• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

அற்புத அகில நாதர்

(சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள்)



பிறந்த நாள்

 

பன்னி ரண்டு நாளிதே

பதிபி றந்த நாளிதே

மன்னு யிர்க ளுக்கெலாம்

மதிபி றந்த நாளிதே.                                   (1)

 

மன்னுயிர் : நிலை பெற்றுள்ளவுயிர்

மண்ணுயிர் : பாடபேதம்

 

 

வஞ்ச கர்கள் கூடிய

மக்க மாந கர்தனிற்

கஞ்சஞ் சேற் றலர்ந்ததாய்க்

கதிபி றந்த நாளிதே.                                    (2)

 

கஞ்சம் : தாமரை

கதி : புகலிடம்

 

 

நாடுவளம்பெறல்

 

நபிபி றந்த போதினில்

நலங்கு றைந்த நாடிது

தபமொ ழிந்து வளமிகத்

தண்மை கொண்டொ ளிர்த்ததே.               (3)

 

 

வரண்டி ருந்த வாறுகள்

வாரி நீர்நி றைந்தென

இருக ரைபு ரண்டுநீர்

எங்கு மோட வாயதே                                  (4)

 

வாரி : கடல்

 

 

தீயணைதல்

 

பதிபி றந்த போதினிற்

பார சீகந் தன்னிலே

அதியெ ரிந்து வந்ததீ

அணைந்த தண்ணல் புதுமையே               (5)

 

அதி : மிகுதி

 

 

சிலைகள் வீழ்தல்

 

வணங்கு தெய்வச் சிலையெலா

மசைந்து கீழ்வி ழுந்தன

குணங்கு ளிர்ந்த திங்களார்

குவல யத்து தித்ததால்                               (6)

 

திங்கள் : மதி

குவலயம் : பூமி

 

 

மாளிகை அழிதல்

 

அண்ண லார்பி றந்தனர்

அன்று கிஸ்ரா மாளிகை

மண்ணில் வீழ்ந்த ழிந்தது

வல்ல வன்றன் கிருபையால்.                      (7)

 

 

வாழ்த்துக் கூறல்

 

குழந்தைப் பருவம் தன்னிலே

குறையி லாத குரிசிலை

வழியிற் கூட்டிச் செல்கையில்

வாழ்த்துக் கூறு மாமெலாம்                          (8)

 

குரிசில் : தலைவர், பெருமை மிக்கவர்

 

 

மதிபிளத்தல்

 

மதிபி ளந்த மாநபி

மண்ணில் வந்த மாமதி

பதியின் மிக்க மாபதி

மறைகொ ணர்ந்த சீர்நபி                                (9)

 

 

கதிரவன் வெளியாதல்

 

அத்த மித்த கதிரவ

னான சுத்த சோதியை

வித்தை யாக விண்ணுயர்

மீட்டி வைத்தார் மாநபி.                                 (10)

 

 

கல்லிற் காற் பதிதல்

 

சேற்றிற் காற்ப திந்த்தென

செம்மை யான பாறைமேற்

காற்ப தித்த பூபதி

கருணை நாத ரெம்நபி.                                  (11)

 

 

மண்ணிற் காற் பதியாமை

 

மணனி றைந்த பூமியில்

மலர்ப்ப தங்கள் வைக்கவே

மனநி றைந்த நபிபதம்

வழக்கம் போற்ப திந்திலை.                           (12)

     

பதம் : பாதம்

மண னிறைந்த : மணல் + நிறைந்த

மனநிறைந்த : மனம் + நிறைந்த

 

 

விரலிலிருந்து நீர் ஓடல்

 

விரலி டையி னின்றுநீர்

வேக மாகச் சொரிதரத்

திரண்டு நின்ற மாந்தர்கள்

தேக சுத்தி செய்தனர்.                                     (13)

 

தேக சுத்தி : வுளூஉ

 

 

உணவு அதிகமாதல்

 

ஒருவ ருண்ணப் போதுமாம்

ஊணை நின்ற யாவர்க்கும்

கருணை யண்ண லீந்தனர்

கரங்க ளாலுங் காணவே.                                  (14)

 

 

கண்பார்வை பெறல்

 

பார்வை யற்ற கண்ணினிற்

பதிக ணாதர் துப்பியே

கூர்மை யான பார்வையைக்

கூட்டி வைத்தா ரெம்நபி.                                 (15)

 

பதிகணாதர் : பதிகள்+நாதர்

 

 

உப்புக் கிணறு நன்னீராயது

 

ஒப்பி லாத வெம்பிரான்

உப்புக் கிணற்றிற் றுப்பவே

தப்பி லாத வினியநீர்த்

தன்மை கொண்ட தேயது.                 (16)

 

நீரித்தன்மை : நீரின் தன்மை

 

 

ஊற்று வெளிப்படல்

 

காலி னாலு தைத்தலும்

கருனை நாதர் நீரது

மேலெ ழுந்த தூற்றதும்

மீறிப் பாய வாயது.                        (17)

 

 

இறந்த சிறுவர் எழுந்து நிற்றல்

 

