அருள் மொழிகள்
நாம் பிரபஞ்சமாக இருக்கிறோம் என்பதே சரியான வார்த்தை. பிரபஞ்சத்தில் நாம் காண்பதற்கு ஒரு பகுதியாக உள்ளோம். ஆனால் தாற்பரியத்தில் பிரபஞ்சமாகத்தான் இருக்கிறோம். தனிமையில் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாப் பொருள்களும் நம் உடலில் இருக்கின்றன. ஆகாயம் - காற்று - பவனம், கடல், அலை - மலை அனைத்துமே இருக்கின்றன. பிரபஞ்சத்திலிருந்து வந்த நாம் - நம்மில் அது இருக்கத்தான் வேண்டும்.
மனிதன் ஒரு பகுதியாக இருந்தாலும் எல்லா அம்சங்களும் அவனில் அமைந்துள்ளன! ஒரு தாளின் துண்டை எடுத்துக் கொண்டால் அந்த காகிதத் துண்டில் முழுத்தாளின் அம்சமும் இருக்கிறது. தன்னை பிரபஞ்சமாக நினைத்துக் கொண்டால் - அது முழுமையாக மனதில் ஏற்பட்டதென்றால் அவன் முழுவதையும் அடைந்து கொள்வான். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நிலையில் இருந்ததால் தான் முழுமையாகத் திகழ்ந்தார்கள். இதைச் சொல்லத்தானே வேண்டும்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் , ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்ற நபிமார்கள் வந்து நல்ல மார்க்கத்தைத் தான் சொல்லிச் சென்றார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அனைத்து வியங்களையும் கூறிச் சென்றார்களா என சொல்ல இயலாது. சிறிது காலத்திலேயே அவர்களை மக்கள் போகச் செய்து விட்டார்கள். அவர்கள் முப்பது வயதிற்குள் செல்ல வேண்டிய தாகிவிட்டது. அவர்கள் நாற்பது வயதுக்குள்ளாகவே நபியாக வந்து சென்று விட்டார்கள். நாற்பது எனச் சொன்னது அறிவு முதிர்ச்சி அடையும் ஒரு கட்டம். ஆதலால் தான் நாற்பது எனச் சொல்லப்பட்டது.
ஆனால் நபிமார்கள் ரசூல்மார்கள் குத்புமார்கள் இவர்களெல்லாம் பிறக்கும் போதே நபியாகப் பிறப்பவர்கள். அதற்கு உதரணமாகத்தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் சென்ற பிறகு என்ன நடந்தது? எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள். இப்போது இஸ்லாத்தில் உள்ள சிலர் குர்ஆன் ஹதீஸை மாற்ற முயல்வது போல! குர்ஆனிலிருந்து ஆயத்தை - ஹதீது கிதபுகளிலிருந்து ஹதீஸை எடுத்து விடுகிறார்கள் அல்லவா?இஸ்லாத்திலும் இப்போது அந்தக் கட்டம்தான் நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஆராய்ந்து பார்த்தால் மூஸா அலைஹிஸ்ஸலாம்,ஈஸா அலைஹிஸ்ஸாம் சொன்னவை இவைதான் என சுத்தமாக இல்லை. அதனால் பின்பற்றத்தக்க மார்க்கமாக இல்லாமல் போய்விட்டது. ஆனால் ஒரு பகுதியினர் அதைத் தொடர்ந்து வந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் தந்தை அப்துல்லாஹ் (ரலி) அன்னையாக ஆமினா (ரலி) மற்றும் அவர்களின் முன்னோர்களான தந்தைமார்கள், அவர்களை யெல்லாம் முஸ்லிம்கள் என்றே சொல்ல வேண்டும்.
யார் காபிர்?
எல்லா மார்க்கமும் வேதங்களும் இஸ்லாத்தைத் தான் போதித்தன. தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தின் பெயர் என்ன? குர்ஆன்தானே! எல்லா வேதங்களுக்கும் பெயர் குர்ஆன்தான்! எல்லா வேதங்களின் சாரமும் முழுமையாக அமைந்ததே இறுதியாக அருளப்பட்ட திருக்குர்ஆன். எனவே அந்த வேதக் கருத்துகளை பின்பற்றியவர்களை காபிர் என எப்படிக் கூறமுடியும்?, சொல்பவனே காபிர். பெருமானார் (ஸல்) அவர்களின் பெற்றோரை கப்ரிலிருந்து எழுப்பி இஸ்லாமாக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நேரத்தோடேயே அவர்கள் முஸ்லிம்கள் தாம். அவர்களை எழுப்பியதற்குக் காரணம் தாயும் தந்தையும் என்னைப் பின்பற்றியவர்களாக இருக்கட்டும் என்பதற்காகத்தான். இது பெருமானார் (ஸல்) அவர்கள் பெற்றோர் மீது கொண்ட அன்பின் அடையாளம். அவர்களை காபிர் என்பவனே காபிர். அதுதான் மிருகக்குணம். ஒன்றை விளங்கி நடப்பது மனித குணம். விளங்கியும் விளங்காமல் நடப்பது மிருகக் குணம்.
மிருகங்கள்!
