தொடர்......
சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்...
அறபுத் தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகு தமிழில்: கிப்லா ஹள்ரத், திருச்சி.
ஹள்ரத் முஹம்மது இபுனுல் ஹஸன் அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்டறிந்த சில மஸாயில்கள் (மார்க்க சட்ட திட்டங்கள்) சிலவற்றை ஈங்கண் காண்போம்.
ஹள்ரத் முஹம்மது இபுனுல் ஹஸன் கேட்டார்:
மனிதர் ஒருவர் ஜைது என்பவரின் வீட்டிற்குச் சென்று ஒரு தேக்குத்தடி ஒன்றை எடுத்து வந்து தன்வீட்டைப் பூசும் போது சேர்த்துக் கட்டிவிட்டார். பின்னர் ஜைது இரண்டு சாட்சிகளுடன் வந்து அந்தத் தேக்குக் கம்பு தன்னுடையது தான் என்பதை உறுதிப்படுத்தினார் என்றால் தாங்கள் எவ்வாறு இவ்விஷயத்திற்கு தீர்ப்பளிப்பீர்கள்?
இதற்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்.
தேக்குக் கம்பின் விலையை ஜைதுக்குக் கொடுத்து விடும்படிக் கூறுவேன். அதற்கு அவன் சம்மதிக்காவிட்டால் அவன் கட்டிய வீட்டை இடித்து அந்தத் தடியை ஒப்புவிக்க வேண்டும் என்று சொல்வேன். இதுதான் எனது தீர்ப்பாகும்.
இதைக் கேட்டவுடன் முஹம்மது இபுனுல் ஹஸன் அவர்கள், லா லரர வலா லிராரா மார்க்கத்தில் தங்கடமும் இல்லை தங்கடப்படுத்துவதும் இல்லை (மார்க்கத்தில் பிறருக்கு சங்கடத்தைத் தரவும் கூடாது. சங்கடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் கூடாது) என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றார். அதற்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்கள், தனக்குத் தானே சங்கடத்தை உண்டாக்கிக் கொள்பவனுக்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் இல்லை என்றார்கள்.
முஹம்மது இபுனுல் ஹஸன் கேட்டார்:
ஜைது என்பவர் ஹாலித் என்பவரின் பட்டு நூலை வம்படியாக எடுத்துச் சென்று விட்டார். பின்னால் தன் வயிற்றில் ஒரு காயத்திற்காக வேண்டி அந்தப்பட்டு நூலினை பிடித்துக் கட்டிப் பயன்படுத்திக் கொண்டார். அப்போது ஹாலித் வந்து தன்னுடைய நூலைத்தான் தரவேண்டும் என்று கேட்டால். தங்களின் தீர்ப்பு என்ன? என்றார்.
அதற்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அந்த நூலின் விலையைக் கொடுத்தால் போதும், இதுவே எனது தீர்ப்பு என்றார்கள். பின்னர் ஒருவர் கேட்டார் : இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களே, பக்ரு என்பவர் அம்ரு என்பவரின் ஒரு பலகையை வம்படியாக எடுத்துச் சென்று தான் கட்டிக் கொண்டிருந்த கப்பலில் இணைத்து விட்டார். பின்னர் அந்தக் கப்பலின் பணிகள் முடிந்தன. கப்பலில் பலரும் ஏறி பிரயாணம் செய்து போய்க் கொண்டிருந்த போது அந்தப் பலகையின் உரிமையாளர் எனது பலகையை எனக்குக் கொடுத்து விடுங்கள் என்றால் தங்களின் தீர்ப்பு என்ன?.
