• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  அகிலத்தை கவர்ந்த அறபு மொழி


அகிலத்தை கவர்ந்த அறபு மொழி


    ஒரே ஒரு வினைச்சொல் முன்னூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட வகைகளாகத் திரிந்து வருவது இம்மொழியின் சிறப்புக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும். ஆங்கிலத்தில் “GO” என்பதை  இறந்த காலத்தில் காட்ட “WENT” என்று மாற்ற வேண்டும். இந்நிலை அரபு மொழியில் இல்லை. ‘யத்ஹபு’ - போகிறான் என்பதில் முதல் எழுத்தை மாற்றிவிட்டால்  “தஹப” - போனான் என்ற இறந்த காலமாக மாறிவிடுகிறது.


    அறபு மொழி, பிற மொழிகளின் ஆதிக்கத்தால் தனித் தன்மை இழந்துவிடாமல் பிற மொழியிலுள்ள புதுச்சொற்களுக்குப் பொருத்தமான தம் மொழிச் சொற்களை ஆக்கி அளிக்கின்றது. அவ்வாறு இல்லையெயனில் தம் இயல்புக்கொப்ப பிறமொழிப் பெயர்களை மாற்றி அமைத்து வாங்கி வருகின்றது. அறிவியற்கலையானது ஓங்கி வளர்ந்துள்ள இக்காலத்தில் கூட அம்மொழி இப் பழம்பண்பினைக் காத்தே வருகின்றது. இதோ சில சான்றுகள் :

ஆங்கிலம்                   அரபி

Aeroplane                தய்யாரா

Rocket                      ஸாறூக்

Train                    ​     கிதார்

Radio                        மித்யாஉ

Telephone               ஹாத்திஃப்

Telegramme            பர்க்கிய்யா

Photograph              ஸூரத்துஷ் ­ம்ஸிய்யா

Cinema                  ஸூரத்துல் முதஹர்ரிகா

Foot Ball                 குரத்துல் கதம்

Fan                          மிர்வஹா

Harmonium           முத்ரிப்

    இவற்றைப்போல எல்லாத் துறைகளிலும் புதுச் சொற்கள் அமைக்கப்படுகின்றன.  தேவையில்லா இடங்களில் தம் இயல்புக்கொப்ப அவை திருத்தியும் உருவாக்கப்படுகின்றன.  ஸந்தல் (சந்தனம்) தம்பூல் (தாம்பூலம்) ஸன்ஜபீல் (இஞ்சி) கரன்புல் (கிராம்பு) என்பன அவற்றின் சான்றுகளாகும்.


    ஒரு வேர்ச் சொல்லிலிருந்து பல கிளைச்சொற்கள் அமைப்பதும் இம்மொழியின் சொல்வளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். ‘கதப’ (எழுதினான்) என்னும் வேரிலிருந்து ‘கிதாப்’ (நூல்; எழுதப்பட்டது) ‘மக்தப்’ (பாடசாலை எழுதப் பயிலுமிடம்) ‘காத்திப்’ (எழுத்தாளன்) ‘முக்திப்’ (எழுதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்) ‘முகாதபத்’ (கடிதப் போக்குவரத்து) ‘மக்தபத்’ (நூலகம் எழுதப்பட்ட நூல்களை வைக்குமிடம்) போன்ற எத்தனையோ சொற்கள் பிறக்கக் காண்கிறோம். இத்தகைய சொல் வளத்தாலும் சொல்லாட்சித் திறத்தாலும், இம்மொழியின் சொற்கள் பல ஆங்கில அகராதிகளில் இடம் பெற்றுள்ளன.  அல்ஜிப்ரா (அல்ஜிப்று) அல்மரி (அல்கீமியா) காட்டன் (குத்னு) ஸைபர் (ஸிப்று) ஆல்கஹால் (அல்குஹ்லு) அட்மிரல் (அமீருல் பஹ்ர்) ஜிப்ரால்டர் (ஜபலுத் தாரிக்) டேமரின்ட் (தமருல் ஹிந்த்) போன்ற அரபிச் சொற்கள் அப்படியோ, அல்லது சிறிது திரிந்தோ ஆங்கில அகராதியில் இடம் பெற்று உலகப் பொதுச் சொற்களாய் மாறிவிட்டன.  இதுபோல தமிழ் அகராதிகளில் அசல் (அஸ்லு) அமுல்   (அமல்) ஆஜர் (ஹாளிர்) தாசில்தார் ( தஹ்ஸீல்தார்) ஜில்லா (ளில்ஆ) தாலுகா (தஅல்லுகா) ரத்து (ரத்து) தாக்கீது (தஃகீது) முன்ஷிப் (முன்ஸிஃப்) போன்ற எத்தனையோ சொற்களும் இடம் பெற்று, பொதுச் சொற்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. பிற மொழிகளைவிட உலகில் எல்லாச் சிறப்புகளும் நிறைந்த உலகப் பெரு மொழியாக, அகிலத்தைக் கவர்ந்த அறபு மொழி திகழ்வதைக் காணலாம்.