காட்டில் வசிக்கும் புலி - சிங்கம் - நரி - யானை - நாய் இந்த ஒவ்வொன்றின் குணத்தையும் பார்த்துள்ளீர்களா? ஒவ்வொன்றும் தனித்தனி குணத்தைப்பெற்றவை. சிங்கம் நல்ல மிருகம். பசி வந்தால் தான் பாயும். அது விரட்டிக் கொண்டு ஓடுவதில்லை. தேவைப்படும் நேரத்தில் சாப்பிடும். அல்லாஹ் அதற்கு இரையாக மிருகங்களைத்தான் வைத்துள்ளான். நமக்கு ஆடு மாடுகளை வைத்திருப்பது போல அதற்கு பாதையில் செல்வதை உணவாக வைத்துள்ளான். சிங்கத்தின் குணம் அரசனுக்குரிய குணம். அது அநியாயமாக நடக்காது. நல்ல பாம்பு என பாம்புக்குச் சொல்கிறோம். ஏன்? அது தன்னைச் சீண்டியவர்களைத்தான் கடிக்கும். மிருகங்களில் நல்ல குணம் உள்ளவையும் உள்ளன. புலியைப் பாருங்கள். விரட்டி விரட்டி ஓடிப் பிடித்து சிறிதளவு சாப்பிட்டு விட்டு, போட்டு விட்டுப் போய்விடும். இது புலியின் குணம். நரியோ கூட்டமாகச் சேர்ந்தால் ஒரு மனிதனைக்கூட கொன்று தின்று விடும். அது தந்திரம் மிகுந்தது. நரிக்குணம் என்று சொல்வார்களல்லவா? அது எப்படியாவது தந்திரம் செய்து தன் வேலையை செய்துவிடும்.
நன்றி கெட்ட மனிதன்
நாய் படுமோசமானது. பாவம்.... அப்படிச் சொல்லக்கூடாது. நாயிடமுள்ள நன்றி மனிதனிடம் இல்லை. அதனால் மனிதனை நாயயன்று சொல்லாதே என்பர். ஏன்? அது நன்றியுடையது. மனிதன் நன்றியற்றவன். நாய் எஜமானைக் கண்டவுடன் வாலை ஆட்டிப் பணிவு காட்டும். எஜமானோடு எங்கும் தொடர்ந்து போகும். நன்றியுடைய அதனை மோசமாகச் சொல்ல முடியாது. அதனால் மனிதனை நாய் என ஏசுதல் பொருந்தாது. ஒரு சிலர் நன்றி கெட்ட நாய் என்பர். அது தவறு. நாயோ நன்றியுடையது. ஒரு சிறிய எலும்பைப் போட்டால் கூட சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டி மரியாதை செய்து விட்டுத்தான் போகும். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது போல. நன்றி கெட்ட நாய் என சொல்கிறார்கள். இனி நன்றி கெட்ட மனிதன் என ஏசலாம் (சிரிப்பு) அது நல்ல மிருகம். ஆனால் அதனைத் தொடக் கூடாது! நாயுடன் பழகினால் நோய் (ரேபீஸ்) ஏற்பட்டு விடும். கள்ளன் வந்தால் கடைசி வரை விடவே விடாது!
கழுதையைப் பாருங்கள். அதன் மேல் என்னதான் ஏற்றிவிட்டாலும். அது போகும் போக்கிலேயே போகும். ஆனால் நாயின் வேலையை கழுதை செய்யக் கூடாது. ஒரு தடவை ஒரு வீட்டுக்கு கள்வன் வந்தான். அந்த வீட்டில் கழுதையும் நாயும் இருந்தன. கழுதை மீது அவன் நல்ல அன்புவைத்திருந்தான். ஒரு நாள் நாய் ஏதோ செய்ய எஜமான் நாயை அடிக்க நாய்க்கு கோபம் வந்து விட்டது. அன்றிரவு கள்வன் அந்த வீட்டுக்கு வந்தான். நாய் பார்த்தது. நாம் ஏன் சப்தமிட வேண்டுமென எஜமான் மீதிருந்த கோபத்தில் பேசாமல் மெளனமாக படுத்துக் கொண்டது. கழுதை பார்த்தது... அய்யோ... என் எஜமானின் பொருட்கள் களவு பேய்விடுமே என கத்த ஆரம்பித்தது. நாய் மாதிரி குலைக்கத் தொடங்கிவிட்டது. எஜமான் பார்த்தான். என்ன இது தொடர்ந்து குலைக்கிறதே? பெரிய அதாபாக இருக்கிறதே என கழுதைக்கு அடியைப் போட்டான். இதைத்தான் நாயுடைய வேலையை கழுதை செய்யக் கூடாது என்பார்கள்! எனவே ஒருவர் வேலையை மற்றவர் செய்யப் போகக்கூடாது.
மனிதர்களை உற்று நோக்கினால் மிருகக் குணங்கள் தெரிகிறதல்லவா?, நிச்சயமாக இருக்கும். கழுதையின் குணம் ஒருவனுக்கு இருக்கும். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாய் செய்யும் வேலையை கழுதை செய்தது போல அந்த குணமும் சிலரிடம் இருக்கும்.
சிங்கம் அதனுடன் சண்டைக்குவந்தால் விடாது. ஒரே பாய்ச்சல் தான். எதிர்த்தது யானையாக இருந்தாலும் சரி. அது யானை மீது தாவி கழுத்தைக் கடிக்கும். பெரிய யானையை சிறிய உருவம் படைத்த சிங்கம் கொன்று விடும். அத்தகு வீரமுடையது.
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் திண்டுக்கல் மஜ்லிஸில் ஆற்றிய உரையிலிருந்து....