்சி
அபுல் ஹசன் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறிய சம்பவம் ஒன்று வருமாறு :-
நான் (அபுல் ஹசன்), ஒரு தடவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவிற் கண்டு நாயகமே! இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தமது கிதாபுர் ரிசாலாவில் எழுதியுள்ள ஸலவாத்திற்குத் தங்கள் புறத்திலிருந்து என்ன கைமாறு கொடுக்கப்பட்டது என வினவினேன். “விசாரணைக்காக மறுமையில் அவர் நிறுத்தி வைக்கப்பட மாட்டார்” என்று அன்னார் விடையளித்தனர்.
இப்னு பன்னான் இஸ்பஹானீ (ரஹ்), நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைக் கனவிற் கண்டு,நாயகமே! இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் உங்கள் சிறிய தந்தையின் வமிச வழியாயிற்றே! (அதாவது ஹா´முடைய மகன் அப்து யசீதின் கொடி வழியைச் சேர்ந்தவராயிற்றே) அவருக்காகத் தாங்கள் ஏதாவதொரு விசேடச் சலுகை யளித்திருக்கிறீர்களா?என வினவ, ஆம்! கியாமத் நாளில் அவர் விசாரணைக்காக நிறுத்தப்படக் கூடாது என துஆச் செய்திருக்கிறேன் என்றனர்.
எந்த அமலின் காரணமாக அவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டது என வினவினேன். அவர் என்மீது கூறிய ஸலவாத்தின் காரணமாக அச்சலுகை அவருக்கு வழங்கப்பட்டது. என்றார்கள்.
அபுல் காசிம் மரூஸீ (ரஹ்) கூறுவதாவது :-
நானும் எனது தந்தையவர்களும் இரவில் ஹதீது நூலொன்றை ஒத்துப் பார்த்துக் கொண்டிருப்போம். ஓரிரவில் நாங்கள் ஒத்துப் பார்க்கும் இடத்திலிருந்து ஒளித்துண்டொன்று எழும்பி வானத்தை முட்டி நிற்கக் கண்டேன். யாரோவொருவர் அது என்ன தூண்? என வினவினார். அதற்கு ‘அவர்கள் இருவரும் ஒத்துப் பார்க்கும் போது ஓதிய ஸலவாத்துக்கள்’ என்று பதிலளிக்கப்பட்டது.
அபூ இஸ்ஹாக் நஹ்ல் (ரஹ்) எழுதும் ஹதீது நூல்களில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் வரும் இடங்களில் ‘காலந் நபிய்யு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம தஸ்லீமா’ என்று எழுதி வரலானார். ஒருநாள் கனவில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர் எழுதிய கிதாபைக் கரத்தில் வைத்துப் பார்த்துக்கொண்டு இந்த ‘தஸ்லீமா’ என்னும் வார்த்தையைச் சேர்த்திருப்பது நேர்த்தியாயிருக்கிறது எனக்கூறக் கண்டார்.
இப்படிப்பட்ட அநேக ஹதீதுகளைப் பெரியார்கள் ஸலவாத்தினால் பெற்ற பல மகிமைகளை அல்லாமா ஸகாவீ (ரஹ்) எழுதியுள்ளார்கள். இப்னு அஜீனா (ரஹ்) என்னும் பெரியார் ஹதீதுகளைப் பதிவு செய்து கொண்டிருக்கும் போது அவசரத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமங்களை எழுதும்போது ஸலவாத்து விடுபட்டு விட்டது.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் கனவிற் தோன்றி, அபூ அம்ரு தப்ரீ போல நீர் ஏன் எனது நாமத்தோடு ஸலவாத்தை எழுதுவதில்லை? என்று கேட்டனர். அவர் உடனே கண் விழித்து விட்டார். அப்பொழுது அவர் மனதை ஓர் அச்சம் பற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுதே இனிமேல் ஸலவாத்தை எழுதி வருவதாகத் தம் மனதில் முடிவு கட்டிக் கொண்டார்.
அபுல் ஹசன் அலி (ரஹ்) என்பவரிடம் அபூ தாஹிர் (ரஹ்) என்பார் ஹதீதுகள் எழுதப்பட்ட சில ஏடுகளைக் கொடுத்தார். அதில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் காணப்படும் இடங்களிலெல்லாம் ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம தஸ்லீமன் கதீரன் கதீரா’ என்று எழுதப்பட்டிருந்தது. நீர் ஏன் இவ்வாறு எழுதினீர் என அவரிடம் வினவினார்.