இறந்த சிறுவ ரிருவரும்

இறையி நாத ரிறைஞ்சிடச்

சிறந்தெ ழுந்து நின்றனர்

சீர்மை நபியி னற்புதம்.                    (18)

 

 

கொலையுண்ட கிருத்தவன் கொலைஞனைச்சொல்லல்

 

கொலையின் மாண்ட கிருத்தவன்

கோவி றைஞ்ச வெழுந்தனன்

கொலைஞ னையுஞ் சொல்லினன்

குருக ளாரி னற்புதம்                        (19)

 

கோ : ரஸுல் நாயகம்

குருகளார் : ரஸுல் நாயகம்

 

 

ஆட்டின் எலும்பு ஆடாக எழுந்தது

 

கறிச மைத்த ஆடுதன்

கற்றை யெலும்பிற் கையினை

மறையி னாதர் வைத்ததும்

மற்றெ ழுந்து நின்றதே.                         (20)

 

கற்றை : எலும்புக்குவை

மற்று : அசைநிலை



திருப்பெயரின் அருஞ் சக்தி

 

நாய கத்தி நற்பெயர்

நவின் றபோது நலிந்ததா

யாய வென்பு முயிர்பெறும்

நாய கத்தி னற்புதம்.                        (21)

 

நலிதல்: வருந்தல், அழிதல்

என்பு: எலும்பு உடம்பு

 


மண்குருவி உயிர் பெற்றது

 

மண்ணிற் குருவி செய்தனர்

மண்ணி லதனைப் போட்டனர்

நுண்ணு முயிரைப் பெற்றது

விண்ண்ற் பறந்து சென்றது.                 (22)

 

நுண்ணுமுயிர்: நுட்பமானவுயிர்                                                                                                                            

                                                                                       


முகிற் கவிதை நிழற்றல்

 

கரிக்கும் வெங்க திர்தனைக்

கருணை வள்ளல் நடந்திட

விரிக்கு நீழன் முகிலெலாம்

மேன்ம  றைத்த மாண்பதே.                 (23)

 

நீழல்: நிழல் : முதல் நீளல்

மேன் மறைத்தல்: தலைமேல் வந்து மறைத்தல்

 

 

முகில்க வித்த கவிகையில்

மூவு கத்தி னண்ணலார்

மகிழ்ந்து வந்த புதுமையை

மண்ணும் விண்ணும் செப்புமே.              (24)

 

முகில்: மேகம்

கவிகை: குடை

 

 

மறைகொ ணர்ந்த மாநபி

வந்து போக வெயிலினை

மறைத்து வந்த மேகந்தம்

மாண்பு செப்ப வியலுமே.                   (25)

 


நிழல் வீழாமை

 

விரிக திர்தன் சோதியின்

மிக்க சோதி நாதரின்

அருநி ழற்ற ரையினில்

அன்று மின்றும் வீழ்ந்திலை.                 (26)

 

 

நபிகணாதர் திருக்கரம் வைத்த சிரம்பரிமளித்தல்

 

அன்பு நாதர் கரந்தனை

அநாதை யர்தம் சிரந்தனில்

இன்ப மாக வைக்கவே

இவர்ந்து றையும் பரிமளம்.                 (27)

 

இவர்தல்: உயர்ந்தெழுதல்

பரிமளம்: நறுமணம்

 

 

கரம் பரிமளித்தல்

 

கையை முத்த மிட்டவர்

கைகள் நன்கு கமழுமாம்

செய்ய கமலக் கரங்களே

தீர நாதர் கரங்களாம்.                       (28)

 

செய்ய: சிவந்த

தீர: வலிமை பொருந்திய

 

 

நோய் நீங்கல்

 

அங்கை வைக்க நோய்களும்

அழியும் பித்துப் பேய்களும்

தங்கி டாது போய்விடும்

தன்மை மிக்க நாதரே.                      (29)

 

அங்கை: உள்ளங்கை

 

 

எச்சிற்  பூசிவிடம் நீக்கல்

 

குகையு ளபூ பக்ரினைக்

கொட்டி விட்ட பாந்தளின்

மிகைத்த வலியை நீக்கிடத்

தகைய ரெச்சிற் பூசினர்.                     (30)

 

அபூபக்ர்: முதலாம் கலீபா

பரந்தள்: பாம்பு

தகையர்: தலைமையுடைய நாயகம்

 


புறவம். சிலம்பி மறைத்திடல்

 

புறவம் சிலம்பி குகையினுட்

பறந்த ததுவும் வலையினை

நிறையப் பின்னி நின்றதும்

நீத நபியி னற்புதம்.                        (31)

 

புறவறம்: புறா

சிலம்பி: சிலந்தி

 

 

பகைவர் கண்டிலர்

 

உண்மை நபிகட் குகையினுள்

ஒதுங்கி நின்ற போதினில்

வன்ப கைகள் வந்துமே

கண்டி லாது போயினர்.                     (32)

 

வன்: கொடிய

 


வானின்று ஊண் இறங்கல்

 

வானி னின்று ரொட்டியும்

மச்சக் கறியுந் தட்டினில்

கோன வர்கள் வேண்டிடக்

குறையி லாது வந்தன.                     (33)

