தொடர்... தொடர் எண்-30
வஹாபிகள் சஹாபிய வேடங்களில்
கறாமாத்தைக் கொண்டு தகப்பனின்றி பிள்ளையை வெளிப்படுத்த அவுலியாக்களுக்குச் சக்தியுண்டா ? என்று ஆரிபுபில்லாஹ் ஷைகு முஹம்மது கலீலீ. ஷாபியீ (றலி) அவர்களிடம் வினவப்பட்டதற்கு அங்ஙனம் செய்ய அவர்களுக்குச் சக்தியுண்டு என்பதாக விடைபகர்ந்தார்கள்.
இவ்விபரம், பதாவா-கலீலீ, 1-வது பாகம், 79-வது பக்கத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
தகப்பனின்றி ஹஜ்ரத் ஈஸா(அலை) அவர்கள் பிறந்த வரலாறு குர்ஆன் ஷரீபில் கூறப்படுகின்றது. அவுலியாக்களின் கராமாத்தில் மற்றொன்றையும் தருகின்றோம். பாருங்கள்.
ஹஜ்ரத் ஷாஹ் ஹஸன் அலீ அஜீமாபாதீ (றலி) அவர்கள் வலுப்பமான வலியுல்லாஹ்வாகவும், பிர்தவுஸிய்யாத் தரீக்காவின் ஷைகாகவும் இருந்தார்கள். அவர்களது முரீதுகளில் ஒருவருக்கு வெகு காலமாகக் குழந்தையில்லை. அவரது மனைவி மலடியாக இருந்தாள். அவர் தமது இக்குறையை ஷைகு அவர்களிடம் முறையிட்டார். ஷைகவர்கள் அவரது மனைவியை கல்வத்திலிருக்கச் செய்து, கன்னிப் பெண் யாரும் அப்பக்கத்தில் போகக் கூடாதென்று தடை விதித்திருந்தார்கள்.கல்வத்திலிருந்த அப்பெண்மணியை வெளியிலிருந்து கொண்டு ஷைகவர்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்கள். தற்செயலாய் ஒன்பது வயதுள்ள ஒரு சிறுமி, கதவு துவாரத்தின் வழியாய் நோக்கிப் பார்த்தாள். ஷைகவர்களின் கூர்மையான நோக்கு அந்தக் கன்னியின் மீதும் விழுந்தது. அந்தப் பெண்ணும் கர்ப்பவதியானாள். அந்தச் சிறுமியும் கர்ப்பமானாள். இவ்வற்புத வரலாறு, மிர்ஆத்துல்-கவுனைன் என்ற நூலில்,443-வது பக்கத்தில் சொல்லப்படுகின்றது.
ஆகவே, எக்காலமும் அவுலியாக்களுக்கு கறாமாத்துச் செய்ய சக்தியுண்டு ; மவுத்தானவர்களை ஹயாத்தாக்கவும் தத்துவமுண்டு ; பிதாவின்றி பிள்ளையை வெளிப்படுத்தவும் வல்லமையுண்டு ; அவுலாது, பிள்ளைக் குட்டி பாக்கியம் வேண்டுமென்று அவர்களிடம் கேட்பதும் ஆகும்.
இவை எல்லாம் குர்ஆன்,ஹதீது, பெரியார்களின் சரித்திரங்களைக் கொண்டு ஸ்திரமாகின்றன. இவற்றை மறுப்பவன் சத்தியத்தை மறுப்பவனாவான்.
கப்ரு, ஜியாரத்து கூடுமா ?
அல்லாஹ்வின் தனிப்பட்ட அருளுக்கும், அன்புக்கும் பாத்தியமான இப்பேர்ப்பட்ட நாதாக்களான அவுலியாக்கள், மஹான்கள், மாதவப் புருடர்களது கப்ரு ஷரீபுகளுக்குச் சென்று ஜியாரத்துச் செய்வது ஆண், பெண் இரு பாலருக்கும் ஸுன்னத்தும், முஸ்த்தஹப்புமாகும்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தங்களது அன்னையின் கப்ருக்குச் சென்று ஜியாரத்துச் செய்திருக்கின்றார்கள். மேலும் அவர்கள் உஹது யுத்தத்தில் ஷஹீதான ஸஹாபாக்களுடைய கப்ருகளுக்குப் போய் ஜியாரத்துப் புரிந்திருக்கின்றார்கள். ஸஹாபாக்களையும், மற்றவர்களையும் ஜியாரத்திற்குப் போகும் படியாக ஏவி இருக்கின்றார்கள். அங்ஙனமே ஸஹாபாக்களும் கப்ருக்களுக்குச் சென்று ஜியாரத்துச்செய்திருக்கிறார்கள் இவ்விபரங்களைப் பற்றிய ஆதாரங்கள் ஸஹீஹுஸ் ஸித்தா ஹதீது கிரந்தங்களிலும், மிஷ்காத்து ஷரீபிலும் வந்துள்ளன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி, நான் உங்களைக் கப்ருகளை ஜியாரத்துச் செய்வதை விட்டும் ஏற்கனவே விலக்கி வந்தேன். (ஆனால்) இப்போது அவைகளை ஜியாரத்துச் செய்யுங்கள் (என்று ஏவுகிறேன்). ஏனெனில் நிச்சயமாக அது மறுமை வாழ்க்கையை நினைப்பூட்டக் கூடியதாக இருக்கிறது என்று திருவாய் மலர்ந்தருளிய ஹதீது மிஷ்காத் ஷரீபிலும்,ஸஹீஹு முஸ்லிம், இபுனு மாஜா, திர்மிதி, அபூதாவூது, நஸயீ முதலிய ஹதீது கிரந்தங்களிலும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இத்திருவாக்கைக் கவனிக்குங்கால் கபுருகள் இருக்கும் தலங்களுக்குச் சென்று ஜியாரத் செய்ய வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்ட தெல்லாம் நல்ல மனதைப் பெற்று, நற்கிரியைகளை யனுஷ்டித்து,மோட்ச கதியை அடைய வேண்டும் என்பதற்கேயாம்.
