• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  குருவே! அன்றி வேறு ஒன்றுமில்லை


குருவே! அன்றி வேறு ஒன்றுமில்லை


அமீர் அலி ஹக்கிய்யுல் காதிரி - துபை

 

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை குருவே! - உமை

அன்றிவேறு ஒன்றுமில்லை குருவே

கண்டுகொண்டோம் கண்டுகொண்டோம் குருவே! - எங்கள்

கண்களுக்கு என்றுமில்லை அழிவே!

ஹாஷிம் குலவாசம் எங்கள் குருவே! - விழி

பேசும் முறை சான்றுரைக்கும் குருவே!

யாஸீன் தவசீலர் எங்கள் குருவே! - சிறு

மாசும் மறந்தண்டிடாது குருவே!

அண்ணலிட்ட போர்வையினுள் குருவே! - அக

மின்னலினை ஏந்தி வந்தீர் குருவே!

வீசும் தென்றல் காற்றினைப்போல் குருவே! - உயர்

நேசமதில் வாசநபி உருவே!     (ஒன்றுமில்லை)

சூனியத்தின் ஆதினிலை குருவே! - திட

மேனித்திரையால் மறைத்தீர் குருவே!

நானிலத்தின் வேந்தரெங்கள் குருவே! - மதி

நானீயெனும் நஞ்சறுத்த குருவே!

பன்மையென்றும் நன்மையில்லை குருவே! - உயர்

உண்மைதனை ஊற்றிவிட்ட குருவே!

மேதை நபித்தூதர் எங்கள் குருவே! - அதன்

பாதை துளிமாறவில்லை குருவே!   (ஒன்றுமில்லை)

சத்தியத்தின் அச்சகமெம் குருவே! - தினம்

உண்மை மெச்சும் புத்தகமெம் குருவே!

பாதம் நிறைபற்றிக் கொண்டோம் குருவே!- எங்கள்

சந்ததிக்கும் வேண்டுமிந்த அருளே!

கம்பரை நேர் கண்டதில்லை குருவே! - என்றும்

அந்தக்குறை எங்களுக்கு நிறைவே!

முத்தமிழும் முத்தமிடும் குருவே! - தங்கள்

சித்தமுழுச் சத்து நிறைதமிழே!    (ஒன்றுமில்லை)

பேரிணையை விட்டகன்றோம் குருவே! - பெரும்

பேறினையும் பெற்றுவிட்டோம் குருவே!

தீயதனை விட்டொழித்தோம் குருவே! - சுடும்

தீயதிலும் முக்குளித்தோம் குருவே!

ஓரணியை சூடிக்கொண்டோம் குருவே! - என்றும்

ஓரணியில் சூழ்ந்து நிற்போம் குருவே!

நின்மதியில் நின்றுவிட்டோம் குருவே! - எங்கள்

நிம்மதிக்கு என்றுமில்லை மறைவே!   (ஒன்றுமில்லை)

பாழடைந்த பாதைதனில் குருவே! - எங்கள்

காலடைந்த வேதனைகள் பலவே!

பித்தரென மற்றுரைத்தார் குருவே! - எமை

சித்தரென மாற்றிவைத்தீர் குருவே!

வேதம் தந்த தூதர்நபி குருவே! - மீது

ஓதும் புகழ் குன்றிடாது குருவே!

குன்றிவிடும் என்றநிலை வரவே  - முன்

நின்றிடாமல் சென்றடையும் உயிரே!  (ஒன்றுமில்லை)

 

முத்துப் புன்னகை

 

கலீல் நாதரின்

முத்துக்கு முத்தான புன்னகையே

அது சத்துக்கு சத்தான பேரமுதே

அழகுக்கு அழகான அரும்பொருளின்

ஞானக் கருவூலத் தேன்அமுதே!

புன்சிரிப்பால் தந்திடும் வரங்களினால்

சித்தியும் முக்தியும் கிட்டிடுமே

புன்னகை பூத்திடும் போதினிலே

பூமியும் புத்துயிர் பெற்றிடுமே!

அழகுக்கு அழகாய் கவிபாடி

தமிழும் அழகாய் மாறியதே

உம்சொல் தந்திடும் பொருளாலே

செந்தமிழ் இனிமையும் கூடியதே!

அண்ட கோலமும் அழகாக

உம் வரவால் மாறியதே

சந்திர சூரிய நட்சத்திரங்களும்

உம்ஒளி பெற்றே மின்னியதே! 

நீர்தந்திடும் உவமைப் பொருள்கூட

மெய்ப்பொருள் முழுமையும் விளக்கிடுமே

எப்பொருள் யார் யார் கேட்டிடினும்

உம்அருள் அப்பொருள் தந்திடுமே!

சங்கநாதம் முழங்கிடவே

சத்திய சீலர்கள் போற்றிடவே

வானவர் கூட்டமும் வாழ்த்திடவே

தங்கள் வான்புகழ் என்றென்றும் நிலைத்திடுமே!

சேக்தாவூது B.com., ஹக்கிய்யுல் காதிரிய்,மன்னார்குடி.