 

மச்சம்: மீன்

கோன்: அரசர், பெருமானார்

 

 

தங்கச்சிலை மரமாதல்

 

தங்கச் சிலையை மரமிது

தானோ வென்ன நபிகளார்

அங்கு விக்கி ரகமதும்

அன்று மரம தானதே.                       (34)

 

 

ஒட்டகையைக் காட்டல்

 

மறையின் தூத ரொட்டகை

மறைந்து போன போதினில்

உறைந்தி ருக்கு மிடந்தனை

உறுதி யாகக் காட்டினர்.                     (35)

 


தங்க மலைகளையே வேண்டாமெனல்

 

உயர்ந்த தங்க மலையெலாம்

உலக நாதர் வறுமையை

அயர்வி லாது போக்கிட

அழைத்து நின்ற புதுமையே.                 (36)

 

அயர்வு: சோர்தல், தளர்தல்

 

 

அகிலந் தன்னைத் தங்கையின்

அங்கை வைத்துக் காத்திடும்

உகத்தி னாதர் வேண்டிலர்

உயர்வைக் காட்ட வேண்டியே.               (37)

 

தங்கை: தம்கை

அங்கை: உட்கை

 

 

ஊணின் துதி

 

கரங்கள் கொண்ட வுண்வெலாம்

கருத்த னைத்து தித்தன

மரமொ ழிந்து நின்றது

வல்ல நாதர் புதுமையே.                    (38)

 

மரமொழிந்து: மரம் + மொழிந்து

 

 

கற்களின் துதி

 

கையி ருந்த கற்களும்

கருத்த னைத்து தித்தன

மெய்சி லிர்க்கும் புதுமைகள்

வித்தை யன்று சத்தியம்.                    (39)

 


அழைத்ததும் அசரங்கள் அசைந்து வரல்

 

வருக வென்ற ழைக்கவே

மரங்கள் வந்த வாறெலாம்

வரிக ளொத்தி ருந்தமை

வழக்க றுந்த புதுமையே.                    (40)

 

 

மரத்தை வாவென் றழைத்தனர்

வந்த போது போவெனச்

சிரத்தை யாழ்த்திச் சென்றது

சீர்ந பிய்யின் புதுமையே.                         (41)

 


கல்நீரில் மிதந்துவரல்

 

அக்க ரையி ருந்ததோ

ரருங்க லைய ழைத்ததும்

மிக்க புதுமை நீரினில்

மிதந்து வந்த தேயது.                             (42)

 

 

அக்க ரையிற் கற்களும்

அருமை நாதர் கூப்பிட

அக்ர மாவிற் காகவே

இக்க ரைமி தந்தன.                               (43)

 

அக்ரமா: ஒருவர் பெயர்

 


ஈச்சங்குலை வருதல்

 

வாவென் றீச்சங் குலையினை

வரவ ழைத்த மாநபி

போவென் றேவப் போயது

புதுமை நாதர் புதுமையே.                         (44)

 

 

வெளிச் செல்ல விரும்பியே

வேத தூதர் மரங்களை

அழைத்த போது வந்தவை

அண்ண லாரை மறைத்தன.                       (45)

 


கற்கள் மறைத்தல்

 

வரிசை வரிசை யாகவே

வந்து கற்கள் நின்றுமே

வரிசை நாதர் வெளிச்செல

மறைத்த புதுமை புதுமையே.                      (46)

           

வரிசை: ஒழுங்கு

வரிசை: உயர்வு

 


கொடிய மிருகங்களும் பணிதல்

ஸலாம் கூறல்

 

ஓநா யொட்ட கையெலாம்

உடும்பு மரைகள் யாவுமே

ஞானக் குதலைக் கென்றுமே

நவின்று நிற்குமே ஸலாம்.                        (47)

 

குதலை: சிறுபிள்ளை

 

 

கல்லு மரமும் கொடியவாம்

கானி லுள்ள மாவெலாம்

சொல்லு மேயு யர்ஸலாம்

சூழ்ந்து நம்ந பிக்கெலாம்.                         (48)

 

கான்: காடு

மா: மிருகம்

 


பணிதல்

 

ஆடு மாடு கரடியும்

அடுங் கொடிய புலிகளும்

ஈடி லாத நாயகர்க்

கிருப தங்க்ட் பணியுமே.                          (49)

 

அடும்: கொல்லும்

பதம்: பாதம், கால்

 


சாட்டாங்கம் செய்தல்

 

வையங் காத்த நாதர்முன்

வந்து நின்ற ஒட்டகை

சைய மென்ன வீழ்ந்துமே

தாழ்ந்து வணக்கஞ் செய்தது.                       (50)

 

சையம்: மலை



பாலகன் பேசல்

 

அன்று பிறந்த பாலகன்

அண்ண லோடு பேசிய

இன்ற கைமை செப்பவே

எம்ம வர்க்கு மியலுமோ.                              (51)

 


மொழியாதன மொழிதல்

 

உடும்புஞ் சுட்ட மாமிசம்

ஊமை சிலைகள் யாவுமே

திடங்கொ ணாதர் தம்முடன்    

சீர்மை யாகப் பேசின.                                 (52)