அதற்கு அவர் ‘நான் எனது வாலிப காலத்தில் ஹதீதுகள் பதிவு செய்யும்போது ஸலவாத்து எழுதுவதில்லை. ஒருநாள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சொப்பனத்திற் கண்டு ஸலாம் கூறினேன். அன்னார் எனக்குப் பிரத்தி சொல்லாது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். நான் அன்னார் திரும்பிய பக்கமாகச் சென்று சலாம் கூறினேன். அப்பொழுதும் அன்னார் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். மீண்டும் நான் அன்னார் திரும்பிய பக்கமாகச் சென்று திருவதனத்தை நோக்கி, நாயகமே! இந்த அடியான் ஸலாமிற்குப் பிரத்தி சொல்லாதிருக்கக் காரணமென்ன? என வினவினேன்.
அதற்கு அன்னார், ‘நீர் எழுதியுள்ள ஹதீதுத் திரட்டில் எனது நாமத்துடன் ஸலவாத்தை எழுதாம லிருந்ததே காரணம்’ என்றனர். அன்று முதல் நான் அன்னாரின் திருநாமம் தோறும் மேற்கண்ட ஸலவாத்தை எழுதி வருகிறேன்’ என்றார்.
அபூ ஹப்சு சமர்க்கந்நீ (ரஹ்) அறிவிப்பது வருமாறு :-
பல்குப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய பணக்காரர். அவருக்கு இரண்டு மக்கள் இருந்தனர். அவர் இறந்த பின் அவர் சொத்தை அம்மக்கள் இருவரும் பாகித்துக் கொண்டனர். அவரிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகள் மூன்று இருந்தன.
அவைகளில் ஆளுக்கு ஒன்றையயடுத்துக் கொண்டு மீதமுள்ள ஒரு முடியை இரண்டு துண்டாக நறுக்கி ஆளுக்கொன்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த மகன் வாதித்தார். இளைய மகன் அதற்கு இணங்காது தன்பாகத்தில் வரும் சொத்து அனைத்தையும் அண்ணணிடம் ஒப்படைத்துவிட்டு அந்த மூன்று முடிகளை மட்டும் பெற்றுக் கொண்டார்.
அவை மூன்றையும் அவர் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அடிக்கடி அவைகளை எடுத்துத் தரிசித்துக்கொண்டு ஸலவாத்தை ஓதி வரலானார். சில காலத்திற்குள் அந்த மூத்த சகோதரனுடைய சொத்தெல்லாம் போய் அவர் பரம ஏழையாகி விட்டார், இளைய சகோதரரோ பெரும் பணக்காரராக வாழ்ந்து மரண மடைந்தார்.
பெரியார் ஒருவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவிற் கண்டார். அவரை அன்னார் ‘யாருக்காவது ஏதாவது தேவையிருந்தால் அந்த இளையவருடைய கப்ரடியிலிருந்து துஆக் கேட்கட்டும்’ என்று கூறினர். இந்த வரலாறு ‘நுஸ்ஹத்துல் மஸாலிஸி’லும் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. எனினும் அதில் கீழ்க்கண்ட வியம் அதிகமாகக் காணப்படுகிறது.
அதாவது பெரிய சகோதரர் ஏழையாய் போனபின் ஒருநாள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவிற் கண்டு தன் வறுமை பற்றி முறையிட்டார். அப்பொழுது அன்னார் அவரை நோக்கி ‘ஏ துர்ப்பாக்கியனே! நீ எனது திருமுடிகளை அலட்சியமாய் மதித்தாய். உனது தம்பி அதைப் பெற்றுக் கொண்டார்.
அதைப் பார்த்துப் பார்த்து அவர் என் மீது ஸலவாத்துச் சொல்கிறார். ஆதலால் அல்லாஹு தஆலா அவருக்கு ஈருலக பாக்கியங்களையும் அளித்திருக்கிறான் என்றார்கள். அவர் கண் விழித்தவுடனே அன்று அவருடைய தம்பியின் ஊழியக் காரராகிக் கொண்டார். மாதொருத்தி, இமாம் ஹசன் பசரீ ரஹ்) அவர்களிடம் வந்து எனது புதல்வி யயாருத்தி இறந்து விட்டாள். அவளைக் கனவிற் காண ஆசைப்படுகிறேன் என்றாள்.
