உங்கள் மனம் பிரபஞ்சம்
ரஹ்மத் ராஜகுமாரன்
பல புத்தகங்கள் , செய்தித் தாள்கள், சிலகட்டுரைகள், வரலாற்றுக் காவியங்கள் படிப்பதால் நாம் மனதளவில் பாதிக்கப்பட்டுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதேமாதிரி பல சம்பவங்களைச் சந்திப்பதால் அவற்றாலும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
அட! டிவி சீரியல்கள் எத்தனை நம்முடைய சில பொழுதுகளை பாதிப்படையச் செய்துள்ளன,... இந்த மாதிரி பாதிப்புகள் நம்மை மட்டும் அல்ல, இந்தப் பிரபஞ்சத்தையே ஏதோ ஒரு வகையில் மாற்றிவிடுகிறது. இதை உங்களுக்கு எப்படி சொல்லணும் தெரியவில்லை. ஆனால் இதைப்பற்றி இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த இறைவன் இப்படிச் சொல்கின்றான்.
நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எந்த வசனத்தை ஒதிய போதிலும் உங்களுடைய காரியங்களில் நீங்கள் எதைச் செய்த போதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும் போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை.
பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் நபியே உங்களது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை, இவற்றை விட சிறிதோ அல்லது பெரிதோ எதுவாயினும் அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் தெளிவாகப் பதிவுசெய்யப்படாமல் இல்லை.
(குர்ஆன்- 10:61)
இப்போ சொல்லுங்க. உங்க மனதில் எதைப்பற்றி சிந்தித்தாலுங் கூட பிரபஞ்சத்தில் மாற்றம் நிகழுமா? சொல்லுங்க,நிகழும் விஞ்ஞானத்திற்கு இந்த சங்கதி ஒரு விதத்தில் அதிர்ச்சி அளித்த போதிலும் உண்மையை அப்படியே ஒத்துக் கொண்டுள்ளது. காரணம், விஞ்ஞானம் அணுக் கருவிற்குள் இருக்கும் துகள்களின் இயற்கைத் தன்மையை வரை முறைப் படுத்தத் தெரியாமல் மேலும் மேலும் விஞ்ஞானம் செய்து கண்டறிய முயற்சித்த போது பல மாயாஜால வினோத ஆச்சரியங்கள் அவர்களுக்கு அங்கே கண்ணாமூச்சி விளையாடிக் காட்டின, அசந்து போய்விட்டார்கள்!
இந்த விநோதங்களை நிரூபிக்க மாக்ஸ்ப்ளாங்கின் குவாண்டம் தத்துவத்தையும் ஜன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தையும் சாட்சியாக துணைக்கு அழைத்து வரவேண்டும். சற்றுப் பொறுங்கள். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன். எதிலே விட்டோம்?, அணு, ஆங்... அணுக்கருவிற்குள்ளே கண்ணாமூச்சி விளையாட்டைப் பார்த்த விஞ்ஞானம் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மை என்ன என்று அறிய ஆசைப்பட்டபோது ஒருவிதமான விளிம்புக்கு வந்து வசமாக தத்தளித்தது.
ஒரு எல்லைக்கு மேல் விஞ்ஞானத்தில் பிரஞ்சத்தின் உண்மையை கண்டறிய முடியாது என்பதை விஞ்ஞானிகளே கஷ்டப்பட்டு ஒப்புக் கொண்டார்கள். காரணம் யார் எதைப்பற்றி சிந்தித்தாலும சந்தித்தாலும் மாற்றம் அடையப்போவது என்னமோ பிரபஞ்சம்தான் என்பதை வெகு தொலைவிற்கு வந்த பிறகு தான் தெரிந்தும் தெளிந்தும் கொண்டார்கள்.
நம் அறிவுக்கும், அதனால் பெற்ற அனுபவத்திற்கும் கிடைத்த ஞானத்திற்கும் மேலும் ஒரு புதிய சுதந்தரம் தேவை என்று வெளிப்டையாகத் தெரிந்தது. விஞ்ஞானிகளால் இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பான உண்மைநிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குர்ஆனில் இதுபற்றி அல்லாஹ் நம்மிடம் பலவாறு பேசியிருக்கிறான்.
வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை மனிதனே நீ கவனிக்க வில்லையா..?
(குர்ஆன்- 14:19)
தக்க காரணமா? அது என்ன மேலான அமைப்பு ? விஞ்ஞானத்திற்கு தேவ பரிபாஷைகள் எதுவும் புரியவில்லை. பிரபஞ்சத்தைப் பற்றிய விஞ்ஞானம் அவர்களுக்குப் பிடிபடவில்லை. சொன்னா கேட்டால்தானே....
அன்றைய காலகட்டத்தில் நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு ஞானத்தேடல் ஏற்பட்டிருந்தது. அந் நிலையை குர்ஆன் இப்படி வர்ணிக்கிறது. ஒரு நாள் இருள் சூழ்ந்த இரவில் அவர் மின்னிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இது என்னுடைய இறைவன் ஆகுமா..? சந்திரனைக் கண்டு இது என்னுடைய இறைவன் ஆகுமா..? எனக் கேட்டு இதெல்லாம் அஸ்தமித்து மறையவே எம்மக்களே! நீங்கள் இறைவனுக்கு இணையாக்கும் இவை ஒவ்வொன்றி லிருந்தும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்று கூறினார்.
(குர்ஆன்- 6:76-79)
இப்படி ஏகத்துவக் கொள்கையில் நிலைத்திருந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களே நெருப்புக் குண்டத்தில் தூக்கிப் போட தீர்ப்பு வழங்கப்பட்டது. வானவர்கள் உதவிசெய்ய நாடினார்கள். நபியவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இறை உள்ளமை நெருப்புக் குண்டத்தில் போட முடிவு செய்ததை நபி இப்ராஹீம் (அலை) மனதார ஏற்றுக் கொண்டார்கள்.
நெருப்புக் குண்டம் வளர்க்கப்பட்டது. நெருப்பின் வெப்பம் தாளாமல் நபியவர்களை துVரத்து மலைக்குக் கூட்டிச் சென்று,கவண் செய்து அதில் வைத்து தூக்கியயறிப்படுகிறார்கள். நெருப்பே.! இப்ராஹீம் மீது குளிர்ச்சியாக சுகம் அளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு. என்று கூறினோம்.
(குர்ஆன்- 12:69)
அந்த நெருப்புக் குண்டத்தில் நாற்பது நாட்கள் வரை சுகமாக இருந்தார்கள். நெருப்புக்குள் நான் வசித்த காலத்தில் வாழ்ந்ததைப் பார்க்கிலும் மிகவும் இன்பகரமான பொழுதை வாழ்வில் நான் ஒரு போதும் வெளியில் பெற்றதில்லை என்றார்கள். ஒரு மூதாட்டி நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் நெருப்புக் குண்டத்திற்கு விறகு கட்டி தலையில் வைத்து சுமந்து கொண்டு வந்தாள்.
இடையில் ஒரு மலக்கு மனித உருவத்தில் அவள் முன் தோன்றி அவளை விசாரித்த போது அவள் வியத்தைக் கூறவே,அல்லாஹ் உனது வழியை நீளமாக்கி வைப்பானாக! என்று கூறிச்சென்றார். அவள் விறகைச் சுமந்த வண்ணம் நடந்து பட்டினியும் பசியுமாக அல்லது கடைசிவரை புறப்பட்ட இடம் வராமலே இறந்து போகிறாள்.
மேற்கண்ட இரு சம்பவத்தினுள் அவரவர் செயல்களின் தாக்கத்தால் இந்தப் பிரபஞ்சத்தின் இயல்புநிலை பாதிக்கப் பட்டதை நீங்கள் உணரமுடிகிறதா..? அடுத்து.... மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்) கி.பி (858-922) மக்களிடம், மக்களே! இறைவன் என்னிலிருந்து என்னையே எடுத்துக் கொண்டான் என்று அடிக்கடி கூறுவார்களாம். அப்படி ஒரு சூழ் நிலையில்தான் மனநிலையின் உச்சக்கட்ட கொந்தளிப்பாக முக்தியில் அவர்கள் அந்த மிகப் பிரபலமான வாக்கியத்தை உதிர்த்தார்கள்.
