தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு தொடர்....
கலீபா பெருந்தகைகள்
ஒரு சிறப்பு பார்வை!
மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி
வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இருவரில் ஒருவரை சென்ற இதழில் கண்டோம் !
மற்றொருவர் யார் ?
வேறு யார் ? எனது மூத்த சகோதரர் தான் !
என்.எஸ்.என். பாக்கவி ... அவரது பெயர் !
புரவலர் போர்த்திய பொன்னாடை என்னும் நூலின் மூலம் பிரபல்யமானவர். அந்நூல் தவிர சிறு சிறு நூல்கள் சுமார் 7,8 நூல்கள் தாம் எழுதியிருப்பார். ஆனால் ஏனோ அவரைப் பன்னூலாசிரியர் என்றும் சிலர்அழைப்பதுண்டு. (சுமார் 10 நூல்கள் எழுதியவரே பன்னூலாசிரியர் என்றால் 100,150 நூல்களை எழுதியவர்கள் எப்படி அழைப்பது ? என்று அவர் உயிருடன் இருந்த போதே சில இலக்கியச் சர்ச்சை ஏற்பட்டதுண்டு)
சொந்த தங்கை மகன் என்பதனால் என்.எஸ்.என். பாகவி மீது கலீபா வலிய்யுல் அஹ்ஸன் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். அடிக்கடி குடும்பத்தாருடன் வீட்டிற்கு வந்து 2,3 நாட்கள் தங்கிச் செல்வதுண்டு ! கலீபா அவர்களும் குடும்பத்தினரும் நன்கு உபசரிப்பார்கள் ! இளமைத் துடிப்போடிருந்த போது பாகவியாருக்கு வலிமார்கள் என்றாலே நஞ்சுதான் (நஊதுபில்லாஹ்) எந்த தர்காவிற்கும் செல்ல மாட்டார் ! மகான்களைக் கிண்டல் செய்வார்!
கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள், பாகவியாருக்கு எவ்வளவோ தடவை எத்தனை எத்தனையோ குர்ஆன், ஹதீஸ்களை எடுத்துக் கூறி வலிமார்களை விளங்கப்படுத்த முயன்றார்கள். ஆனால் எவற்றையும் ஏற்காமல் வலிமார்களைத் தூசிப்பதையே தொடர்ந்து செய்து வந்தார் ! ஒரு கட்டத்தில் வலிமார்களைத் தூசிப்பதாயிருந்தால் எமது வீட்டிற்கே வரக்கூடாது என கலீபா அவர்கள் தடை செய்துமிருந்தார்கள்! அப்போது பிறந்தது அவருக்கு ஆத்திரம்!
கலீபா வலிய்யுல் அஹ்ஸன்அவர்கள் மீது பொறாமை கொண்டு, வலிமார்களின் போட்டோக்களை ஊதுவர்த்தி வைத்து பூஜிப்பதாக முதல் கட்ட பொய்யை அவிழ்த்து விட்டார் ! ஓதப்படிக்கத் தெரியாத எந்த ஒரு மடையனும் இக்காரியத்தைச் செய்ய மாட்டான் ;அவ்வாறிருக்க பாகியாதுஸ் ஸாலிஹாதில் முழுமையாக ஓதி பாகவி பட்டம் பெற்ற அறிவு ஞானம் பெற்று,ஒரே பள்ளியில் சுமார் 30வருடங்கள் இமாமாகப் பணியாற்றிக் கொண்டு, நூற்றுக் கணக்கான மாணவச் செல்வங்களுக்கு திருக்குர்ஆனையும், பிக்ஹ் மஸாயில்களையும், மேலான நபி வழிமுறைகளையும்போதித்து வரும் பேணுதலான, பீடி சிகரெட் பழக்கமில்லாத, வெற்றிலை பாக்கு புகையிலை போடும் பழக்கமில்லாத ஓர் ஆலிம் இவ்வாறு செய்திருப்பாரா ? எனச் சிந்திக்காத, சிந்திக்கத் தெரியாத ஊரார் சிலரும், பிரபல பாகவியின் நண்பர்கள் சிலரும் இச்சேதியைப் பரப்பி குள்ள நரி வேலைகளில் ஈடுபட்டனர் ! அவற்றிற்கெல்லாம் கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அஞ்சவில்லை ! அசரவில்லை! தாங்கள் ஃபாத்திஹா ஓதச் செல்லும் வீட்டரிடமும், ஆஷி´கீன்களிடமும் வலிமார்களின் சிறப்புகளையும் மேன்மைகளையும் விரிவாக எடுத்துக் கூறத் தொடங்கினார் ! தங்களது இல்லத்தில் வாரந்தோறும் இராதிபு மஜ்லிஸை நடத்தினார். பெண்கள் குவியத் தொடங்கினார். ஊரெங்கும் இராதியைப் பற்றி செய்தி பரவி வேறு சில பன்னூலாசிரியர்களின் வீடுகளைக் கடந்து மக்கள் சாரை சாரையாக கலீபா வலிய்யுல் அஹ்ஸன் வீட்டிற்கு வரத் தொடங்கினார் !
