வானவர்களின் வாகனங்கள்
ரஹ்மத் ராஜகுமாரன் -9443446903
1923ஆம் ஆண்டில் டாக்டர் எட்வின் ஹப்பில் என்ற வானவியல் அறிஞர் 40 அங்குலத் தொலைநோக்கியின் மூலம் நமது ஆகாய கங்கை என்கிற நமது பால் வீதிக்கு அடுத்த பால் வீதி அண்ட்ரோமெடா ( ANDROMEDA ) யில் ஒரு நட்சத்திர தொகுதியை ஆராய்ந்தார் அது எண்ணற்ற நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு மாபெரும் அண்டம் என்பது தெரிந்தது.
டாக்டர் ஹப்பில் வானத்தின் பிற பகுதிகளை ஆராய்ந்து அதே போன்ற ஆயிரக்கணக்கான அண்டங்களைக் கண்டுபிடித்தார்.
அண்டங்களைப் பற்றி ஆராய்ந்து வரும் டாக்டர் ( Dr.Willilay ) வில்லிலே என்ற அமெரிக்கா, நம்முடைய விண்வெளியில் இதுவரை 1,800 கோடி கிரகங்கள் நம்மால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவைகளில் நூற்றில் ஒரு கிரகத்தில் சூரிய ஒளி பரவும் வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் 18 கோடி கிரகங்கள் தேறுகின்றன. இவற்றில் நூற்றில் ஒரு கிரகம்தான் உயிர்வாழ்வதற்குத் தகுதியுடையது என்று வைத்துக் கொண்டாலும் 18 லட்சம் கிரகங்கள் தேறுகின்றன. இவற்றில் நூற்றுக்கு ஒன்றில் தான் மனிதனைப் போன்ற அறிவுள்ள உயிரினங்கள் தோன்ற முடியும் என்று வைத்துக் கொண்டாலும், 180 கிரகங்கள் இருக்கின்றன. இவைகளில் நிச்சயம் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் உண்டு என்கிறார் விஞ்ஞானி டாக்டர் வில்லி-லே
1947ம் வருடம் உலகத்திற்கு புதியதொரு செய்தி, கென்னத் அர்னால்டு என்ற அனுபவமிக்க விமானி, தான் பறக்கும் தட்டைப் பார்த்ததாக அறிவிக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை ஒரு லட்சம் பேருக்கும் அதிக மானவர்கள் பறக்கும் தட்டைப் பார்த்ததாக செய்திகள் பதிவாகியுள்ளன.
கோடான கோடி நட்சத்திர மண்டலங்கள் இந்த பெரிய பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அங்கேயுள்ள கிரகங்களிலும் எத்தனை அற்புதங்களும், ஆச்சரியமான பரிணாம மாற்றங்களும் ஏற்படாமல் இருக்க முடியாது. ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகம் கிடையாது. ஒளி ஒரு விநாடிக்கும் 2,86,282 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. அந்த வேகத்தில் சென்றாலும் அருகில் உள்ள நட்சத்திரங்களை அடையக் கூட பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும். இதெல்லாம் மனிதக் கணக்கு! ஒளியின் வேகத்தை மிஞ்சும் பாக்கியவான்கள் இருப்பதாக இந்த மனிதன் கண்டுபிடித்திருக்கின்றான்
விஞ்ஞானமும் இதனை ஒப்புக் கொண்டுள்ளது. விமானம் அல்லது விண்வெளிக்கலத்தைப் போல் பறக்கும் தட்டும் பறந்து தான் பூமிக்கு வரவேண்டும் என்று அவசியமில்லை. ஒரு இடத்தில் மறைந்து இன்னோர் இடத்தில் அதுதோன்ற முடியுமென்றால்...? அந்த அளவுக்கு வேற்று கிரகங்களில் விஞ்ஞானம் வளர்ந்திருந்தால்?
இந்த பிரபஞ்சத்தில் சில இடங்களில் வானம் மடங்கி பின் விரிகிறது. உதாரணமாக, பேப்பரை இரண்டாக மடிக்கும் போது,அதன் இரு ஓரங்களும்ஒன்றாக இணைகிறது. அதாவது பேப்பரின் நீளம் இல்லாமல் பூஜியமாகிறது. பின் பேப்பரின் மடிப்பை பழைய மாதிரி விரித்தால், பேப்பரின் ஓரங்கள் பழையபடி ஒன்றுக்கொன்று தூரமாகிவிடுகிறது!
இதைப் போலவே தான் வானத்தின் தொலைவுகள் மடிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று இணைந்து வானத்தின் இருமுனைகளுக்கும் இடையே தூரம் இல்லாமல் ஆகிறது.
வானத்தின் தொலைவுகள் மடிக்கப்பட்டு பூஜியமாகக்கூடிய இடங்களும், அதைப் பயன்படுத்தக்கூடிய நுட்பங்களும் வேற்று கிரகவாசிகளால் பயன்படுத்தப்படலாம். மடங்கி விரியும் நுட்பத்தை அவர்கள் பாதையாகப் பயன்படுத்தப்படலாம். இதனால் ஒளியாண்டு ஒளிதூரம் என்பது அவர்களுக்கு பெரியதொரு பிரச்சனையாக இருக்காது. மடங்கி விரியும் நுட்பத்தை அவர்கள் பாதையாக பயன்படுத்துவதைப் பற்றி குர்ஆன் சூசகமாக சொல்கிறதோ... உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கின்றோம் குர்ஆன் (23:17)
பூமியில் பறக்கும் தட்டு இறங்கினால் அது விட்டுச் செல்லும் சாட்சியங்களை ஆராயத் தொடங்கினார்கள். பறக்கும் தட்டு வானில் பறந்து செல்லும் போது அதற்கு நேர் கீழாக உள்ள கார், லாரி விளக்குகளும், இன்ஜிலும் தானாக நின்ற அனுபவங்கள் ஆராயப்பட்டன. மேலே ஏதோ பறந்த போது தங்கள் கார் அல்லது, மோட்டார் சைக்கிளின் இன்ஜின் தானாகவே அணைந்து போனதாக யு.எஸ்.ஸில் மட்டும் 440 பேர் சாட்சியம் சொன்னார். பறக்கும் தட்டு மேலே பறக்கும்போது கீழேயுள்ள ஆடு, மாடு, குதிரைகள் போன்ற ஜீவராசிகள் விரண்டோடுகின்றன. இவற்றில் ஒரே ஒரு சம்பவம்.
