வார்த்தையின் வலிமை
கவிஞானி மஹ்பூபு சுப்ஹானி
தனக்குரிய மென்மையைத் தென்றலாகக் காட்டும் காற்று தனக்குள் இருக்கும் வன்மையைப் புயலாக; சூறாவளியாக நிரூபித்து விடுகிறது.
சாதாரணமாகத் தெரியும் காற்று சாதாரணமானதில்லை. காற்று இல்லாமல் உயிரினங்களின் உலக வாழ்வு நீள்வதில்லை.
அதுபோல்தான், எந்த வார்த்தையும் சாதாரணமானதில்லை. வார்த்தைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
வெளிச்சத்தை விதைப்பதற்கும், இருளை விரிப்பதற்கும் வலிமை பெற்றவை வார்த்தைகளாகும்.
மென்மையாகத் தெரியும் ஒரு வார்த்தை இதயத்தைக் கீறிக் கிழித்துத் தொங்க விடுவதில்லையா ?
ஒரு வார்த்தை கொலைக் கருவியாகி சகமனித உயிர்களைப் பரலோகப் பயணம் அனுப்பி வைப்பதில்லையா ?
இந்த உலகத்தின் அதிகாரக் கொடியவர்களின் வன்ம வார்த்தைகளால் விளைந்த விபரீதங்கள்; உயிர் இழப்புகள்; உதிரத் தெறிப்புகள்; உடமை அழிப்புகள் கொஞ்சமா நஞ்சமா? கணக்குக் காட்டத்தான் முடியுமா?
ஒரு தளபதியின் வார்த்தைகள் எத்துணைப் பெரிய உத்வேகத்தைப் போர் வீரர்களுக்கு ஊட்டி விடுகின்றன.சீர்திருத்தச் சிந்தனையாளர்களின் வார்த்தைகள் நெம்பு கோல்களாகி உலகத்தையே புரட்டிப் போட்ட வரலாறுகளை நாமறிவோம்.
கூழாங்கற்களையெல்லாம் மாணிக்கங்களாக மாற்றிவிடும் ரஸவாதத் திறமை மாமேதைகளின் மென்மையான வார்த்தைகளுக்கு உண்டு.
தத்துவ ஞானிகளின் வார்த்தைகள் தகுதி இல்லாதவர்களையும் தகுதி உயர்வு செய்திருக்கிறது.
மெய்ஞ்ஞானிகளின் வார்த்தைகள் பாமரர்களைக் கூட மேதைகளாக ஞானவான்களாக புதிதாய்ப் பிறக்க வைத்து மகத்துவப்படுத்தியிருக்கிறது.
வார்த்தை விதைகளின் வெளிப்பாடு ஆச்சரியப்படுத்தும் விளைச்சலை மகசூலாக்கி விடுகிறது.
நறுமணம் நிறைந்த வார்த்தைகளால் நாம் ஆராதிக்கப்படுகிறோம். வெளிச்சக் கம்பளம் விரிக்கும் வார்த்தைகளால் நாம் விரிவைப் பெறுகிறோம்.
மாறாக, துர்நாற்ற வார்த்தைகள் நிம்மதியான நேரங்களை நீறாக்குகின்றன ; நமது மனத்தைத் துயரச்சுவற்றில் ஆணிகளால் அறைகின்றன.
அதனால் தான் நா காப்பது நல்ல செயல் என்ற அறப்போதனையை வாழ்வியல் நெறி வலியுறுத்திச் சொல்கிறது.
குளிர்ச்சியான வார்த்தைகளின் விளைநிலமாக நா இருக்க வேண்டும் என்பதற்காகவே அதை ஈரத்தில் வைத்திருக்கிறான் இறைவன்.
என்றாலும், பல பொழுதுகளில் பற்றவைத்துப் பெருந்தீயாக்கும் பாதக வேலையை ஈரத்தில் இருந்தே செய்கின்ற இழிசெயலை அது விட்டுவிடுவதில்லை.