பாகவிக்கு முதல் கட்டத் தோல்வி தொடங்கியது ! ஓணானைப் பிடிக்கப் போய் பாம்பு வலையில் சிக்கியவராய் துவண்டார், புழுவாய்த் துடித்தார்! தாய் மாமானாரான கலீபா வலிய்யுல் அஹ்ஸனைப் பழி வாங்கத் (ரலி) திட்டமிட்டு, திருட்டுப் பெயரில் (புனைப்பெயரில்) வலிமார்களைப் பற்றி இட்டுக் கட்டி பல காரணங்களைக் கூறி ஓர் அறபுக் கல்லூரிக்கு ஃபத்வா கேட்டு எழுதினார்! அக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் படு (மோசமான) மேதாவிகள் ! எதிர்த்தரப்பு வாதத்தைக் கூட கேளாமல் ஃபத்வா என்னும் பெயரில் கேட்ட கேள்விகளுக்கு கோணாங்கித் தனமாக பதில் கூறியிருந்தனர்! (ஃபத்வா கொடுப்பதற்கென்று சில ஒழுங்கு முறைகள் உள்ளன. அதில் எந்த ஓர் அம்சத்தையும் பின்பற்றாமல் போனது வெட்ககேடு அல்லவா?)
அந்த பத்வா எனும்- கேள்வி பதிலைப் பெற்றவுடன் ஏதோ கின்னஸ் சாதனை புரிந்து விட்டதாக வானத்திற்கும் பூமிக்கும் குதித்த பாகவியார், அந்த காகிதங்களை வைத்துக் கொண்டு வலிமார்களின் அஸ்திரங்களைப் பிடுங்க முனைந்தார். ஒரு கல்லை அல்ல... ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியவில்லை !
தமது கடைசி அஸ்திரமாக.......ஊராரிடம் இல்லாததையும் பொல்லாததையும் எடுத்துக் கூறி.... கற்பனைக்கதைகளுக்கு காதும் மூக்கு வைத்தார் ! என்ன செய்ய முடிந்தது ?
கலீபா வலிய்யுல் அஹ்ஸன் குடும்பத்தினார் மற்றும் முரீதுகள் சிலர், தாங்கள் கொண்ட இலட்சியத்திற்காக, ஏகத்துவக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக, மெய்ஞ்ஞானத்திற்காக தங்களின் ஷைகிற்காக 20 ஆம் நூற்றாண்டில் ஊரைவிட்டு வெளியேறிய முஹாஜிரீன்கள் என்னும் பேறுடன் பெரும் பாக்கியத்துல் பீடு நடை போட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல வசதி வாய்ப்புகளோடும் சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வெற்றி வாகை சூடிய ஆனந்தத்தில் வளமோடும் நலமோடும் வாழ்ந்து வருகின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்) ஆனால், அவரோ? கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அடிக்கடி கூறுவார்கள் : எனது தங்கை மகன் (பாகவி) எங்களுக்குச் செய்த பெரிய உபகாரம் - எங்களை தவ்ஹீதுடைய முஹாஜிரீன்களாக மாற்றியது தான் ! (வலிமார்களைப் பகைத்தவர்கள் வீங்கித்தான் சாவார்களேயன்றி, வாழ்வாங்கு வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை.) கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள், என்னிடம் கூறிய மற்றொரு இரகசியம்
(இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்)