அதற்கு அந்தப் பலகையை கப்பலிலிருந்து எடுக்கக்கூடாது என்று தான் தீர்ப்பளிப்பேன். இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த முஹம்மது இபுனுல் ஹஸன், தங்களின் பதில்களும், தீர்ப்புகளும் முரண்பாடுகளாக உள்ளனவே என்றார். அதற்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்கள், வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்குப் பட்டு நூலைக் கட்டி நோயை குணப்படுத்திக் கொண்டார். அந்த நூலை எடுத்தால் அந்த மனிதருக்கு நோவினை ஏற்படுமா? ஏற்படாதா? என்று கேட்டார்கள். நோவினை ஏற்படும் என்று முஹம்மது இபுனுல் ஹஸன் கூறினார். கப்பலில் பலகை தனக்குச் சொந்தமானதாக இருந்தால் அந்த நேரத்தில் ஆகுமா? ஆகாதா? என்று கேட்டார்கள். ஆகாது என்றார். அந்த வீட்டில் வைத்துக் கட்டிய தேக்குத்தடி தனக்குச் சொந்தமாக இருந்தால் அந்த வீட்டை இடித்து அந்தப் பலகையை எடுப்பது தனக்கு ஆகுமா? ஆகாதா? என்றார்கள். உடனே முஹம்மது ஹஸன் ஆகும் என்றார்.

உடனே இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. ஆகுமாயிருப்பதை ஆகாதிருப்பதைக் கொண்டு எவ்விதம் கியாஸ் (ஒழுங்குபடுத்துதல்,தகுதிபடுத்தல், கணக்கிடுதல்) ஜோடித்து சொல்வீர்கள் என்றார்கள்.
முஹம்மது இபுனுல் ஹஸன் இமாமவர்கள் கூற்றை ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அந்தக் கப்பல்காரனுக்கு என்னதான் தீர்ப்புச் சொல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,கப்பலிலுள்ள பலகையைப் பிடுங்கி எடுத்தால் அனைவரும் நீரில் மூழ்கி அழிந்து விடுவார்கள். எனவே, கப்பல் கரையை அடைந்ததும் அந்தப் பலகையைக் கொடுத்து விட வேண்டும் என்பது தான் எனது தீர்ப்பாகும்.
இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கேட்டார்கள்:
ஜைது என்பவர் ஓர் அடிமைப் பெண்ணை வம்படியாக ஜிமாஉ (உறவு) கொண்டு அதனால் அப்பெண் கருத்தரித்து பத்து ஆண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்; அந்தப் பத்து பேரும் காழிகளாகவும், கதீப்களாகவும் ஆகிவிட்டார்கள். அந்நிலையில் அந்த அடிமைப்பெண்ணின் உரிமையாளர் வந்து தன் அடிமைப்பெண்தான் இவள் என்று சாட்சி கூறினால் நீங்கள் என்ன தீர்ப்பு சொல்வீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு முஹம்மது இபுனுல் ஹஸன் அவர்கள், அந்தப் பத்துப் பேரும் அந்த மனிதனுக்கு அடிமைகள் என்று தீர்ப்பு செய்வேன் என்றார். அதற்கு இமாம் ஷஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், முன்பு சொன்ன தேக்குத் தடியை வீட்டை இடித்துக் கொடுப்பதில் தங்கடம் மிகுதமா? அல்லது இந்தப் பத்துப் பேரையும் அடிமை என்று தீர்ப்புச் செய்வதில் சங்கடம் மிகுதமா? என்றார்கள். இன்னும் இந்தப் பத்துப்பேரில் சொன்ன சட்டத்தை தேக்குத் தடி வியத்தில் நீர் சொல்லாமல் போனது புதினம் என்றார்கள். உடனே முஹம்மது இபுனுல் ஹஸன் அவர்கள் இமாமவர்கள் கூற்றை ஒப்புக் கொண்டு கஸ்பு (வம்பிக்குதல், கொள்ளையடித்தல், அநீதமாக எடுக்குதல், அடர்ந்தேறுதல்) பாடத்தில் இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லியவற்றையே தம்முடைய தீர்ப்புகளாக மாற்றிக் கொண்டார்கள்.
(தொடரும்)