அப்பொழுது ஹசன் பசரீ (ரஹ்) அவர்கள் அவளை நோக்கி, ‘இஷாத் தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்து நபில் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்திற்குப் பின் ‘அல்ஹாக்குமுத் தகாதுரு’ சூராவை ஒவ்வொரு தடவை ஓத வேண்டும். அவ்வாறு தொழுது முடிந்தவுடனே படுத்துக் கொண்டு நித்திரை வரும் வரை ஸலவாத்து ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.
உன் மகளைக் காண்பாய்’ என்று கூறியனுப்பினார்கள். அவள் சென்று அவ்வாறு செய்யவே அவளுடைய மகள் கனவில் தென்பட்டாள். அவள் கடினமான தண்டனைக்குள்ளாயிருக்கிறாள். தார் தைலத்தாலான சட்டை அணிவிக்கப் பட்டிருக்கிறாள், அவளுடைய இரு கைகள் விலங்கிடப் பட்டிருக்கிறாள். கால்களில் அக்கினி விலங்கு போடப்பட்டிருக்கிறது.
அவ்வாறு கண்ட அவள் காலையில் ஹஸன் பசரீ (ரஹ்) அவர்களிடம் வந்து முறையிட்டாள். ‘அவள் பெயரால் ஏதாவது சதக்கா கொடுத்தால் அதன் புண்ணியத்தால் ஆண்டவன் அவளுக்கு மன்னிப்பு அளிக்கக் கூடும் என்று இமாம் ஹசன் பசரீ (ரஹ்) கூறியனுப்பினர்.
மறுநாளிரவு, இமாம் அவர்கள் ஒரு கனவில் சொர்க்கத்தின் ஒரு தோட்டத்தில் உயரமான ஆசனம் ஒன்று போடப்பட்டு அதில் அழகிய பெண்ணொருத்தி அமர்ந்திருக்கக் கண்டார். அவள் தலையில் கிரீடம் ஒன்றிருக்கிறது. அவள் இமாம் அவர்களை நோக்கி ‘ஹஸனே! நான் யாரெனத் தெரிந்தீரா?’ என்றாள்.
அவர் தெரியவில்லை என்றார். ‘எவளுக்கு இஷாவிற்குப்பிறகு தூக்கம் வரும் வரை ஸலவாத்து ஓதும்படி நீர் கூறினீரோ அவளுடைய மகளே நான்’ என்றாள். உன் நிலை முற்றிலும் மோசமாக இருப்பதாக வல்லவா உனது தாய் கூறினாள்? என இமாம் அவர்கள் கேட்க, எனது நிலை எனது தாய் கூறியபடிதான் இருந்தது என்று அவள் கூற, அப்படியாயின் நீ இந்தப் பதவியை எவ்வாறு பெற்றுக் கொண்டாய்? என வினவினர்.
அப்பொழுது அவள் ‘நாங்கள் எழுபதாயிரம் பேர் இதே தண்டனைக்கு இலக்காயிருந்தோம். எங்கள் கப்ருகளின் பக்கமாகப் பெரியார் ஒருவர் வந்து ஒரு தடவை ஸலவாத்தை ஓதி அதன் பலனை எங்களுக்குச் சேர்த்து வைத்தார். அல்லாஹு தஆலா அவருடைய ஸலவாத்தை ஏற்றுக் கொண்டான். அந்தப் புண்ணியத்தால் நாங்கள் அந்தத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றோம். அப்பெரியாரின் புண்ணிய வசத்தால் எங்களுக்கு இப்பதவி கிடைத்தது என்றாள்.
ஒரு பெண் பிள்ளைக்கு ஒரு மகனிருந்தார். அவர் பெரிய துஷ்டர். அவள் அவரைத் திருத்த எவ்வளவோ முயன்றும் பலன் கிடைக்கவில்லை. கடைசியில் தவ்பாச் செய்து திருந்தாமலே அவர் இறந்து விட்டார். அவர் அந்த நிலையில் மரித்தது பற்றி அவளுக்கு எவ்வளவோ வருத்தம். அவரைக் கனவிற் காண வேண்டுமென்பதே அவள் ஆசை, அதன்படி ஒருநாள் அவரைக் கனவிற் கண்டாள்.