கபுருகள் மறுமையைப் பற்றி ஞாபகப்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன என்ற நாயக வாக்கியமும் ஸஹீஹு முஸ்லிம் கிரந்தத்தில் காணப்படுகின்றது.
எனவே கபுறுகள் மறுமை வாழ்க்கையை நினைப்பூட்டக் கூடிய ஞாபகார்த்தம் சின்னங்களாகவே இருக்கின்றன என்பதை ஹதீதுகளே எண்பித்துக் காட்டுகின்றன.
எம்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தான பின்பு, பெண்களுக்கரசி, ஸெய்யிதத்துனா ஆயிஷா ஸித்தீக்கா (றலி) அவர்களது இல்லத்தின் அறையிலேயே தபன் செய்து அடக்கப் பெற்றார்கள். ஆயிஷா நாயகி (றலி) அவர்கள் திறந்த முகத்துடன் அந்த அறைக்குச் சென்று தங்களது கணவர் பெருமான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், வேறு இடத்தில் அடக்கமாகி இருக்கும் தங்களது சகோதரர் அப்துர் ரஹ்மான் (றலி) அவர்களது கபுருக்கும் சென்று ஸலாம் கூறி, அவர்களை ஜியாரத்துச் செய்திருக்கிறார்கள். தங்களது அருமைத் தந்தை ஸெய்யிதுனா அபூபக்கர் ஸித்தீக்கு (றலி) அவர்கள் வபாத்தானதும் அந்த அறையிலேயே அடக்கம் செய்யப்பட்ட பின்பும் திறந்த முகத்துடனேயே ஜியாரத்துச் செய்வது வழக்கம்.
ஸெய்யிதுனா உமர் பாரூக் (றலி) அவர்கள் வபாத்தானதும் அவர்களும் அந்த அறையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள் அன்று முதல் அன்னையார் ஆயிஷா நாயகி (றலி) அவர்கள் நாணத்துடன் முகத்தை மூடினவர்களாய் புர்காவுடன் சென்று ஜியாரத்துச் செய்து வரலானார்கள். இவ்விபரம் மிஷ்காத் ஷரீபில் கூறப்படுகின்றது.
மேலே கண்ட ஹதீஸைக் கொண்டு தெளிவாகத் தெரிய வருவது யாதெனில் :-
கபுருகளில் ஸாலிஹீன்கள் ஹயாத்துடனேயே இருக்கிறார்கள் என்பதும், அவர்களை யார் யார் ஜியாரத்துச் செய்கிறார்களோ அவர்களை அந்த ஸாலிஹீன்கள் நன்கு அறிகின்றார்கள் என்பதும் தெளிவாகப் புலனாகிறது. இக்காரணம் பற்றியே அவர்களை ஜியாரத்துச் செய்பவர்கள் அதபு மரியாதையுடன் ஜியாரத்துச் செய்ய வேண்டியது கடமை. வாஜிபு என்றும் இவர்களின் பதவிக்குத் தக்கவாறு ஹயாத்தாயிருக்குங் காலத்தில் அவர்களுடன் ஒழுகி நடந்து கொள்வது போல, வபாத்திற்குப் பிறகும் அவர்களை ஹயாத்தானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதாகக் கருதி, மரியாதையுடனும்,
பேணுதலுடனும் நடந்து கொள்வது அத்தியாவசியமாகின்றது ஏனெனில். தன்னை ஜியாரத்துச் செய்யும் மனிதர்களுக்கு அவர்களின் ஒழுக்கப் பக்திக்குத் தக்கவாறு மகானின் உதவியுபகாரம் உண்டாயிருக்கும் என்று ஷைகுல் ஹிந்து, அல்லாமா அப்துல் ஹக்கு, முஹத்திதுத் திஹ்லவீ (றஹ்) அவர்கள் தர்ஜுமா மிஷ்காத் 1-வது பாகம், 656-வது பக்கத்தில் எடுத்தறிவிக்கி றார்கள்.