அன்த்தல்ஹக் (நீயே உண்மை) என்று கூறுவதற்கு பதிலாக அனல்ஹக் (நானே உண்மை) என்று கூறினார் எனச் சிலரும்,இறைவனை தன்னிலிருந்து பிரித்துப் பார்க்கும் மனோபாவமே இறைவனுக்கு இணை வைத்தலுக்கு ஒப்பானதாக மன்சூர்(ரஹ்) எண்ணினார்கள். அதனால் தான் அனல்ஹக் (நானேமெய்ப்பொருள்) என்பதாக தன்னைத் தானே உணர்ந்து உரக்கச் சொல்ல ஆரம்பித்தார் என்றும் சிலர் கூறுவர்.
இப்படி கிட்டத்தட்ட 50 ஊர்களில் போய் இதே வார்த்தை அனல் ஹக்கை உரக்கச் சொன்னார்கள். எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது. பைத்தியக்காரர் என்றும், இறைவனுக்கு இணை வைத்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு ஒவ்வொரு ஊரிலிருந்தும் அடித்து விரட்டப்பட்டார்கள். இருப்பினும் அவர்களின் வாய் அனல் ஹக்கை சொல்லிக் கொண்டே இருந்தது.
கடைசியில் மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்களுக்கு எதிரான சாட்சியங்ளைத் தேடி எடுத்து அவர்களை அப்போதைய அரசு சிறை வைத்தது. ஒருநாள் ஹல்லாஜ் (ரஹ்) சிறையிலிருந்து காணாமல்போனார். இது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை: அவர்களை அடைத்து வைத்திருந்த அறையும் காணாமல் போனதுதான் ஆச்சரியத்திலும் மிகப்பெரிய ஆச்சரியம்! இரண்டு நாட்கள் கழித்து ஹல்லாஜும் (ரஹ்) இருந்தார்கள்.
அந்த அறையும் இருந்தது. எங்கே போனீர்கள் என்று கேட்டதற்கு இறைவனைப் பார்க்கப் போயிருந்தேன்... சங்கிலிகளால் கட்டப்பட்டு மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் இழுத்துக் கொண்டு வரப்பட்டார்கள். அப்போது அவர்கள் புன்னகை புரிந்து கொண்டும், கவிதை ஒன்றைப் பாடிக் கொண்டும் வந்தார்கள். பின்னனர் தொழுது விட்டு இறைவனிடம் இவர்கள் அறியாத மக்களாக இருக்கிறார்கள்.
இவர்களை நீ மன்னித்து அருளவேண்டும் என்று அவர்களுக்காக துஆ செய்தார்கள் அதன் பின் அவர்களுக்கு ஆயிரம் பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு அடிக்கும் அனல் ஹக்கை மொழிந்த வண்ணமிருந்தார்கள். அடித்தவன் களைத்திருந்தான். அப்போது ஒருவர் வந்து மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்களிடம் இறைக்காதல், என்றால் என்ன என்றார்.
இறைக்காதலா, அதை நீ இன்றும் நாளையும் அதற்கு மறுநாளும் காண்பாய். முதல் நாள் காதலன் வெட்டப்படுவான். இரண்டாவது நாள் நெருப்பில் எரிக்கப்படுவான். மூன்றாவது நாள் அவனது சாம்பல் தஜ்லா நதியில் வீசியயறிப்படும் என்றார்கள். அதன்பின் கூடியிருந்த மக்கள் கூட்டம் மன்சூர் ஹல்லாஜ் மீது கற்களை எறிந்தது. அதிகாரிகளால் அவர்களது மூக்கும் கைகளும் வெட்டப்பட்டன.
பின் கால்களும் வெட்டப்பட்டன. பின் அவர்களது கண்கள் பிடுங்கப்பட்டன. பின் காதுகள் வெட்டப்பட்டன. பின் நாக்கு வெட்டப்பட்டது. இறுதியாக அவர்களது தலையும் வெட்டப்பட்டது. பின்பு அவர்களது உடல் எரிக்கப்பட்டது. அது எரியும் போதும் அனல்ஹக் என்று ரீங்காரம் செய்தது!