 


நச்சிறைச்சி பேசியது

 

நச்சி றைச்சித் துண்டுகள்

நாத ரோடு பேசின

துச்ச மாகச் செய்தவை

தூய வர்க்கு மாகுமோ.                            (53)

 

நச்சு: நஞ்சு

 


நாயகத்தைக் கொலை செய்ய எத்தனம்

மண்ணையள்ளி வீசல்

 

வந்து பகைஞர் சூழவே

மண்ணை யள்ளி மாநபி

விந்தை யாக வீசவே

விழிம றைந்து றைந்தனர்.                        (54)

 

 

புரவியின் பாதம் மண்ணிற் புதைதல்

 

தூத ரைப்பி டிக்கவே

துரத்தி வந்த புரவியின்

பாதம் மண்ணிற் புதைந்தது

பரம நாதர் புதுமையே.                            (55)

 

பரவி: குதிரை.

 


அபூஜஹ்ல் பிடிக்கச் செல்லல்

 

அண்ண லாரைப் பிடிக்கவே

அபூ ஜஹ்லுஞ் சென்றனன்

நண்ண வக்கி னிக்குவை

நடுவண் கண்டு திரும்பினன்.                      (56)

 

நண்ண: பக்கத்தே செல்ல

 


கல்லைத் தலையிற் போடல்

 

கருணை நபியைக் கொல்லவே

கல்லைத் தலையிற் போடவே

பெருங்க லொன்று கவிகைபோல்

பெருமார் நபியைக் காத்தது.                       (57)

 

கவிகை: குடை

 


மறைநாதர் மறைதல்

 

நாய கத்தைப் பிடிக்கவே

தீய கத்தர் சூழ்ந்திட

நேய நாத ராங்கணே

நின்று மறைந்த புதுமையே.                       (58)

 

தீயகத்தர்: தீ+அகத்தர்

 

 

தொழுது நின்ற தூதரைக்

குழுவ தொன்று கொல்லவே

குழும ஆங்கு மீங்குமாய்க்

குருட ருக்குத் தோற்றினர்.                              (59)

 


மதிமுகம்

 

முகம தவர் முகமதின்

மிகவி கந்த சோதியைக்

ககனந் தன்னிற் றண்மதி

கண்டு கண்டு வெள்குமே.                         (60)

 

இகந்த: உயர்ந்த

ககனம்: ஆகாயம்

வெள்கல்: வெல்கப் படல்

முகமதின்: முகம் + அதின்

 

 

முகம லர்ந்த முகமதர்

அகம லர்ந்த அகமதர்

சகம துய்ய பூரணச்

சந்தி ரன்போல் வ்ந்தனர்.                          (61)

 

முகம் + மலர்ந்த

அகம் + அலர்ந்த

சகம்: பிரபஞ்சம்

உய்ய: துன்பத்திலிருந்து விடுபட, உயிர் தப்ப

 


கதிர் முகம்

 

எங்க ணாதர் சூரியன்

ஏனை நபிகண் மின்களாம்

கங்கு றன்னின் மின்னிடும்

காணு மக்கட் கிவையெலாம்.                      (62)

 

கங்குல்: இரவு

 


கதியானவர்கள்

 

விண்ணு மண்ணு மெண்ணிலா

மின்னும் தார கைகதிர்

தண்ம திக்கெ லாம்கதி

சங்க நாத ரெம்நபி.                               (63)

 

தாரகை: நட்சத்திரம்

கதிர்: சூரியன்

சங்கம்: அழகு

 


கதிர்மதி

 

அண்ண லாரே சூரியர்

விண்ண கத்தின் முழுமதி

கண்கு ளிர்ந்த சோதியே

எண்ணி றந்த ஒளிமயம்.                          (64)

     


அல்குர்ஆன்


கற்றி லாக்க லைக்கடல்

காட்டி வைத்த புதுமையில்

வெற்றி வேத மல்குரான்

மேன்மை மிக்க தாகுமே.                          (65)

 

சுற்றிலாக் கலைக்கடல்: நபிகள் நாயகம்

குரான்: குர்ஆன்

 

 

அண்ண லார்ம றைவினோ

டற்பு தங்கண் மறைந்தன

வண்ண மிக்கத் திருக்குரான்

மறைந்தி டாத வற்புதம்.                          (66)

 


வீராதி வீரம்

ஓரிறை. யான்றூதர்

 

ஒருவ னேக னிணையிலை

உண்மைத் தூதர் யானென

அருமை யண்ணல் வீரமாய்

அன்று ரைத்த புதுமையே.                         (67)

 

 

நானு மனித னென்றனர்

நாயன் றூதி றங்கிடும்

தீன வர்க்கு நபியு(ம்) நான்

திண்ண மிஃதென் றோதினர்.                       (68)

           

தீன்: வேதம்

 

 

உண்மை செப்ப வஞ்சிலர்

ஒருவ னென்ன வுறுதியாய்

வண்மை நாதர் கூறினர்

வலிமி கைத்து நின்றனர்.                          (69)

           

வண்மை: ஈகை, வளம்

வலி: வலிமை, திறமை

 


வீராதி வீரர்

 

யுத்த வீரர் தளபதி

யுகத்தி னொப்பிற் பெருபதி

எத்தி சையு மதிரதி

ஈடி லாத வார்மதி.                               (70)

 

யுகம்: உகம், உலகம்

ஒப்பில்: ஒப்பு + இல்

அதிரதி: அதிர் + அதி, அதிர்,அதிர்ச்சி, நடுங்கல், அதி:அதிகம், மிகுதி

ஆர்: கூர்மை, அழகு, நிறைவு. மதி: புத்தி, சந்திரன்

வார்: நேர்மை, உயர்வு,நுண்மை.

