• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


ஏகக்கலை....

 

அன்று மனிதன் அனைத்திலும் பரத்தினை முதலாய்க் கொண்டு சிந்தித்தான்; அனைத்திலும் சத்தியத்தை நிலை நிறுத்தினான்; உத்தம பணி நித்தியன் பணியேறு ஒரு நிலை நின்றான். இன்று அவன் அனைத்திலும் இகத்தை முதலாய்க் கொண்டு சிந்திக்கின்றான்; அசத்தியத்திற் சித்தஞ்சிதறத் தலைவிரித்தாடுகின்றான்; தனது வாழ்வே நித்திய பணியென முத்தியை மறந்து சுழல்கின்றான். இதனாலே அசத்தியம் முடிவானில் தலை தூக்க சத்தியம் அடிவானில் மறைந்து கொண்டிருக்கிறது.

ஞானமெனும் பேரொளி மண்டிருளில் மறைய ஞானக்கண் குருடடைந்து மனிதன் மருட்கொள்கின்றான்; குருட்டுக்கண்ணால் ஞான ஒளியைக் காண முடியாதவன் அதனை எதிர்க்கின்றான். எனவே, ஞானம் ஈனமெனக் கருதுகின்றான். வானம் முட்டப் பகை எழுப்புகின்றான். ஏகம் அனைத்துமாகும்; அனைத்தும் ஓருடலாகும்; அஃதே ஒற்றுமையாகும். இங்கே வேற்றுமையைக் காண்பது எங்கே?

ஞானக்கலை ஏகக்கலையாகும். ‘ ஏகக்கலை மறைந்தமையாலே இன்று எங்கும் மானக்கொலை ஏற்படுகின்றது; நிம்மதி குலைகின்றது; வன்கண்மை நிறைகின்றது; பகை மிகைக்கின்றது. ஆதலினால், ஏக ஞானம் எனும் தூயவாளைக்கொண்டு இவைகளை ஒழிக்கவியலும். எனவே, வேண்டாம் எனும் ஒரே முடிவைக்கொண்ட மறநெஞ்சை மாற்றிச் சற்றுச் சிந்திப்போம் எனத் துணிதல் மனிதனுக்கு அவசியமே.

 

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் 76 ஆவது பிறந்த பொன்னாள்!

தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தந்த தன்னையறியும் கலையை உயிர்ப்பிக்க அவர்களின் திரு மரபில் ஒரு தங்க நிலா உதித்த நாள்.

மெய்ஞ்ஞானம் உயிர்ப்பிக்க வந்த மேலாம் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் திருப்பேரர்களில் ஒரு மெய்ஞ்ஞானி மலர்ந்த நாள்!

தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தழைத்தோங்க தங்கமகவாய் குத்புல் ஃபரீத் யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள் தரணிக்குத் தந்த நாள்.

முரீதுகளின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க ஷைகு நாயத்தை  தந்ததற்காக இறைவனுக்கு  நன்றி சொல்லும் திருநாள் ­ஷவ்வால்  பிறை 16 (15.09.2011).