• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  ஈதுப்பெருநாள் நிகழ்ச்சி


31.08.2011 அன்று மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈதுப்பெருநாள் நிகழ்ச்சியில் ஆலிம்புலவர் வாசித்த கவிதை!

 

 

அன்பர்களே!

ரமளான் அறபு எழுத்தின்

”ரே” போல தோற்றமளிக்கும்

“பிறைத் தோணி”யில் ஏறி

ஒரு திங்கள் பிரயாணம் செய்து

நூன்” தோன்றும் மறுபிறையில்-

மறுகரையில் இறங்கினோம்!

இன்று - இங்கு - ஈதுப்பெருநாள்

நேன்புத் திருநாள்!

ஊரெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்!

மேனியெயல்லாம் புத்தாடை!

ஆடை மணக்க அத்தர்வாடை!

இன்று அதிகாலையிலேயே

ரஹ்மானிடமிருந்தும்

ரமேஷிடமிருந்தும் - ராபர்ட்டிடமிருந்தும்

ஈது முபாரக் “குறுஞ்செய்தி” வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்களால்

கைபேசி நிரம்பி வழிந்திட

கணினி முழுவதும்

“ஈ” வாழ்த்துக்கள்! ஈது வாழ்த்தக்கள்!

வாழ்த்து அட்டைகள் வழக்கிழந்துபோக

தொலைக்காட்சியிலும் வாழ்த்துத் தூதுகள்!

இன்று

இஸ்லாமியர்களுக்கு

சம்பள நாள்!

பாவத்திற்கு சம்பளமல்ல!

ஒருமாதம் செய்த நன்மைகளுக்கு

இறைவன் ஊதியம் வழங்கும் நாள்!

முப்பது நாட்கள் தொழுகையில்

2100 முறை முதுகு வளைத்துக் குனிந்து

4200 முறை தரையில் தலைவைத்துப் பணிந்து

6666 திருக்குர்ஆன் வசனங்களை

நாவினால் ஓதி - செவி குளிரக் கேட்டு

ஒவ்வொரு நாளும் 14 மணிநேரம் என

முப்பது நாட்கள் 420 மணிநேரம் பசித்திருந்து

இரவுகளில் விழித்திருந்து

வணங்கித் தவம் செய்த

நல்லடியார்களுக்கு

இறைவன் கூலி வழங்கும் ஒருநாள்!

 

எல்லா வணக்கங்களுக்கும் இறைவன்

நன்மையே தருவான் - நோன்புக்கு மட்டும்

தன்னையே தருவான்!

எனவே

இறைவனையே ஊதியமாய் பெறும்

இனிய நாளிது!

இன்று மட்டும் இல்லாதவர் எவரும்

இஸ்லாமியரில் இல்லை என

சத்தமிட்டு - சத்தியமிட்டுக் கூறலாம்

ஏனெனில் வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும்

ஓர் ஏழைக்கு பித்ரா - தர்மம்

ஐம்பது ரூபாய் அவசியம் கொடுத்தே

ஆக வேண்டும்! - இஸ்லாம்

ஏழைகளை இறைவனின்

உண்டியலாக்கி அழகுபார்க்கிறது!

இங்கு செலுத்தினால் -

அங்கு கடவுள் காணிக்கையாக

கணக்கு வைக்கப்படுகிறது!

ரமலான்முஸ்லிம்களை

முனிவர்கள்போல மாற்றிவிடுகிறது!

உணவை மறந்த வாய்

பொய் - புறம் பேசவும் மறந்து போகிறது!

எதற்குமே தட்டுப்பாடில்லை - ஆனால்

மனம் - ஆன்மா

கட்டுப்பட்டு கட்டுண்டு கிடக்கிறது!

இது முப்பது தின பயிற்சி வகுப்பு - ஆனால்

இதில் பயின்ற பாடங்கள்

முன்னூற்று அறுபது நாட்களுக்கும்

போதுமாகும்.

ரமலான் சுவனத்து வசந்தம்!

அது நம் வாசலுக்கு வந்தது

வரவேற்றோம்! வாரி நுகர்ந்தோம்!

வழியனுப்பி வைத்தோம்!

இன்ஷா அல்லாஹ்!

வரும் ஆண்டும் வரவேற்கக் காத்திருப்போம்!

அனைவருக்கும் அகம் குளிர்ந்த

ஈதுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!