 


கொண்ட உண்மை மாற்றிடேன்

 

இடவ லக்க ரங்களில்

இரவி யோடு திங்களைக்

கொடிய வர்கள் கொடுப்பினும்

கொண்ட வுண்மை மாற்றிடேன்.                       (71)

 

இரவி: சூரியன்

திங்கள்: சந்திரன்

 

 

என்று வீர தீரமாய்

இயம்பி நின்ற வீரரே

என்று(ம்) மூவு கத்தினை

இசைய வோச்சு மண்ணலார்.                          (72)

 

இயம்பல்: சொல்லல்

ஓச்சுதல்: ஆட்சி செய்தல்

         நடாத்திவரல்

 


சிங்கம் புலிகளும்அஞ்சும்

 

வீர முள்ள வேங்கையும்

தீர மிக்கச் சீயமும்

வீர வீரர் நபிகளின்

மேன்மை வீறுக் கஞ்சுமே.                             (73)

 

வேங்கை: புலி

சீயம்: சிங்கம்

 


அனைத்தும் அஞ்சும்

 

அண்ண லாரி னுதவியை

அண்டி நின்ற வர்களுக்

கண்ணு மரியும் புலியெலாம்

அஞ்சி நிற்கு முண்மையே.                  (74)

 

அண்ணும்: நெருங்கும்

அரி: சிங்கம்

 

 

அண்ண லாரி னருளினை

அடைந்த வர்த மக்கெலாம்

உண்ணுந் தீரச் சீயமும்

கண்டொ துங்கி நிற்குமாம்.                            (75)

 


எதிரியிடத்தும் அன்பும்மன்னிக்கும் பான்மையும்

 

ஒப்பிற் றூதர் சென்னியிற்

றப்பி லாதெப் போதுமே

குப்பை கொட்டி வந்தனள்

குறைநி றைந்த கொடியவள்.                          (76)

 

ஒப்பில்: ஒப்பு + இல்

சென்னி: தலை, தலையுச்சி

 

 

அன்று குப்பை கொட்டிலள்

ஆவி தென்ன விவட்கெனச்

சென்று செய்தி வினவினர்

சீரி லாட்கி றைஞ்சினர்.                               (77)

 

ஆவிதென்ன: ஆ! + இஃதென்ன

இவட்கென: இவள் + கு+ என

            இவளுக்கு என

 


தீய தூயவர்க்கும் நேயர்

 

தீய மாய வர்க்குமே

தூய வாய நேயராம்

சேய தாய கமலநற்

செம்ம லெங்க ணாதராம்.                             (78)

 

தூயவாய: தூய + ஆய

சேய: சிவந்த

 


அதிசய நாயகம்

சம உயரம்

 

சமம தான வுயரமும்

தனிநி கர்த்த தன்மையும்

அமைவ தான சொற்செயல்

அமைந்த வெங்க ணாயகம்.                           (79)

 


உயர்ந்த தோற்றம்


மாண்பு மிக்க மாநபி

மற்றுந் தோழர் மத்தியில்

ஈண்டி வந்து நின்றிடின்

ஏற்ற மாய்வி ளங்குவர்.                           (80)

 

ஈண்டி: கூடி

ஏற்றம்: உயர்ச்சி

 

 

பூரணம்

எழில்

 

உருவிற் பூர ணத்தவர்

கருத்தி லேக பூரணர்

மறுவி லாத வழகினர்

மாண்பு நாத ரெம்பிரான்.                              (81)

 

மறு: குற்றம், குறை.

 

 

வண்ணம்

 

வெண்சி வப்பு நிறத்தினர்

விரிந்த நயன முடையவர்

கண்ணின் மையு றைந்தவர்

கண்ணி மையு நீண்டவர்.                             (82)

 

நயனம்: கண்

 


பிறை நெற்றி

 

விரிபி றையி னெற்றியர்

வீர தீர வெற்றியர்

அரித னையு மஞ்சிடா

ஆற்ற லுற்ற பெற்றியர்.                               (83)

 

அரி: சிங்கம்

பெற்றி: தன்மை.

 

 

வேர்வை

 

நாய கத்தின் வேர்வையும்

நல்ல முத்த மணிகளாம்

தூய நாவி நன்மண்ம்

துய்த்து வீசு மாமதில்.                                (84)

 

முத்தம்: முத்து

நாவி: கத்தூரி

துய்த்து: கலப்பற, சுத்தமாக.