இந்தக் கொடுர சித்தரவதைகள் அத்தனையும் நிறைவேற்றியபின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை மறுநாள் தஜ்லா நதியில் கரைக்கப்பட்டபோது கூட தஜ்லா நதியிலிருந்தும் அனல் ஹக், அனல்ஹக் என்ற ஒலி கிளம்பிக் கொண்டே இருந்தது. என் அடியான் கூடுதலான நஃபில் வணக்கங்களால் என்பக்கம் நெருங்கி வந்து கொண்டே இருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.
அவ்வாறு நான் அவனை நேசித்து விடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன்.
(நூல்: புகாரி)
இப்போது நீங்க சொல்லுங்க.. இங்கு நடந்தது யாருக்கு?
இவ்வுலகில் எந்த ஒரு செய்கையின் தாக்கம் இந்தப் பிரபஞ்சத்தை ஒரு வகையில் மாற்றி விடுகிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொண்ட உண்மைகள் குர்ஆன் மூலமும் சம்பவங்கள் மூலமும் நிருபணமாகி இருக்கிறது. நன்மையை நாடித்தானே நெருப்புக் குண்டத்திற்கு விறகு பொறுக்க வந்தவளின் பாதை மரணம்வரை நீண்டு கொண்டே போகிறது!
இறை உள்ளமையின் ஆதரவை மட்டுமே முன்னிறுத்தும் போது நெருப்புப் குள்ளே மனிதவாழ்வு சுகப்படுகிறது. இதமளிக்கிறது! இறை உள்ளமையின் திருப்திக்காக கசையடியும் சிரச்சேதமும் கூட கணநேரத்தில் காணாமல் போய் விடுகிறது! இதெல்லாம் இந்தப் பிரபஞ்சத்திற்குள் செய்யப்பட்ட வேலை தான். இதனால் இவர்களுக்கு பிரபஞ்சமே வளைந்து கொடுத்தது.
விஞ்ஞானம் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மை நிலை என்ன என்று அறிய ஆசைப்பட்டபோது ஒரு விதமான விளிம்புக்கு வந்து தத்தளித்தது. ஒரு எல்லைக்கு மேல் விஞ்ஞானத்தால் பிரபஞ்சத்தின் உண்மை நிலையை கண்டறியமுடியாது என்பதை விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டார்கள். காரணம், யார் எதைப்பற்றி சிந்தித்தாலும் சந்தித்தாலும் மாற்றம் அடையப் போவது இந்தப் பிரபஞ்சம்தான் என்பதை வெகுதொலைவிற்கு வந்த பிறகுதான் தெரிந்தும் தெளிந்தும் கொண்டார்கள் விஞ்ஞானிகள்.
நம் ஒவ்வொரு செய்கையின் பாதிப்புகள் நம்மைமட்டும் அல்ல, இந்தப் பிரபஞ்சத்தை ஏதோ ஒரு வகையில் மாற்றி விடுகிறது. அது தனக்குள் தானே எந்த மாற்றமுமின்றி மாற்றம் பெறுகிறது. இதை உங்களுக்கு இப்படிதான் சொல்ல என்னால் முடிகிறது. ஆனால் என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும். இந்தப் பிரபஞ்சம் யார் யாருக்கெல்லாம் எப்படி எல்லாம் மாறி விடுகிறது என்று இதனை அறிந்தவர்கள் ஞானமுக்தி பெற்றவர்கள்.
நல்லதை நினைப்போம்! நல்லதைச் செய்வோம்! நல்லதுதான் நடக்கும் என்பது பிரபஞ்சத்தில் எழுதி வைக்கப்பட்ட விதி. நிச்சயமாக நாம் மரணித்தவர் களை மறுமையில் உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும் அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகின்றோம். இவை ஒவ்வொன்றையும் லவ்ஹுல் மஹ்ஃபூழ் என்னும் பதிவுப் புத்தகத்தில் பதிந்தே வைத்திருக்கின்றோம்.
(குர்ஆன் 36:12)
- தொடரும் -