வாழிய பல்லாண்டு
கவிஞ்ர் அப்துற் றஜாக், அதிரை
அண்ட சராசரங்கள் அனைத்தையும் அழகுறப்
படைத்து உலகில் கண்டங்கள் வகுத்து கடலையும்
இணைத்துக் காக்கும் அல்லாஹ் பெரியோனின்
திருநாமம் போற்றி போற்றி!!
நாரெனும் நரகநெருப்பிலிருந்து நூரெனும்
நேரிய ஒளிப்பாதையை காட்டியருளி
அறியாமை காரிருளை விரட்டிய ஞானஒளியாம்
சோதிநபிக்கும் கிளையார் தமக்கும்,
தோழர்களுக்கும் சலவாத்தெனும் ஈடேற்றமும்
சாந்தியயனும் சமாதானமும் இறையருளால்
பொழியட்டும். அதன் பரக்கத் நம் அனைவர்
மீதும் பரவிசெழிக்கட்டும்.
உலகமாந்தர் தீனுல் இஸ்லாம்பற்றிப் போற்றியே
மனோஇச்சை வென்று மார்க்கம் பேணியே
நடந்திடவே! அருள்க! ஏற்கும் இறையே!
நீயே காப்பு நின்தாள் தஞ்சம்.
ஆடும்மயில்களும் பாடும் குயில்களும் வீசும்
தென்றலும் தவழும் நதிகளும் தன்நிலைகளில்
நின்று நிலவும் காலமெலாம் பூமான்நபியின்
பொற்புகழை இப்பூவுலகுபாடும்! நாளைமறுமை
கேள்விநாளில் சுவனச்சோலைகளில் மன்னர்
மஹ்மூது நபியின் மாபுகழ் முடிவிலாது நின்று
ஒளியாய் வீசுமே!
ஆதிபெரியோனின் சோதிச்சுடரொளி
மேவிப்பரவிய அஹ்மது நபிகளாரின்
அருங்கொடி பூத்தமலர்களாம் மூன்று
முத்துக்களாம் மும்மணிகளான ஞானச்சுடர்வீசும்
பெரியோர்களாம் என்நெஞ்சமதில் நேசம்
மேலிட வாசம் வீசும் மும்மலர்களையும்
ஓர்ந்துணர்ந்து ஓர்மையுடன் பாடுகின்றேன்.
பூஉறங்க புல்லுறங்க நாவுறங்காதிருந்து
நாளும் நலம்சேர்த்த பேருலகின் பெரும்வீரர்
அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஈன்ற
ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) குலக்
கொழுந்தாம் சீர்மிகு சம்பைபட்டினம்
சார்ந்துரை குத்புஸ்ஸமான் ஜமாலிய்யா
ஹாஷிமி மெளலானாவாம்
மக்கள் மனக்குறைபோக்கும் மாமருந்தாகி
மனிதநேயம் காத்து ஹக்கன் இட்டகட்டளையை
பேணிநின்று தலமீதுறும்பெரும் பலாய்களை
யெல்லாம் பற்றியடித்து துரத்திடும்கோவே!
உங்கள் சேயாகி பரவசமேலீட்டால் சங்கை
மிகு இத்திருச்சபையில் உங்கள் முன்
பாடவே இங்குவந்திட்டேன்.
தீன்செழிக்க வந்த முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி
(ரலியல்லாஹு அன்ஹு) வழிவந்த வாரிசே!
மாதவம் பேணும் கற்புக்கரசி பொற்புமிகு
செய்யிதத்தான உம்முஹபீபா அன்னை பெற்ற
பேர்மிகுபிள்ளையாகி சத்தியம் காத்து அசத்தியம்
அழித்த தவராஜரே! திருமுல்லை மதிவாசல் துயிலும்
முத்துச்சொல் செயற்களால் கர்த்தனின் புகழ்பாடி
மக்கள் தொண்டு புரிந்து கீர்த்தி
பெற்ற மாமேருவாம் குத்புஸ்ஸமான் யாசீன்
மெளலானாவாம். உங்கள் புகழ் பட்டிதொட்டிகளைத்
தொட்டு எட்டுத்திசைகளையும் எட்டுமே!
பச்சைப் பசுமை கிராமங்களிலும் அதன் எதிரொலி
ஒலிக்குமே
முன்னோர்பேணிய ஷரீயத், தரீக்கத், ஹகீக்கத்,
மஃரிபத் பாதைவழிபேணி தரணியயங்கும்
சென்று தாரகமந்திரமாம் “கலிமா” முழங்கியே
தீனுல் இஸ்லாத்தில் மக்களை இணைத்திட்ட
அருமணியான மாமணியே! இலங்கையில் இலங்கும் ஒளியே!
பேச்சு மூச்சற்று பேரின்ப தெளஹீதுக் கடலில்
ஃபனாவாகி அழிந்திடவே நாளும்
ஏகிட்ட பெரியோர்கள் குத்புமார்கள் நாதாக்கள்
வலிமார்கள், ஒளிமார்கள் பாதைபேணி நடந்துவரும் காலத்தன் குத்பே!
கலீல் அவுன் மெளலானா ஹாஷிமியே!
தாங்கள் நோய்நொடியற, வளம்பலபெற்று
நலம்பெறவே உங்கள் பிள்ளைகளான நாங்கள்
இறையோனிடம் உள்ளொளியால்
இருகரமேந்தி இறைஞ்சுகின்றோம்.
இறையருளால் வாழ்கவே வாழிய பல்லாண்டு! பல்லாண்டு!!