 

 

மென்மை. பொற்பு, ஓதம்.காலம்

 

பூவின் மென்மை மதியினின்

பொற்பு சீர்மை ஈகையிற்

றாவு திரையி னோதமே

தைரி யத்திற் காலமாம்.                              (85)

 

பொற்பு: அழகு

திரை: அலை

ஓதம்: கடல்

 


முத்தம்

 

வாயி னுண்ண கையெலாம்

வரிசை முத்தம் போலுமாம்

தூய மொழியு நகையெலாம்

சோதி நாதர் குணங்களாம்.                                     (86)

 

நகை: 1. சிரிப்பு

      2. பல்

 

 

குணநலம்

 

அழகு மிக்க வுடையினர்

அகிலம் போற்று மெழிலினர்

பழகும் பண்பி லொப்பிலர்

பரிவு காட்டும் நாயகர்.                                (87)

 

 

சொற்செ யல்க ணடையுடை

தூய வாக்கு மெய்ம்மையும்

வெற்றி மிக்கப் புதுமையாய்

மிளிர்ந்த துண்மை யுண்மையே.                       (88)

 

 

நற்கு ணங்க ணல்வினை

நடையு டையு நேர்மையுஞ்

சொற்கு ணத்த நாதரின்

தூய வற்பு தங்களே.                                  (89)

 

 

நற்கு ணத்தி லுருவினில்

நபிகள் யாவ ருக்குமே

அற்பு தத்தின் மேலினர்

அன்பு நாதர் அஹ்மதர்                                (90)

 

 

படைப்பி னன்ன டத்தையிற்

பண்பின் மிக்கத் தூயவர்

கொடையின் மிக்கக் கோதிலார்

குவல யத்தி னண்ணலார்.                             (91)

 

கோதிலார்: கோது + இல்+ ஆர்

குவலயம்: உலகம்.

 

 

கருணை யுள்ளம் படைத்தவர்

அருளை வார்ந்த ளிப்பவர்

இருளை நீக்கி யொளியினை

இகத்த வர்க்கு மீந்தவர்.                               (92)

 


யுகநாயகம்

 

ஈரு கத்தி னாதராம்

இருக நணத்தி னாதராம்

வீர அறபி அஜமியர்

சீர்க்கும் வெற்றி நீதராம்.                              (93)

 

இருகணம்: அறபியர், அஜமியர்,இருகூட்டங்கள்

ஈருகம்: ஈருலகம், இம்மை,மறுமை

 


கொடைகளும் அறிவும்

 

அவ்வு கத்தோ டிவ்வுகம்

அண்ணல் நபிகள் கொடைகளாம்

லவ்ஹு கலக் கலையவர்

அறிவி னின்று முள்ளவாம்.                           (94)

 

உகம்:உலகம்

 

 

காவலர்


மீத லத்தின் பூதல

பாத லத்தின் காவலர்

ஏதி லாத வேதத்தின்

நீத மூட்டும் தூதுவர்.                                 (95)

 

ஏது: குற்றம்

 

 

நபிகள் இலரேல்....

 

இறைத் தூத ரில்லரேல்

இவ்வுவ் வுலகமுந் தோன்றிலை

மறை தானும் வந்திலை

மட்டி மூட ரறிவரோ.                                 (96)

 

இவ் அவ் உகம்: இந்தஅந்த உலகம்

 

 

ஏக நாதர் நபிகளார்

இல்லை யென்னி னிவ்வுகம்

ஆகி லாத வுன்மையை

அறிந்த ஞானி ஏற்பராம்.                              (97)

 

ஆகிலாத: ஆகு + இலாத.

 

 

ஒப்பிலார்

 

கற்ற மாந்தர் மாதரும்

மற்ற வறிஞர் கவிஞரும்

உற்ற மேதை நாதருக்

கொப்பி ழந்து போயினர்.                              (98)

 

 

கல்வி கேள்வி தகைமையிற்

கருணை நாதர்க் கொப்பிலர்

இல்லை யுண்டு மென்பதில்

என்றும் நேர்மை மிக்கவர்.                            (99)

 

 

ஏனை நபிகள் யாவரும்

எங்க ணபியி னறிவினில்

வானி ழிந்த மழையினில்

வாரி தன்னிற் சிறுதுளி.                               (100)

 

இழிந்த: இறங்குதல், பெய்தல்

வாரி: கடல், வெள்ளம்

 

 

வினையுஞ்சொல்லுஞ்சுவையும்

மனிதனை மனிதனாய் வாழவைத்தல்

 

மனித றன்னை மனிதனாய்

வாழ வைத்த எம்பிரான்

இனிது வாழ நல்வழி

இயற்றி வைத்தா ரெம்நபி.            (101)

 

மனிதறன்னை: மனிதன்+ தன்னை

 

 

தீயவை தூயவை செப்பல்

 

தீய தின்ன வென்றவர்

தூய தின்ன வென்றனர்

ஆய வற்றை யேற்றுமே

ஆற்றி னன்மை யென்றனர்.           (102)

 

 

இறையைக் காட்டினர்

 

இறையைக் காட்ட்டித்தந்தவர்

நிறைய ஞான மீந்தவர்

மறையைத் தந்து மாந்தராய்

வாழ வைத்த மன்னவர்.              (103)

