• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Oct 2012 »  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

கல்வி விழிப்புணர்வு மாநாடு  தீர்மானங்களில் சில....

 

1. இட ஒதுக்கீடு சமூக நீதியின் சின்னம் !


                தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இதில் 3.5 சதவீதம் முஸ்லிம் சமுதாயப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப் படுகிறது. இச்சதவீதம் போதியதன்று. இதனை குறைந்த பட்சம் ஐந்து சதவீதமாக உயர்த்தித் தர வேண்டுமென்னும் கோரிக்கையைக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


                இந்நிலையில், அண்மையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் விசாரணை 10.09.2012 ல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற விருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருப்பினும், தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமின்றி, தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தும்.


                அதே போல, மத்திய அரசின் வேலை மற்றும் உயர்படிப்புகளில் இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்குக்கென ஒட்டு மொத்தமாக 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு  உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்த மாநாடு வற்புறுத்துகிறது.


                மத்திய அரசு, முஸ்லிம் சமுதாயத்தை அஷ்ரப், அஜ்லப்,அர்ஸல் என்று சாதிப்பிரிவினைக்குள் அடக்க முனையாமல், சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்னும் அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரப் கமி­ஷன் பரிந்துரைக்குச் சட்ட வடிவு கொடுக்க வேண்டும் என்று இந்தமாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.


2. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம்.


                தமிழ்நாட்டில் இயங்கி வரும் 54957 துவக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் முஸ்லிம் சிறுபான்மையினரின்  நிர்வாகத்தில் உள்ளவை நானூறுக்கும் குறைவானவை என்னும் அதிர்ச்சித் தகவல் சீரியசிந்தனைக் குரியதாகும்.

            

            இப்போது நடைபெற்றுவரும் பள்ளிகளில் பல பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றன என்பதும் யதார்த்த நிலையாகும்.

 

            தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் குறைந்த பட்சம் மஸ்ஜிதை மையமாகக் கொண்டுள்ள ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஒரு பள்ளிக்கூடமாவது உருவாக்கப்படுதல் அவசியமாகும்.


                புதிய பள்ளிகளை அமைக்கவும், நடக்கும் பள்ளிகளின் தரம் உயர்த்தவும், பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கவும், அவசியப்படின் நலிந்த பள்ளிக்கூடங்களை ஏற்று நடத்திடவும் ஆகிய கல்விப் பணிக்களுக்கென, தமிழகம் தழுவிய முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம் உருவாக்குவது என இந்த மாநாடு முடிவு செய்கிறது.


                சென்னைப் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா ஹுசைன் போன்ற கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றைஅமைத்து கலந்தாலோசனை செய்து அவர்களின் ஒப்புதலுடன் இந்தக் கல்விக் குழுமத்தின் பட்டியலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.


3. சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்.


                தமிழ்நாட்டில் இயங்கி  வரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று கடந்த அரசு 26.02.2011 அன்று வெளியிட்ட அரசாணைகளில் 11307 ஆசிரியர்கள்  648 பணியாளர்கள் ஆக 11955  பணியிடங்களை ஏற்று ஆண்டுக்கு 331 கோடி ரூபாய் அனுமதி  வழங்கியிருந்தது.

 

                1991-1992க்குப் பிறகு சுயநிதியில்இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அரசு மான்ய உதவியுடன்  பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 31.05.1999 வரை மான்ய நிதிஉதவியின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட, மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மான்ய உதவியின்றியும் முழுமையாக மான்ய உதவியின்றியும் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு தற்போதைய நடைமுறையில் உள்ள ஆணைகளின்படி மான்யத்துடன் பணியிடங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு முடிவு செய்து,தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1973ல் திருத்தம் வெளியிட முடிவு செய்து, தோராயமாக 965 தனியார் பள்ளிகளுக்கு சுமார் 4851 ஆசிரியர் பணியிடங்களும் 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 5499 பணியிடங்கள் 01.06.2011 முதல் அனுமதிக்கப்பட்டு,அரசுக்கு ஆண்டுக்கு131 கோடியே 13 லட்சம் கூடுதல் செலவும் ஏற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

            அதேபோல் 1990-1991ம் ஆண்டுவரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் 6456 பணியிடங்கள் ரூ.200 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டு   அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் 1999ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு  பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் பரிசீலித்து முடிவெடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.


