• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Oct 2012 »  ராபியா பஸரீ (ரஹ்) அவர்களின் திருமண சூத்திரம்


ராபியா பஸரீ (ரஹ்) அவர்களின் திருமண சூத்திரம்

கலீபா A. முஹம்மது காசீம் B.Sc.,M.Ed பெரம்பலூர்.

 

    ராபியா பஸரீ (ரஹ்) அவர்கள் தனது ஹஜ்ஜுக் கடன்களை முடித்த பின் அவர்கள் பஸரா மீண்டு முன்பு போல் வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் மகாத்மியத்தையும்துறவு நிலையையும் சரியாக அறியாத ஒருவர், அவர்களை அணுகித் தாம் இருவரும் மணமுடித்து மகிழலாம் என்று கூறினார். அப்பொழுது அம்மையார் அவரை நோக்கி, “இவ்வுலக இன்பங்களை விரும்புவோர் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியாவார். அவ்வுலக இன்பங்களை விரும்புவோர் பெண்ணாவார். இறை இன்பத்தில் மூழ்கித் திளைப்போர் ஆணாவார். நீர் இவ்வுலக இன்பங்களை விரும்பின் ஓர் அலியாவீர். அலியுடன் நான் எவ்வாறு மணம்புரிந்து வாழ்வது ? அல்லது நீர் அவ்வுலக இன்பங்களை விரும்பின் பெண்ணாவீர். பெண்ணுடன் பெண் எவ்வாறு மணம் புரிதல் சாலும்? நீர் இறை காதலில் மூழ்கித் திழைக்கும் ஆணாவீர். நானும் இறைக்காதலில் மூழ்கி திளைப்பின் ஆணாவேன்.அவ்விதமாயின் ஆணும் ஆணும் எவ்வாறு மணமுடித்து வாழ்வது ? என்று வினவினார். அது கேட்ட அம்மனிதர் யாது கூறுவதென அறியாது வாயடைத்து வெளியே சென்றார்.


                மற்றொரு தடவை அவர்களின் ஞானாசிரியரான ஹஸன் பஸரீ (ரஹ்)

அவர்கள், அவர்களை நோக்கிதாங்கள் மணமுடித்து வாழ்ந்தால் என்ன ?” என்று வினவிய பொழுது நான் இறைவனின் அடிமைஎன் மீதோ, என் வாழ்வின் மீதோ எவ்வித ஆதிக்கமும் இல்லாதவள். என் உடல், உயிர் அனைத்துமே அவனுக்கு உரியவை.  எனவே அதுபற்றி என் எசமானனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்என்று கூறிவிட்டார்கள். அது கேட்டுப் பெரிதும் வியப்படைந்த ஹஸன் பஸரீ (ரஹ்)அவர்கள் ராபியா! தாங்கள் இப்பதவியை எவ்வாறு  எய்தப்பெற்றீர்கள் ?”  என்று வினவிய பொழுது நான் என்னை அவனளவில் அழித்துக் கொண்டேன்என்று அவர்கள் பதிலிறுத்தார்கள். நல்லது : தாங்கள் அவனை எவ்வாறு அறிந்தீர்கள்என்று ஹஸன் பஸரீ (ரஹ்)அவர்கள் மீண்டும் வினா விடுத்த பொழுது, “தாங்களோ அவனை அறியும் முறையை அறிவீர்கள். நானோ அவனை எவ்வாறு அறியாமல் இல்லாதிருப்பது என்பதை  அறிவேன் என்று அவர்கள் விடையிறுத்தார்கள்.

              

          அறமும் ஒழுக்கமும் ஒருங்கே வாய்க்கப் பெற்று நன்னெறியில் வாழ்ந்து வந்த அப்துல் வாஹித் இப்னு ஸைத் என்பார் இவர்களை மணமுடிக்க விழைந்த பொழுது சிற்றின்பத்தை விரும்புபவரே,உம்மை போன்று சிற்றின்பத்தை  விரும்பக்கூடிய வேறொருவதைத் தேடிக் கொள்ளும். என்னிடம் அதைப்பற்றி ஏன் பேசுகின்றீர் ? என்னிடம் அதன் அடையாளம் எதையேனும் கண்டீரா, என்ன ? என்று இவர்கள் சொல்லி  அனுப்பினர்.  பஸராவின் ஆளுநரான முஹம்மது பின் சுலைமான் அல்ஹாஷிமி இவர்களை மணமுடிக்க விரும்பி இவர்கள் தம்மை மணப்பின் தமக்கு மாதம் தோறும் கிடைக்கும் ஊதியமாகிய பதினாயிரம் தீனார்களையும் அவர்களிடமே ஒப்படைத்து விடுவதாக கடிதம் எழுதிய பொழுது, தாங்கள் என்னுடைய அடிமையாக இருப்பதிலோ, ஒரு கணமேனும் என் கவனம் அல்லாஹ்வை விட்டு வேறு பக்கம் திரும்பி இருப்பதிலோ, எனக்கு அணுவத்தனையும் மகிழ்ச்சி இல்லை என்று இவர்கள் பதில் எழுதி அனுப்பினார்கள்.


                வேறொரு நாள் சிலர் அவர்களிடம், தாங்கள் ஏன் திருமணம் முடித்துக் கொள்ளவில்லை என்று வினவினர். அது கேட்ட அம்மையார், நான் நான்கு வி­ஷயங்கள் பற்றித் துயரப்பட்டுக் கொண்டுள்ளேன். அவற்றை நீங்கள் நீக்கி விடின் நான் திருமணம் கொள்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்று கூறினார்கள். அவற்றைக் கூறுங்கள் நிச்சயமாக அவற்றை நாங்கள் நிவர்த்தி பண்ணுகின்றோம் என்று பதிலிறுத்தனர் அவர்கள்.