1971 நவம்பர் 2ம்தேதி ரொனால்ட் ஜான்சன் என்னும் 16வயது இளைஞருக்கு விபரீதமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது.
எடல்போஸ் என்னும் சிற்றூரில் மாலை நேரத்தில் வயற்புரத்தில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார் அந்த இளைஞர்.திடீரென்று விசித்திரமான சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்த ஜான்சன் கண் எதிரே ஒரு பெரிய புதருக்குப் பின்னாலிருந்து ஒன்பது அடி விட்டத்துடன் கூடிய பறக்கும் தட்டு ஒளிவீசி வானில் கிளம்ப ஆயத்தமானது. காளான் வடிவத்தில் இருந்த அந்த பறக்கும் தட்டின் அடிப்பாகத்திலிருந்து வெளிப்பட்ட ஒளியின் வெப்பம் ஜான்சனை தாக்கியது. அவருடைய ஆடுகள் தலை தெறிக்க விரண்டோடின. ஜான்சனின் தோல், ஆங்காங்கே தீக்காயம் ஏற்பட்டதைப் போல் எரிந்து உரிந்து போனது. ஜான்சன் போட்ட அலறல் கேட்டு அவருடைய பெற்றோரும், பக்கத்து வீட்டுக்காரர்களும் ஓடி வந்த போது.... நீல நிற ஒளியை உமிழ்ந்தவாறு அந்த விண்வெளிக்கலம் சற்று தொலைவில் பறந்து மறைந்தது அந்த விண்கலத்தினுள் பளிச் பளிச்சென்று விளக்குகள் எரிந்தன. ஜான்சன் முகத்தை மூடியவாறு அலறிக் கொண்டிருக்க, அருகில் புல் தரைவட்ட வடிவமாக எரிந்து எரிந்து கொண்டிருந்தது. இப்படியொரு சேதியை மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் என்ற புக்கில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஸஹீஹ் முஸ்லிம், முதல் பாகத்தை தற்செயலாக படிக்க நேர்ந்தது அதில்..... உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் ஓர் இரவில் எனது பேரீச்சங்கனிகளை உலர வைக்கும் களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். (சூராஅல்பகரா என்று புகாரி 5018 கூறுகிறது) அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது. நான் தொடர்ந்து ஓதிக் கொண்டே இருந்தேன். மீண்டும் குதிரை மிரண்டது. தொடர்ந்து நான் ஓதிக் கொண்டேயிருந்தேன். மீண்டும் அது மிரண்டது. அங்கு படுத்திருந்த என் மகன் யஹ்யாவை அந்தக் குதிரை மிதித்து விடுமோ என்று நான் அஞ்சிய போது அதை நோக்கி எழுந்து சென்றேன். அங்கு மேகம் போன்றதொரு பொருளை என் தலைக்கு மேலே கண்டேன் அதில் விளக்குகள் போன்ற பிரகாசிக்கும் பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்தது என் கண்ணை விட்டும் மறைந்து விட்டது. பிறகு நான் அதைக் காண முடியவில்லை.
காலையில் நான்அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு பாதி இரவில் எனது பேரீச்சக்களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கையில் என் குதிரை கடுமையாக மிரண்டது என்று நடந்ததைச் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இப்னு ஹுளைர் தொடர்ந்து ஓதியிருக்கலாமே ...? என்று கேட்டார்கள். நான் தொடர்ந்து ஓதினேன்... மீண்டும் எனது குதிரை மிரண்டது என்று சொன்னேன். இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே! என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் கூறிய போது, நான் தொடர்ந்து ஓதினேன். மீன்டும்எனது குதிரை மிரண்டது என்று சொன்னேன். இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே! என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் கூறிய போது, என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அவன் அதனருகில் இருந்தான். எனவே நான் திரும்பிச் சென்றேன். நான் எனது தலையை உயர்த்தி வானைப் பார்த்த போது, அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற பிரகாசிக்கும் பொருள்கள் இருந்தன.நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து என் கண்ணைவிட்டும் மறைந்து விட்டது. பிறகு நான் அதைக் காணவில்லை என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் தாம். அவர்கள் நீர் தொடர்ந்து ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களை விட்டும் அது மறைந்திருக்காது என்று கூறினார்கள். (முஸ்லிம் 1460)
அடிக்கடி குர்ஆனை ஓதுங்கள் வானவர்களுக்கு மட்டுமல்ல வல்ல நாயகனுக்கும் அது பிடிக்கும் என்பதைத் தான் உணர முடிகிறது. எங்கே குர்ஆனைத் தூக்கி விட்டீர்களா? பறக்கும் தட்டைப் பார்கக முடியுமோ ... முடியாதா...தெரியவில்லை. குர்ஆனை ஓதினால் இன்ஷா அல்லாஹ் மேகம் போன்ற பொருளையும் அதனுள் விளக்குகள் பிரகாசிப்பதையும் காணலாம்.