                ஆனால் இந்த அரசாணைகள்  செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. இந்த அரசாணைகளை நடைமுறை  படுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.


4. இந்தியா - இலங்கை நட்புறவு


                இலங்கை மக்களுக்கும் இந்தியர்களுக்கு மிடையில் பகைமை உணர்வு ஏற்பட இடமளிக்கும் எத்தகைய செயலிலும் ஈடுபடவோ, ஈடுபட  அனுமதிக்கவோ செய்யாமல் ராஜதந்திர அணுகு  முறையோடு காரியமாற்ற வேண்டுமென அனைவரையும்  இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


5. திருமணப் பதிவும் மத்திய அரசின் திருத்தச் சட்டமும்


                இந்திய உச்சநீதிமன்றம் சீமா அஸ்வானி குமார் வழக்கில் தீர்ப்புக் கூறிய போது, இந்தியாவில் நடைபெறும் எல்லாத் திருமணங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் வழிகாட்டுதலை 14.02.2006ல் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் கடந்த அரசு, திருமணப்பதிவு (கட்டாய) சட்டம் கொண்டு வந்தது.


                இந்தச் சட்டத்தில்  சுப்ரீம் கோர்ட்டு கூறிய திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், கோர்ட்டு கூறிய எளிய,சுலபமான, எல்லாரும் அணுகக்கூடிய  பதிவு முறை தமிழகத்தில் இல்லை என்பதை ஆய்ந்து. தமிழகத் திருமணச் சட்டத்தில்திருத்தம் வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை எழுப்பியது.


                திருமணப்பதிவை  எளிய  முறையில் யாரும் பதிவு செய்யும் வகையில் அமைப்பதற்கு, பிறப்பு இறப்பு பதிவாளர்  பொறுப்பில் திருமணப் பதிவுப் பொறுப்பையும் வழங்குமாறு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.


                நமது நாடாளுமன்ற  உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களிடம் நேரில்  பேசி இந்தச் சட்டத் திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி வந்தார்.


                இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு, 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில்திருத்தங்கள்கொண்டு வந்து, பிறப்புகள், திருமணங்கள் மற்றும்  இறப்புகள் பதிவுச்சட்டம் 2012 என்னும் பெயரில் மசோதா ராஜ்ய சபையில் தாக்கல்செய்திருக்கிறது.


                சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலைக் கருத்திற் கொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருமணப் பதிவையும் சேர்த்து சட்டத் திருத்தத்தை முன்மொழிந்துள்ள மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இந்த மாநாடு நன்றி தெரிவிக்கிறது.


                ராஜ்ய சபாவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி, லோக் சபாவிலும் விரைவில் நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசின் சட்டத்துறை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.


6. ஆதிக்க சக்திகளின் அட்டூழியங்களுக்கு முடிவு வேண்டும்


                இந்திய தேசத்தில் சட்ட ஒழுங்கைக் குலைத்தும், அமைதி கட்டுப்பாட்டைச் சிதைத்தும், மாநில மக்களுக்கிடையில் மோதலையும் புகைச்சலையும் உருவாக்கியும், இந்திய ஜனநாயக மரபுகளைச் சீரழித்தும், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கியும் தேசத்தில் பாஸிச தத்துவத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆதிக்க சக்திகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சூதுகளுக்கும் மக்கள் பலியாகிவிடக் கூடாது என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.


                பாஸிசத்தின் உச்ச நிலையாகவடகிழக்கு மாநிலமான அஸ்லாமிலும் அதனைச் சுற்றியுள்ள மணிப்பூர், மிஜோராம், நாகலாந்து, இமாசல பிரதேசம் ஆகியவற்றிலும் பூர்வீகக் காலந்தொட்டு வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையினரை அந்நிய தேசத்தவர், வந்தேறிகள், பரதேசிகள், பிறதேசிகள் என்றெல்லாம் அவப்பெயர் சூட்டி, கலவரத்தைத் தூண்டி விட்டு,இலட்சக்கணக்கான மக்களை தமது ஊர் வீடுகளை விட்டுத் துரத்தியும், சுட்டுப் பொசுக்கியும், எரித்து நாசப்படுத்தியும் வரும் போக்கிற்கு உடனடியாக முடிவு கட்டும் வகையில் மாநில மத்திய அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.