அப்படிப்பட்ட நா விழையும் பிரார்த்தனையை இறைவன் எப்படி விலை தந்து வாங்குவான் ?
தன் ஈர குணத்தை இழந்துவிடாத நாவு யாரிடம் இருக்கிறதோ அவரின் அத்தனைப் பிரார்த்தனைகளையும் இறைவன் கொள்முதல் செய்து கொள்வான்.
மேலும், ஆதரவற்ற அநாதைகள்,கவனிப்பாரற்ற ஏழைகள், நிர்க்கதியாய் நிற்பவர்கள் ; துரோகங்களாலும், கொடுமைகளாலும் நசுக்கப்பட்டவர்கள் முதலானவர்களின் வார்த்தைகளற்ற வார்த்தைகளே இறைவனின் சன்னதியில் உடனடி கவனிப்பிற்கு உள்ளாகின்றன.
அத்தகையோரின் மனங்களுக்குள் முகிழ்க்க முடியாமல் சாய்ந்துச் சரிந்த முறையீடற்ற முறையீடுகள் நித்திய நாயனால் நிராகரிக்கப்படுவதில்லை.
ஆதரவற்ற அகத்தின் மவுனக் கதறல் மறையோனின் பதில் வாங்காமல் நீங்குவதில்லை.
பலகீனமானவர்களின் வார்த்தைகள் பலகீனமானதாக இருப்பதில்லை. அதன் பயணத்திற்கு ஒளியின் பயணம் கூட ஈடாவதில்லை.
நிர்க்கதியாய் நிற்போரின் நாவில் முறையீடாய்ப் பிளக்கும் ஒரு வார்த்தை தோன்றிய நொடியிலேயே அர்ஷைத் தட்டும்அபார வலிமையைத் தனக்குரியதாய் ஆக்கிக் கொள்கிறது.
முறைகேடாக வாழ்வோரின் முறையீடுகள் அவர்களின் தலைக்கு மேலே உயரும் காகிதத் தகுதியைக் கூட பெறுவதில்லை.
நல்லோரின் முறையீடுகளுக்கும் நல்லவர் அல்லாதவரின் முறையீடுகளுக்கும் பாரதூர வித்தியாசம் உண்டு. முன்னவரின் முறையீடுகளைச் செவியேற்கும் அல்லாஹ் பின்னவரின் பிரார்த்தனைப் பிதற்றல்களுக்கு முகந்திருப்பி மவுனத்தில் நீள்கிறான். அவனது முகத்தை முன்னோக்கச் செய்யும் இறைத்துதியும், நபி வாழ்த்தும் மென்மையானவைதாம். ஆனால், அவற்றின் வலிமை மென்மையானவை அல்ல.
நரகத்தின் கதவை அறைந்துசாத்தவும், சுவர்க்கத்தின் கதவைச் சட்டென்று
திறக்கவும் பேராற்றல் மிக்கவையாக அவை ஆகின்றன.
அப்படிப்பட்ட அபார ஆற்றல் நமது வார்த்தைகளுக்கு வாய்க்க வேண்டுமானால் நமது நாமொழியும் நல்ல சொற்கள் நாயகனின் துதியாகவும், நாயக வாழ்த்தாகவும் (ஸலவாத்) ஆக வேண்டும்.
அப்படியானால், நமது மென்மையான வார்த்தைகளின் உள்வலிமையை நம்மாலேயே உணர முடியாமல் அவை உறுதியாய் இறுகிப்பெருகும். மறுமையில் பக்க பலமாகி நம்மைத் தாங்கி மகத்துவப்படுத்தும்.
உலக வாழ்வில் வீண் விரயம் செய்யப்படாத எல்லா வார்த்தைகளும் நம்மை ஆசீர்வதித்து மகத்துவப்படுத்தும். நம்மால் பயன்படுத்தப்பட்ட மதிப்பு மிக்க வார்த்தைகளின் வலிமையின் முழுமை மறுமை நாளில் நிரூபணமாகும்.