• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  மாப்பிள்ளை லெப்பை ஆலிம்


தமிழகத்து வலிமார்கள்.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

கலீபா, எம். சிராஜுத்தீன் பி.எஸ்.ஸி. திருச்சி

 


இஸ்லாத்தின் முதலாம் கலீபா ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் கொடியினில் பூத்த நறுமலரான மாதிஹுர் ரசூல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மகளார் ஸாரா உம்மா.  இவரின் மகனார் ஷ்­ய்கு அஹமது.  அவர் மஜ்தூபு போல காடுகளில் சுற்றித் திரிந்ததால் இவருக்கு “காடு முறித்தார்” எனும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

இவரின் மகனார் ஷெய­ய்கு மீரானும் சிறந்த ஆன்றோராகவும் சான்றோராகவும் விளங்கினார்.  இவரின் மகனார் அஹமது.   இவர் கள்ளம் கபடமற்ற வெள்ளை மனத்தினராய் விளங்கினார்.  ஆகவே அவரை மக்கள் வெள்ளை அஹமது என்று அழைத்தார்கள்.

இவர் காயல்பட்டினம் தைக்கா சாஹிபு வலீ அவர்களிடம் மார்க்க நூல்கள் கற்று வந்தார். மற்றொருபுறம், மாதிஹிர் ரசூல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் அருந்தவப் புதல்வர் அல்லாமா முஃப்தி முஹம்மது லெப்பை ஆலிம்.  இவரின் மகனார்  ஷெ­ய்கு சுலைமான் லெப்பை ஆலிம்.  அன்னாரின் மகனார் சதக்கத்துல்லாஹ் என்பவராவர்.  இவரின் திருமகளார் மீரா உம்மா.  இவரின் மகளார் ஆமீனா உம்மா.

ஷெ­ய்கு மீரான் அவர்கள் தம் அருமை மகளார் வெள்ளை அஹமது அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார்.  அப்போது இந்த ஆமீனா உம்மாவின் நினைவு வந்தது.  அதன்படி பெண்பேசி முடிக்கப்பட்டது.  வெள்ளை அஹமது ஆமீனா உம்மா திருமணம் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது.

இந்தத் திருமணத்தின் மூலம் மாதிஹிர் ரஸுல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் ஆண் வழியும், பெண் வழியும் ஒன்றாக இணைந்தது.  இத்தம்பதியருக்கு ஹிஜ்ரீ 1232 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 16 செவ்வாய்கிழமையன்று ஓர் அழகிய ஆண்மகவு பிறந்தது. அதற்குப் பெற்றோர் செய்யது முஹம்மது என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.  செய்யது முஹம்மது அவர்களுக்கு இரண்டு வயதான போது அன்னாரின் பெற்றோர் காயல்பட்டினத்திலிருந்து கிளம்பி வந்து கீழக்கரையில் குடியேறினார்கள்.  சிறிது காலம் நடுப் பண்டக சாலையில் கணக்கு    எழுதியும், பின்னர் குர்ஆன் மற்றும் அரபி நூல்களைப் பிரதி செய்து கிடைத்த பணத்தில் வெள்ளை அஹமது குடும்பம் நடத்தி வந்தார்.

செய்யிது முஹம்மதுக்கு ஏழு வயதானது.  தந்தை வெள்ளை அஹமது லெப்பை அவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று குர்ஆன் ஓத வைத்தார்.  குர்ஆனை விரைவில் ஓதி முடித்த செய்யிது முஹம்மது தமது பத்தாவது வயதிற்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாபிள் ஆகிவிட்டார்.

வெள்ளை அஹமது லெப்பை அவர்கள் தம் மகனாருக்கு வீட்டில் வைத்தே மார்க்கக் கல்விகள் போதித்து வந்தார்.  பின்னர் உயரிய மார்க்கக் கல்வியை கற்பதற்காக கீழக்கரையில் தைக்கா சாஹிபு அவர்கள் நடத்தி வந்த தைக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அவர் பல்லாண்டு ஓதிப் பண்பட்ட நிலையில் இருக்கும் பொழுது தான் அவருக்கு தம் மகள் ஸாரா உம்மாவை மணம் முடிக்க விரும்பினார்  தைக்கா சாஹிபு. அதற்கு அவர் மனைவி முதலில் ஒத்துக் கொள்ளவில்லை.  தனது மைத்துனர் காயல் தைக்கா சாஹிபு அவர்கள் மூலமும் முயன்று பார்த்தார் முடியவில்லை. பின்னர் மனைவியின் விருப்பப்படி மாப்பிள்ளை பார்த்தார்கள். பார்த்த மாப்பிள்ளையயல்லாம் இறந்து போனார்கள்.  அதன் பின்னர்தான் ஸாரா உம்மாவின் தாயார் தம் மகளை செய்யது அஹமது அவர்களுக்கு மணம் முடித்துத் தர சம்மதித்தார்.


ஹிஜ்ரீ 1253 ஆம் ஆண்டு ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 27 ஆம் நாள் இத் திருமணம் எளிய முறையில் நடந்ததேறியது.  தைக்கா சாஹிபு அவர்கள் தம் மருமகனை பெயர் சொல்லி அழைக்காமல் ஆலிம் சாஹிபு என்றே அழைத்து வந்தார்.  ஒரு சமயம் ஒரு மாணவரிடம் “ஆலிம் சாஹிபைக் கூப்பிடு” என்று சொன்னபோது “எந்த ஆலிம் சாஹிபு”  என்று கேட்டு விட்டார்.  உடனே “மாப்பிள்ளை ஆலிம் சாஹிப்” அவர்களைத் தான் என்று தைக்கா சாஹிபு அவர்கள் கூறினார்கள்.  அன்று முதல் ”மாப்பிள்ளை ஆலிம் சாஹிபு” என்ற பெயர் அவர்களுக்கு நிலைபெற்றது.  அதுவே “ஆலிமுல் அரூஸ்” என்று அறபியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

 - தொடரும் -