                

            அப்பொழுது ராபியா (ரஹ்)அவர்கள் அவர்களை நோக்கி, நான் இறை நம்பிக்கையுடன் இறப்பெய்துவேனா மாட்டேனா என்று கூறுங்கள் என்று வினவினார். நாங்கள் அறியோம் என அவர்கள் பதிலிறுத்தார்கள். நல்லது, நான் மண்ணறையில் வைக்கப்பட்ட பின் முன்கர், நக்கீரு என்ற வானவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் சரியாகப் பதிலிறுப்பேனா, மாட்டேனா ? என்று கூறுங்கள் என்று வினவினார் ராபியா. எங்களுக்குத் தெரியாது என்று மறுமொழி பகர்ந்தார்கள். சரி, மறுமையில் என்னுடைய பட்டோலை என் வலது கையில் கொடுக்கப்படுமா? இடது கையில் கொடுக்கப்படுமா? என்று கூறுங்கள் என்று வினவினார் ராபியா, நாங்கள் அறிய மாட்டோம் என்று விடையிறுத்தார்கள் அவர்கள். நல்லது நான் மறுமையில் வலப்பக்கமாகச் சுவனம் செல்லுமாறு கூறப்படுவேனா? இடப்பக்கமாக நரகம் செல்லுமாறு கூறப்படுவேனா ? என்று வினவினார் ராபியா, அதற்கும் அவர்கள், நாங்கள் அறிந்தோமில்லை என்று மறுமொழி பகர்ந்தார்கள்.அது கேட்ட ராபியா (ரஹ்) அவர்கள், இந்நான்கையும் நானும் அறியவில்லை. இந்நிலையில் நான் எவ்வாறு துயர் நீத்துத் திருமணம் புரிந்து கொள்வது? என்று கூறிவிட்டனர்.


                வேறொரு தடவை ஒருவர் அவர்களை அணுகித் தாம் அவர்களை மணமுடித்து வாழ விரும்புவதாகக் கூறிய பொழுது அவரையும் இவ்வாறே கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு மடக்கி வெருண்டோடச் செய்தார்கள் அவர்கள்.


                அவர்கள் அயராது இறை வணக்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட சிலர் அவர்களிடம் வந்து, தாங்கள் எப்பொழுது பார்த்தாலும் இறை வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்களே, தாங்கள் இறைவனைப் பார்க்கின்றீர்களா? என்று  வினவினர். அதற்கு அவர்கள், நான் இறைவனைப் பார்க்க வில்லையாயின் எவ்வாறு அவனை நான் வணங்குவேன் என்று வலியுறுத்தினர்.


                அவ்விதமாயின் ஓர் அடியான் இறைவனுக்கு எப்பொழுது பொருத்தமாவான் ? என்று வினவினர் அவர்கள். அதற்கு ராபியா (ரஹ்)பதிலிறுக்குங்கால், அவன் இறைவன் தனக்கு நல்கிய நற்பேறுகளுக்கு நன்றி செலுத்துவது போன்று, தனக்கு அவன் நல்கும் சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும எப்பொழுது நன்றி செலுத்துகின்றானோ, அப்பொழுதே இறைவன் அவனைப் பொருத்திக் கொள்வான் என்று கூறினார்கள்.

         

           பின்னர் அவர்கள் ராபியா (ரஹ்) அவர்களை நோக்கி ஒரு பாவியானவன் பாவமன்னிப்புக் கோரின் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா ? என்று வினவியபொழுது அவன் இறைவனின் நாட்டம் இருந்தால் தானே பாவமன்னிப்புக் கோருவான். இல்லையெனில் அவன் ஒரு போதும் பாவமன்னிப்பு கோர மாட்டான். எனவே அவன் இறைவனின் நாட்டப்படி பாவமன்னிப்பு கோரின் இறைவன் அவனுடைய பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்ளத்தானே செய்வான். இறைவன் அவன் பக்கல் திரும்பின் அவனும் இறைவன் பக்கல் திரும்பத்தானே செய்வான் என்று அவர்கள் பதிலிறுத்தார்கள்.

                

            வேறொரு தடவை அவர்களைக் காண வந்த சிலர், தங்களிடம் நாங்கள் யாதொரு நோய் நொம்பலங்களையும்  காணோம். அவ்விதமிருக்க தாங்கள் ஏன் எப்பொழுது பார்த்தாலும் அழுது கொண்டுள்ளீர்கள் ? என்று வினவிய பொழுது என் உள்ளம் பெரிதும் பிணிவாய்ப்பட்டுள்ளது. அதற்கு உலகிலுள்ள எந்த மருத்துவனாலும் நிவாரணம் அளிக்க இயலாது. எனவே அவனுடைய பேரருளைப் பெறுவதற்காக என்னை இவ்விதம் துன்பத்திற்காளாக்கிக் கொண்டுள்ளேன் என்று கூறினார்.


         மற்றொரு நாள் அவர்களைக் காண வந்த ஒருவர், தாங்கள் ஏன் எப்பொழுது அழுது கொண்டிருக்கீறீர்கள் ? என்று வினவிய பொழுது என் துன்பத்திற்கான நிவாரணம் இறைவன் பால் என்னை அழித்துக் கொள்வதில் தான் உள்ளது. எனவே தான்நான் எப்பொழுதும் அழுது கொண்டே உள்ளேன். என்று அவர்கள் பதிலிறுத்தார்கள்.


                ராபியா பஸரீ (ரஹ்)அவர்களின் வாழ்வு நெறிமுறை, நன்றி செலுத்துதல் மற்றும் பாவமன்னிப்பு கோருதல் ஆகியவை  நமக்கோர் நல்ல படிப்பினை ஆகும்.