 

 

சாதிபேத மில்லை

 

சாதி பேத மில்லையென்

றாதி வேத மோதிடுந்

தூது தன்னைக் கவிகையின்

னாதர் கூறிப் போந்தனர்.              (104)

 

கவிகை: குடை

 

 

தேன்மொழி

 

நாய கத்தின் வாய்மொழி

நறையு திர்க்குந் தேன்மொழி

தூய வாய்மைச் சீர்மொழி

தோற்று மெழிலின் முத்தொளி.        (105)

 

நறை: தேன், நறுமணம்

 

 

மணிமொழி

 

கன்ன லங்க ருத்துறை

யண்ண லார்த மணியுரை

உன்ன வுன்ன வூற்றென

வுயர்க ருத்து மீந்திடும்.               (106)

 

கன்னல்: கரும்பு

 

 

காப்பவர்

 

வாழ்க்கைக் கடலி னீந்தியே

மாளத் தத்த ளிப்பவர்

ஆழ்ந்தி டாமல் உதவியே

அழிவி னின்றுங் காப்பவர்.            (107)

 

 

பரிந்து பேசுபவர்

 

அச்சந் துன்பந் திடுக்கங்கள்

அனைத்தும் நீக்கும்நாதராம்

நிச்ச யம்ப ரிந்திடும்

நீத ரெங்கள் தூதராம்.                 (108)

 

பரிதல்: சபாஅத்துச்செய்தல்

பரிந்து பேசுதல்.

 

 

நாயகத்தைத் தூற்றல்

மனிதரே. ஆயினுந் தேநரர்

 

இறைத் தூதர் மனிதரே

எனினு மனித ரல்லரே

நிறைய விண்ணு மண்ணெலாம்

நின்று பணியுந் தேநரர்.               (109)

 

தே: தெய்வம்

நரர்: மனிதர்

 

 

பெருமை பகர முடியுமோ

 

நபிக ணாதர் பெருமையை

நவில யார்க்கு முடியுமோ

பாபம் பேசுங் கூட்டங்கள்

பழிசு மந்தி றக்குமே.                 (110)

 

நவிலல்: சொல்லல்

 

 

மதியைக் கண்டு குரைத்தல்

 

மதியைக் கண்டு குரைக்குநாய்

மதியின் மாண்பை யறியுமோ

பதிக ளாரின் மாண்பினைப்

பாபக் கூட்ட மறியுமோ.               (111)

 

 

சூரியனின் சீர்மை யறிதல்இயலுமோ

 

சேய்மை யுள்ள் சூரியன்

சீர்மை யறிய முடியுமோ

பேய்மை யுள்ளம் படைத்தவர்

பெருமை நபியை யறிவரோ.          (112)

 

சேய்மை: தூரம்

பேய்மை: பேய்த்தன்மை

 

 

தீயிலெரியும் பேய்

 

நாய கத்தைப் புகழ்ந்திடா

வாய்க ளூமை வாயடா

சீய நபியைச் சீயெனின்

தீய னரகன் பேயடா.                  (113 அ)

 

சீயம்: சிங்கம்

 

 

நாய கத்தைப் புகழ்ந்திடா

வாய்க் ளூமை வாயடா

நாயிற் கேடு கெட்டவன்

தீயி லெரியும் பேயடா.               (113 ஆ)

 

 

நன்றிகெட்டவன்

இழிந்தவன்

 

நாயு(ம்) நன்றி யுடையது

நன்றி கெட்ட மாந்தனோ

நாயி னின்றி ழிந்தவன்

நரக தீயில் வேகுவன்.                (114)

 

 

தீய கூட்டம் அழியும்

 

தீய வர்கள் தூற்றுவர்

தூய வர்கள் போற்றுவர்

காயந் தன்னை யறிந்திடாத்

தீய கூட்டம் அழிவரால்.               (115)

 

 

அஞ்சல் கொணர்

சேவகர் அவரார் (சிலேடை)

 

அஞ்சல் கொணர் சேவகர்

அவர்வி னைமு டிந்ததே

அஞ்சற் போதுந் தூதரோ

அவரா ரென்பர் பாதகர்.               (116)

 

அஞ்சல்: அஞ்ச வேண்டாம்என்று கூறிய வேதமாகிய

    திருக்குர்ஆன்.

 

அஞ்சல்: கடிதம்

 

சேவகர்:  சே + அகர் : செம்மையான அகத்தையுடைய பெருமானார் (ஸல்)அவர்கள்

 

சேவகர்: அஞ்சற் பகிர்வோர்

 

அவர்வினை முடிந்ததே:எம்பெருமானார் (ஸல்) அவர்கள் “உங்கள் வேதத்தைப் பூரணப் படுத்தினேன்என்று கூறிய வினை முடிந்தது.

 

அவர்வினை முடிந்ததே:அஞ்சற் பகிர்வோர் அஞ்சலைக் கொடுத்து விட்டுச் சென்றனர்.

 

அஞ்சற் போதும்: இப்போதுநம்மிடத்தே மீதியாய் உள்ள திருக்குர்ஆன் எமக்கு எல்லாவற்றிக்கும் போதுமானது.

