ஜனாஸாவின் சட்டங்கள்
ஆலிமாக்கள் பேரவை. சக்கராப்பள்ளி
ஹதீஸ் - 1: நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு ஜனாஸா (சந்தூக்கில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அது நல் அமல்கள் செய்த மைய்யித்தாக இருந்தால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும்”. அது நற்செயல்கள் செய்யாத (மைய்யித்) தாக இருந்தால் “கை சேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இந்த சப்தத்தை மனிதனைத் தவிரவுள்ள அனைத்தும் செவிமடுக்கும். மனிதன் செவிமெடுத்தால் மயங்கி விழுந்து விடுவான்.
(அறிவிப்பு : அபூசயீதுல்குத்ரீ (ரலி) நூல் புகாரீ - 1316)
ஹதீஸ் - 2: ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறந்து போனவர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் தாம் செய்த செயல்களின் பக்கம் சென்றடைந்து விட்டனர்.
ஹதீஸ் - 3: அபூசயீதுல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின் தொடர்ந்து செல்பவர்கள் ,(அதைக் கப்ரில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்.
ஹதீஸ் - 4: யார் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன நாயகமே என கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு நன்மை என்றார்கள்.
பாடம் : ஒரு மவ்த்து வியம் தெரிந்த பின் முடிந்தவரை அதன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரையுள்ள பணிகளில் பங்கேற்பது பன்மடங்கு நன்மையைத் தேடித்தரும் சுன்னத்தான வழிமுறையாகும்.
ஹதீஸ் - 5: நபிகள் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். உங்களில் ஒருவர் மவ்த்தாகிவிட்டால் அவரை (நீண்ட நேரம்) தடுத்து வைக்காதீர்கள். அவரது மண்ணறைக்கு விரைந்து எடுத்துச் செல்லுங்கள். இன்னும் அவரது தலைக்கு அருகில் சூரத்துல் பகராவின் ஆரம்பத்தையும் அவரது காலடியில் அதே சூராவில் இறுதி வசனங்களையும் ஓத வேண்டும்.
ஹதீஸ் - 6: இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மைய்யத்துக்களை கப்ரில் வைக்கும் போது “பிஸ்மில்லாஹி வஅலா மில்லத்தி ரசூலில்லாஹி என்று கூறுவார்கள்.”
ஹதீஸ் - 7: ஹள்ரத் அனஸ் (ரலி) கூறுகிறார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களது மகளாரின் அடக்கத்தில் கலந்து கொண்டோம். அப்போது கப்ருக்கருகில் உட்கார்ந்திருந்த நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீர் வடிந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன். (கடந்த) இரவு வீடுகூடாதவர் உங்களில் யாரும் உண்டா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் நான் இருக்கிறேன் என்றதும் “இந்தக் கப்ரில் இறங்குங்கள் என்றார்கள். உடனே அவர் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார்.”
ஹதீஸ் - 8: நபிகள் (ஸல்) அவர்கள் (மையத்தை) அடக்கம் செய்யும் போது தங்களின் இருகரங்களாலும் மூன்று முறை பிடிமண் அள்ளிப் போடுவார்கள். மேலும் தங்களின் மகன் இப்றாகீமுடைய கப்ரின் மீது தண்ணீர் ஊற்றினார்கள்.
பாடம் : ஜனாஸாவை கப்ரில் வைத்ததும் மூன்று முறை பிடிமண் போடுவது சுன்னத்தாகம். முதல் தடவை : மின்ஹா ஹலக்னாக்கும். இரண்டாம் தடவை : வஃபீஹா நுஈதுக்கும் மூன்றாம் தடவை : வமின்ஹா நுஹ்ரிஜுக்கும் தாரதன் உஹ்ரா என்று ஓத வேண்டும்.
பின்பு கப்ரை முழுமையாக மூடியதும் அதன் மீது தண்ணீர் ஊற்ற வேணடும். அப்போது யா அய்யதுஹன் நப்சுல் முத்மயின்னா, இர்ஜிஈ இலாரப்பிகி ராளியத்தன் மர்ளிய்யா, ஃபத்குலீ ஃபீஇபாதீ, வத்குலீ ஜன்னதீ,என்று ஓத வேண்டும்.
(அல்குர் ஆன் 89 - 27)
ஹதீஸ் - 9: ஹள்ரத் உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள். ஒரு மைய்யித்தை அடக்கம் செய்து முடித்ததும் அங்கு சிறிது நேரம் நின்று “உங்கள் சகோதரருக்காக பாபமன்னிப்பு தேடுங்கள். அவரது ஈமானின் உறுதிக்காக துஆ கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசரிக்கப்படுகிறார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
ஹதீஸ் - 10: நபிகள் (ஸல்) கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். ஓர் அடியாருடைய உடலைக் கப்ரில் அடக்கம் செய்து விட்டு அவரது தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை மைய்யித் செவியேற்கும்.
ஹதீஸ் - 11: புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் (ஸல்)அவர்கள் மண்ணறைகளுக்குச் செல்லும் போது (நடந்து கொள்ளக் கூடிய முறையை) கற்றுத் தந்தார்கள். “அஸ்ஸலாமு அலைக்கும் தாரகவ்மின் முஃமினின் வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன், நஸ் அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியா”
ஹதீஸ் - 12: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கப்றுகளை ஜியாரத் செய்வதை விட்டும் உங்களை தடுத்திருந்தேன். இனி நீங்கள் அதனை ஜியாரத் செய்யுங்கள். நிச்சயமாக அது மறுமையை நினைவுபடுத்தும்.
ஹதீஸ் - 13: அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் தங்களிடம் தங்கியிருக்கும் இரவுகளில் இரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜுது நேரத்தில்) ஜன்னத்துல் பகீ (எனும் கப்ருஸ்தானு)க்கு ஜியாரத் செய்வதற்காக புறப்படுவார்கள்.
(நூல் : முஸ்லிம் 2208)