7. சட்டப்படிப்புக்கு உதவி


            தமிழக முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் சட்டக் கல்விக்கு ஆர்வம் மிகுந்திட வேண்டும் என்னும் எண்ணத்தில், பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஐவருக்கு அவர்களின் சட்டப்படிப்புக்கான முழுச் செலவையும் ஏற்று ஊக்கப்படுத்துவது என்றும்,அதன் பொறுப்பை மாநாட்டு வரவேற்புக் குழு ஏற்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.


8. காயிதே மில்லத் பல்கலைக் கழகம்


                இந்திய தேசிய விடுதலை வீரரும், அரசியல்சட்ட நிர்மாணியும், சமூக நல்லிணக்க நாயகரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைவருமாகத் திகழ்ந்து அனைவராலும் அனைத்து அரசியல் இயக்கங்களாலும் போற்றப்பட்டு வரும் காயிதே மில்லத் அல்ஹாஜ் எம். முஹம்மது இஸ்மாயில்  சாஹிப்அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தின் பிரதானமாகவும் நடுநாயகமாகவும் உள்ள பகுதியில் காயிதே மில்லத் பல்கலைக் கழகம்உருவாக்குவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.


9.  முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்பட்ட வகுப்புச் சான்று


                சாதிச் சான்றிதழ் கேட்டு வருவாய் துறையில் விண்ணப்பிக்கும் போது முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு இஸ்லாமாக மதம் மாறியவர் என்றே சான்று வழங்கப்படுகிறது.  இதனால் நியாயமாக கிடைக்க வேண்டிய பிற்பட்ட வகுப்பினருக்குரிய எந்த வாய்ப்பையும்பெற முடியாமல் போய்விடுகிறது. எனவே மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்பட்ட லெப்பை வகுப்பைச் சார்ந்தவர் என வருவாய்த்துறையினர் சான்றளிக்க ஆணை பிறப்பிக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


10. பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான சலுகைகளை கண்காணிக்க குழு


            தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கல்வித் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன. எனவே தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என வட்டாட்சியர் மூலம் கண்காணிக்கப்படுவது போல், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


11. சிறுபான்மை தகுதிச் சான்று - முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுதல்

              

              நடைமுறையில் உள்ள கட்டாய கல்வி சட்டம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சுயாட்சியில் தலையிடுகிறது. 25 சதவீதம் இலவச கல்வியை மற்றவர்களுக்கு வழங்க வழி வகுக்கிறது . உச்ச நீதி மன்றத்தை அணுகிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை தகுதி சான்று பெற்ற சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச் சட்டம் மற்றும் 25 சதவீத கல்வி செல்லாது என்ற தீர்ப்பை பெற்றுள்ளன.

எனவே இந்த தீர்ப்பை பயன்படுத்தி சிறுபான்மை கல்வி நிறுவன தகுதி சான்று விரைவாக பெற முஸ்லிம் கல்வி நிறுவனங்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


12. காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரி


            புதுச்சேரி மாநிலத்தில் நாற்பது சதவீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாழும் காரைக்கால் மாவட்டத்தில் அம்மக்களுக்கு பயன்படும் வகையில் அரபி  பாடதிட்டத்துடன் கூடிய அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டுமென புதுச்சேரி மாநிலஅரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் புதுச்சேரி வக்ஃப் வாரியத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் கொண்டு வரவும், வக்ஃப் வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அதைச் செயல்படச் செய்யும் படியும் புதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மதரஸாக்களில் ஆங்கில மொழி பயிற்சி  தமிழகத்தில் உள்ள அரபிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மார்க்கக் கல்வியில் சிறந்த  மேதைகளாக திகழ்ந்திடவும் அவர்களின் கல்வி திறன் மேநாடுகளிலும் சென்றடையும் வகையில் மவ்லவி ஆலிம்களுக்கு ஆங்கில மொழிப் புலமையை உருவாக்குதற்குரிய பயிற்சியை ஆங்கில அறிஞர்களை கொண்டு வழங்குவதற்கும் இந்த பயிற்சி திட்டத்தை வெற்றி பெற செய்வதற்கு அரபிக் கல்லூரிகளின் உலமாக்களும், நிர்வாகிகளும் மிகுந்த ஒத்துழைப்பு தருமாறு இந்த மாநாடுஅன்போடு வேண்டுகிறது.


மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்

மாநில பொதுச் செயலாளர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

�b