மேலும் ஸெய்யிதத்துனா,பாத்திமா நாயகி நாச்சி (றலி) அவர்கள் ஸெய்யிதுனா ஹம்ஜா (றலி) உடைய கப்ரை ஜியாரத் செய்வதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போய்வந்தார்கள் என்பதாக, ஷைகுல் இஸ்லாம். இமாம் பக்ருத்தீன். ஐனீ ஹனபீ (றஹ்) அவர்கள், உம்மத்துல்-காரு-ஷரஹு, ஸஹீஹுல் புகாரி யில் உரைத்துள்ளார்கள்.
ஆண், பெண் யாவரும் வலிமார்களுடைய கப்ரு, ஜியாரத்திற்காகப் போவது முஸ்த்தஹப்பாகும் என்று பதாவா ஹம்மாதிய்யா, பஹ்ருர்-ராயிக், ஜாமிஉர்-ருமூஸ், றத்துல்-முஹ்தார் முதலிய கிரந்தங்களும் கூறுகின்றன.
மேலும், கபுருகளை ஜியாரத்துச் செய்கின்ற பெண்களை அல்லாஹ் லஃனத்துச் செய்கிறான். என்ற ஹதீதை ஸனது-தலீல் பிடித்து சிலர் பெண்கள் ஜியாரத்திற்குச் செல்லக் கூடாது என்று சொல்லுகிறார்கள். இந்த ஹதீதை ஊன்றுதல் பிடிப்பது ஸஹீஹ் ஆகாது. ஏனெனில், இந்த ஹதீது ளயீபு என்று இமாம் முஹத்திது இபுனு ஹஜர்அஸ்க்கலானீ (றலி) தக்ரீபு என்ற கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் ஆகையால் இந்த ளயீபான ஹதீதைக் கொண்டு ஏவல், விலக்கல்களுக்கு அத்தாட்சி ஊன்றுதல் பிடிக்கப்படமாட்டாது என்று அல்லாமா ஸெய்யிது அமீர் அலவீ அஜ்மீரி அவர்கள் இஹ்லாக்குல் வஹ்ஹாபீன் என்ற நூலில் தக்க ஸனது ஆதாரத்துடன் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேற்சொன்ன நூலை ஸுன்னத்து ஜமாஅத்து உலமாக்கள் பலர் சரி கண்டு ஒப்பம் வைத்துள்ளார்கள்.
அவுலியாக்கள், உலமாக்கள் உடைய கபுருகளைப் பெண்களும் ஜியாரத்துச் செய்வது ஸுன்னத்தாகும். அது விலக்கப்பட்டதல்ல என்று இமாம் ஷைகு முஹம்மது கலீலீ ஷாபியீ (றஹ்) அவர்களுடைய பதாவா -கலீலீ -வது பாகம்,251 -வது பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இஸ்லாமின் ஆரம்ப காலத்தில், சில பெண்கள், ஜியாரத்திற்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்கு நின்று ஒப்பாரி வைப்பதும், கூக்குரலிடுவதுமாக இருந்தனர்.அந்தச் சந்தர்ப்பத்தில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கபுருகளை ஜியாரத்துச் செய்யும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று கூறினார்கள். பின்பு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் முன்பு உங்களை ஜியாரத்தை விட்டும் விலக்கி வந்தேன். இப்போது நீங்கள் ஜியாரத்துச் செய்யுங்கள் என்று உரைத்து ஜியாரத்தைப் பற்றி ஏவுதல் செய்தார்கள். இந்த ஹதீதின் படி, முன்பு விலக்கிய அந்த ஹதீது(மன்ஸூகு) மாற்றப்பட்டதாகி விட்டது என்ற முஹத்திதீன்கள், முபஸ்ஸிரீன்கள் விளக்கம் தருகிறார்கள். ஹஜ்ரத் அபூஹுரைறா (றலி) அவர்களும், ஹஜ்ரத் இபுனு அப்பாஸ் (றலி) அவர்களும் எடுத்தறிவிக்கும் ஜியாரத்தின் ஏவுதல் பற்றிய இந்த ஹதீதின் விளக்கத்தில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் ஜியாரத்துச் செய்யுங்கள் (பஜூரூஹா) என்று சொன்னதில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து அடைய வளைத்தே சொல்லப்பட்டுள்ளது. இது கொண்டு ஆண், பெண் இருபாலருக்கும் ஜியாரத்துச் செய்வதற்கு உத்தரவு கிடைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இவ்விபரங்கள் ஷரஹு-பர்ஜக், அஷிஃஅத்துல் லம ஆத்- தர்ஜுமா-மிஷ்காத் முதலிய கிரந்தங்களில் தரப்பட்டுள்ளன.