• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  இஸ்லாம் கூறும் தீர்வு!


இஸ்லாம் கூறும் தீர்வு!

திருமறைப் பக்கம்                                                                                                      - ஆலிம் புலவர்

இறை நம்பிக்கையாளர்களே!  கொலை செய்யப்பட்டவர்கள் விஷ­யத்தில் பழிவாங்குதல் உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவனும், அடிமைக்குப் பதிலான அடிமையும், பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் (பழிவாங்கப்படும்) எனினும் (கொலை செய்யப்பட்ட) அவனுடைய சகோதர (பாத்தியஸ்த)ர் மூலம் (கொலை செய்த) இவனுக்கு ஏதேனும் மன்னிப்பளிக்கப்பட்டால், அப்போது (கொலையாளி) நல்ல வழக்க முறையைப் பின்பற்றி (அதற்கான ஈட்டுத் தொகை முதலியவற்றை நன்றியறிதலுடன் (கொலை செய்யப்பட்ட) அவ (னுடைய பாத்தியஸ்தரின் பால் நிறைவேற்றுதல் வேண்டும். இது உங்களுடைய இறைவனிடமிருந்து (உங்களுக்குக் கிடைத்துள்ள சலுகையும் கிருபையுமாகும்....... (2: 178)

இது இந்தியாவின் போராட்ட காலம் போல் தெரிகிறது. வட நாட்டில் அன்னா ஹசாரே என்பவரின் போராட்டம் முடியும் நேரம் தமிழ் நாட்டில் ஒரு போராட்டம் தொடங்கி தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் தூக்கு தண்டனைக் கைதிகளாக நாள் குறிக்கப்பட்ட சாந்தன் - பேரறிவாளன் - முருகன் ஆகியோருக்கு ஆதரவாகத் திரண்ட எழுச்சிதான் அது.

அவர்கள் மூவரும் தண்டனைக்குரியவர்கள் என உச்சநீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளித்து, ஜனாதிபதியிடம் கருணைக்காக காத்திருந்து, அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றவாளிகள் மேல் இரக்கப்பட்டு, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று அனுதாப அலை எழுந்திருக்கிறது. உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பின் - ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராரிக்கப்பட்டபின் அவர்கள் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்ன செய்வதென வழியறியாமல் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இந்தியக் குற்றவியல் சட்டப்படி இதற்குமேல் ஒன்றும் செய்வதற்கில்லை.  இனிமேல் தான் இதற்கொரு புதிய வழிமுறை கண்டு பிடிக்கப்படலாம்.

ஆனால் இஸ்லாமிய  குற்றவியல் தண்டனை சட்டப்படி இதற்கு அழகான தீர்வு இருக்கிறது. நாம் மேலே பதித்துள்ள இறைவசனத்தில் இதற்கான தீர்வு ஒளிக்கீற்றாக மின்னுவதைப் பார்க்க முடியும்.  அது என்ன?

1.  கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் இவர்களை மன்னிக்க முடியும்.

2.  வாரிசுகள் - தியத் - எனும் தண்டத்தைப்  பெற்றுக்கொண்டு அவரை விடுவிக்கலாம். இந்தத்  தீர்வின்படி இஸ்லாமிய நாடாகவிருந்தால் ராஜீவ் காந்தியின் வாரிசுகளை அணுகி கருணையை எதிர்பார்க்க முடியும்.

அல்லாஹ் இந்த ஆயத்தின் மூலம் மன்னிக்கும் உரிமையை கொலை செய்யப்பட்டவர்களின் வாரிசுகளிடமே ஒப்படைத்திருப்பது மனித உரிமையின் உச்சகட்டத் தீர்வாகும். சுப்ஹானல்லாஹ்!  இஸ்லாம் எத்துணை அழகாக சட்டம் வகுத்திருக்கிறது பாருங்கள்! மேலும் இந்த ஆயத்தின் விளக்கத்தில் தப்ஸீர்கலை விற்பன்னர்கள் அழகாக இப்படி எழுதுகிறார்கள்.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டப்படி கொலைக் குற்றம் கூட சமரசம் செய்து தீர்வு காணக்கூடிய குற்றமாகும் என இந்த வசனத்திலிருந்து தெரிகிறது. கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு, கொலையாளியைப் பழிவாங்காமல் மன்னித்து விடுகிற உரிமை தரப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள்  மன்னித்து விடும்போது கொலையாளியின் உயிரைப் பறித்தே ஆகவேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. எனினும் மன்னிப்பு அளிக்கப்படும் போது கொலையாளி ஈட்டுத் தொகை செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தார் இழப்பீடு பெற்று நிம்மதியாக வாழமுடியும்.

வாரிசுகளின் உரிமையில் நீதி மன்றம் கூட, ஏன் ஜனாதிபதி கூட தலையிட இஸ்லாம் உரிமை அளிக்கவில்லை. என்ன இருந்தாலும் அவர்கள் மூன்றாவது நபர்கள் தானே! மேலும் அல்லாஹ் என்ன சொல்கிறான் பாருங்கள்!

 

 

நல்லறிஞர்களே! பழிவாங்குதலில் உங்களுக்கு வாழ்வுண்டு. (இத்தகைய  குற்றங்கள் பெருகாமல் ) நீங்கள் உங்களை (த் தீமைகளிலிருந்து ) காத்துக் கொள்ளலாம் (2: 179) இன்று தூக்கு தண்டனைக்கு எதிராகத் திரண்டு நிற்போர் யாரென ஏடுகளைத் திருப்பிப் பாருங்கள். படித்தவர்கள் - அறிவு ஜீவிகள் - எழுத்தாளர்கள் - சிந்தனையாளர்கள்.  அல்லாஹ் உலுல் அல்பாப்! அறிஞர்களே! என்று தான் அழைத்துச் சொல்கிறான்.

இவர்கள் இந்த நிலைக்கு வருவார்கள் என இறைவனுக்குத் தெரியாதா? அதனால்தான் அல்லாஹ் அறிவாளிகளே! என அழைத்து இந்த வாழ்வியல் உண்மையை உணர்த்துகின்றான். அறிவு என்ற பெயரில் புரட்சியாக ஒன்றைக் கூற வேண்டுமென நினைத்தும், தங்களை  இரக்கவாளிகள் என காட்டிக் கொள்வதற்காகவும் கடுமையான தண்டனை வேண்டாம் எனச் சொல்பவர்கள், மனிதனைப்படைத்த இறைவனை விட நாம் இரக்கமுள்ளவர்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  மனித வாழ்வின் அத்துணை அம்சங்களுக்கும் அழகான தீர்வை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளிவிட்டது. அதனைப் பயன்படுத்தும் பக்குவத்திற்கு இன்னும் வராமலிருப்பது மனிதர்களின் அறியாமையன்றோ!