 

அஞ்சற் போதும்: வந்ததபால் போதும்.

 

தூதர் + ஓ ரஸுல் நாயகம்அவர்களோ

 

தூதர்: அஞ்சற் பகிர்பவர்.

அவர் + ஆர்: அவரோவெனில்அருமையானவர், நிறைவானவர், சோதியானவர், அவர்கள்எப்போதும் தேவைப்படுவார்கள்.

 

அவர் + ஆர்: அவர் யார்? அவர்தேவையிலலை.

 

என்பர்: பா + தகர்: எனக் கூறுவர் பரவிய தகைமையுடையவர்கள். (ஆய்ந்தறிந்தவர்கள்)

 

என்பர் பாதகர்: என்றுகூறுவர் பாதகத்தையுடையவர்.

 

 

பாவி

 

கொண்ட நம்பிக் கையறக்

கண்ட கணட வாறெலாம்

கிண்டற் பேசி நாதரைக்

கேலி செய்வன் பாவியே.                                       (117)

 

 

நரக நெஞ்சன்

 

பாம்பி னஞ்சு வாயிலாம்

பகைவ னஞ்சு நெஞ்சிலாம்

பாம்பிற் கொடியன் தூதரின்

பகைவ னரக நெஞ்சினன்.                                       (118)

 

 

நைந்து சாதல்

 

நாய கத்தி னெதிரிகள்

நைந்து செத்த வாறெலாம்

மாயக் கண்கள் கண்டுமே

மதி மருண்டு போயின.                                         (119)

 

நைதல்: நசுங்குதல், அழிதல்

 

 

மனிதனாதல் வேண்டும்

 

ஞான மின்றித் தூங்குமோர்

நன்றி கெட்ட கூட்டமே

மான நாத ரறிந்துமே

மனித னாதல் வேண்டுமே.                                                      (120)

 

நாதர் + அறிந்து “ஐவேற்றுமைத் தொகை

               

 

தீது தீர்த்தருள்வாய்

 

நாய கத்தின் பொருட்டினால்

தூய ஞானம் தந்தருள்

தீய வினையைத் தீதினைத்

தீர்த்த ருள்வாய் நாயனே.                                       (121)

 

தீர்த்தருள்வாய்: அழித்தருள்வாய்

 

 

நாய கத்தின் பொருட்டினால்

நாய கத்தைத் தூற்றிடும்

தீய வெதிர்க் கணங்களைத்

தீர்த்த ருள்வாய் நாயனே.                                       (122)

 

 

நாய கத்தின் பொருட்டினால்

நல்ல வேத விதிகளைத்

தீய தாக்கு வோரையும்

தீர்த்த ருள்வாய் நாயனே.                                       (123)

 

 

நாய கத்தின் பொருட்டினால்

நாட்டம் பூர்த்தி செய்தருள்

தீய பாபக் குழுவினைத்

தீர்த்த ருள்வாய் நாயனே.                                       (124)

 

 

நாய கத்தின் பொருட்டினால்

நாய கத்தைப் புகழ்ந்திடா

தீய பேய்கள் கூட்டத்தைத்

தீர்த்த ருள்வாய் நாயனே.                                       (125)

 

 

பிரார்த்தனை

 

எங்கள் தூய நாதரே

உங்க ளன்பிற் றிளைத்திட

இங்கு மங்குங் காத்துமே

எம்மை மன்னித் தருளுவீர்.                                     (126)

 

 

எம்பி ழைபொ றுத்தெமை

இன்ப மாக வாழவே

இம்மை மறுமைப் பேறுறச்

செய்த ருள்வீர் நாதரே.                                          (127)

 

 

தூய வாழ்வும் வளமதும்

காய ஆத்ம சுகமதும்

நேய மிறையின் பெற்றுநாம்

நிதமும் வாழ அருளுவீர்.

 

காயம்: உடல்                                                  (128)

 

 

நம்ம னைவி மக்கட்கும்

நலிந்த தந்தை தாய்க்குமே

எம்மு டன்பி றந்தவர்க்

கென்றுங் காப்பு நல்குவீர்.

 

காப்பு: பாதுகாப்பு                                               (129)

 

 

சுற்றத் தார்க்கு மன்பினைச்

சுமந்த தூய வர்களுக்

குற்ற தீட்ச தர்தமக்

குங்கள் கருனண வேண்டுமே.                                    (130)

 

 

மக்கள் துயர் நீக்கியே

மறுமலர்ச்சி யூட்டியே

தக்க மதீ நாநகர்

தாம்ம றைந்த நாளிதே.                                         (131)

 

 

பாடித் தங்கள் பங்கயப்

பதம்ப ணிந்த பேரராம்

நாடும் கலீ லவுனுக்கு

நாளும் நலம் நல்குவீர்.

 

பங்கயம்: தாமரை                                              (132)

 

 

ஸலவாத்தும் ஸலாமும்

 

தூயோன் விண்ண வர்ஸலாத்

தும்ஸ லாமும் கூறினர்

தூய நம்பிக் கையுளீர்

சொல்க ஸலாத் தும்ஸலாம்.