(முற்றும்)

 

 

ஓதுவது எப்படி?


    அடியேன் ஒரு நாள் கீழக்கரை சென்றிருந்த போது கண்ணாடி அவ்லியா எனப் பெயர் விளங்கிய அவ்லியா நாயகம் மகானந்த பாபா வலியுல்லாஹ் அவர்களை ஜியாரத் செய்து விட்டு அருகே இருந்த பள்ளிவாசலுக்குத் தொழச் சென்றேன். அந்தப் பள்ளியின் பேஷ் இமாம், நான் ஜியாரத் செய்துவிட்டு வந்ததை கவனித்துவிட்டு எங்கு சென்று வருகிறீர்கள்?எனக் கேட்டார். நான் அவ்லியா நாயகம் அவர்களை ஜியாரத் செய்தவிட்டு வந்த வி­ஷயத்தைக் கூறினேன். அப்படியா? அவ்லியா நாயகம் அவர்களை நேரில் கண்டிருக்கின்றீர்களா? எனக் கேட்டார். ஆம்! சிறுவயதில் நான் திண்டுக்கல் மதுரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் நாகல் நகரில் அப்துல் கறீம் ஹள்ரத் வீட்டில் வைத்து சந்தித்திருக்கிறேன் என்றேன். அவர்கள் உங்களிடம் என்ன கூறினார்கள் என மீண்டும் வினாத்தொடுத்தார். நான் அப்போது சிறுபிள்ளை. என்னிடம், நீ ஓதுகிறாயா?என்று அவ்லியா நாயகம் அவர்கள் கேட்டு விட்டு, எப்படி ஓதுகிறாய் என்று கேட்டார்கள்.  நானோ எல்லோரையும்  போல  உஸ்தாது கிதாபை எடுத்து விரித்து பாடம் நடத்துவார். நான் பாடத்தை கவனித்து ஓதுவேன் என்றேன். அதற்கு அவர்கள் “அப்படி ஓதக் கூடாது. ஆசிரியரிடம் ஓதும் ஒழுங்குமுறை என்னவென்றால் திருமறை குர்ஆன் ஷ­ரீஃபின் விளக்கமான தஃப்ஸீர் கிதாபை ஆசிரியர் ஓதி வாசிக்கும் போது அந்த ஆயத்துகள் அல்லாஹ்விடமிருந்து வரும் ஓசை போல - சப்தம் போல உணர வேண்டும். ஹதீது கிதாபை ஓதும்போது ரஸூல் (ஸல்) அவர்களின் திருவாயிலிருந்து அவை வருவதுபோல உணர வேண்டும். இதுதான் ஓதும் முறை” என்றார்கள். எனக்கு அது புதுமையாகவும் புத்துணர்வு ஊட்டக் கூடியதாகவும் இருந்தது. அந்தச் செய்தியைக் கேட்ட அந்தப் பேஷ் இமாம் அப்படியா சொன்னார்கள்? அருமையான - எங்கும் கேள்விப்படாத வி­யமாக இருக்கிறதே! என வியந்து போனார்.


    மேலும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்லியா நாயகம் அவர்கள் தாங்கள் உலகைவிட்டு மறைந்த தினத்தன்று அநேக முரீதுகளின் கனவில் தங்களின் இறப்புச் செய்தியை இஷாரவாகக் கூறினார்களாம்.​

கூறியவர் : பாகவி பின்நூரி, கேட்டு எழுதியவர் : அபூபாஹிரா