அவர் பெரிய தண்டனைக்கு ஆளாயிருக்கிறார். அதைக் கண்டு அவள் மனவேதனை மேலும் அதிகரித்தது. சில காலத்திற்குப்பின் அவரை மீண்டும் கனவிற் கண்டார். அவர் மிக நல்ல நிலையில் ஆனந்தமாக இருக்கின்றார். அதைக் கண்ட தாய் அவரை நோக்கி, உனது நிலையில் இந்த மாறுதல் ஏற்படக் காரணமென்ன? என வினவினாள். அதற்கு அவர் ‘பெரிய பாவியயாருவர் நான் அடங்கியிருக்கும் கப்ருஸ்தானுக்கு வந்தார்.
கப்ருகளைப் பார்த்தவுடனே அவருக்கு உணர்ச்சியுண்டாகி அழுது தவ்பாச் செய்து மனந்திரும்பினார். பின்னர் குர்ஆனிற் சில வாக்கியங்களையும் இருபது ஸலவாத்துக்களையும் ஓதி எங்களுக்கு அதன் பலன் கிடைக்கச் செய்தார். அந்தப் பலனிலிருந்து எனக்குக் கிடைத்த பாகத்தையே இப்பொழுது நீ காண்கிறாய்! எனது அன்னையே! நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது உள்ளத்திற்கு ஒளியளிக்கும்; பாபங்களுக்கும் மரித்தவர்களுக்கும் ஒரு ரஹ்மத்தாகும் என்றார்.
கஃபுல் அஹ்பார் (ரலி) அவர்கள் தவ்றாத்து வேத நிபுணர். அவர்கள் கூறுவதாவது :
அல்லாஹுதஆலா மூசா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி, மூசாவே! என்னைப் புகழ்ந்து போற்றும் மனிதர் சிலர் இவ்வுலகில் இல்லையாயின் நான் வானத்திலிருந்து ஒரு ‘துளி மழையைக் கூட இறக்கி வைக்க மாட்டேன், பூமியிலிருந்து ஒரு விதையைக் கூட முளைக்கச் செய்ய மாட்டேன் எனக் கூறிவிட்டு, மூசாவே! உமது நாவிடம் பேச்சும், உள்ளத்திடம் உணர்ச்சியும், உடலிடம் உயிரும், கண்ணிடம் பார்வையும், நெருங்கியிருப்பதை விட அதிகமாக நான் உம்மை நெருங்கியிருக்க விரும்புகிறீரா? எனக் கேட்டான். அதற்கு அன்னார் ஆம்! ஆண்டவனே! அப்படித்தான் விரும்புகிறேன் என்றனர்.
உடனே அவன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது அதிகமதிகம் ஸலவாத்தை ஓதிக் கொள்வீர்!” என்றான். முஹம்மது இப்னு சயீது (ரஹ்) அவர்கள் இரவில் நித்திரைக்குச் செல்லும் போது ஸலவாத்து ஓதுவது வழக்கம். ஓரிரவு வழக்கம் போல் அவர் மேல் மாடியில் சென்று ஸலவாத்தை ஓதிவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர் கனவு ஒன்று கண்டார்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மேல் மாடியின் வாயில் வழியாக உள்ளே நுழைந்துவந்தனர். அதனால் அந்த மாடி முழுவதும் ஒளிமயமாகப் பிரகாசிக்கலாயிற்று. அன்னார் நேரே அவரை நோக்கிச் சென்று என் மீது அதிகப்படியான ஸலவாத்தை ஓதிய உமது வாயைக் கொண்டு வருக! நான் அதில் முத்தியிட வேண்டும் என்றனர்.
அவர் வெட்கத்தால் முகத்தை ஒரு பக்கமாக திருப்பலானார். அன்னார் அவர் கன்னத்தில் முத்தமிட்டனர். அவர் கலவரமடைந்து கண் விழித்தார். அந்தக் கலவரத்தால் அவர் சமீபத்தில் படுத்திருந்த அவர் மனைவியும் நித்திரை கலைந்து எழுந்து விட்டார். அப்பொழுது அந்த அறை முழுவதும் ஒரே கஸ்தூரி வாடை பரிமளித்துக் கொண்டிருந்தது. ஒரு வாரம் வரை அவர் கன்னத்தில் கஸ்தூரி வாடை இருந்து வந்தது.
(தொடரும்)