• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  மாநபிகள் மணி மொழிகள்


மாநபிகள் மணி மொழிகள்

ஹதீஸ் பக்கம்                                                                                            பாகவி பின் நூரி, சித்தரேவு.

 


கலிமா சொல்

மனிதன் ஒருவன் “அனுதினமும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.  அனைத்திற்கும் மூல முதன்மையாகிய, அனைத்திற்கும் பின் பலமாகிய, அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை” என பத்து விடுத்தம் ஓதிவந்தால்,அம்மனிதனுக்காக வான் மண்டல மலக்குகள் பிழை பொறுக்கத் தேடுகிறார்கள்.


போதுமாக்கு

போதுமாக்குவது கொண்டு பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.  வறுமையை விட கசப்பானது வேறில்லை.  வறுமையைத் தேடாதீர்கள்.


தூய உள்ளம்

தீன் என்பது தூய உள்ளத்தோடு அல்லாஹ் ரஸூலின் நற்போதனைகளை முஃமின்கட்கு எடுத்துக் கூறுவது.  மேலும் தன்மானத்துடன் வாழ்வதாகும்.  அதாவது, தலையையும்  தலையைச் சுற்றியுள்ள உறுப்புகளையும் வயிற்றையும் வயிற்றுடன் சேர்ந்திருக்கும் குடல்களையும் தடுக்கப்பட்டவை (ஹராமானவை) களிலிருந்து பாதுகாப்பதாகும்.


விட்டுப் பிடித்தல்

வணக்கத்தின் தலை தன்னைத்தான் கட்டுப்படுத்தல்.  இபாதத்தில் சோம்பலை அல்லாஹ் பொருந்திக் கொள்ளமாட்டான். குறைந்த ரிஜ்கின் காரணத்தால் அல்லாஹ் மீது அதிருப்தி கொள்வது இறை தண்டனைக்கு அறிகுறியாகும். பாபம், பகைக்குணம், நன்றியின்மையுடன் உடல் ஆரோக்கியமாக இருப்பது இறைவன் தன் அடியானை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்பதாகும்.


கொட்டாவி

பள்ளியில் கொட்டாவி விடுவதும், வாந்தி எடுப்பதும், சில்லி மூக்கு உடைவதும், தும்முவதும் சைத்தானின் செயலாகும். 


இரவு வணக்கம்

இரவில் இபாதத் (வணக்கம்) செய், ஆட்டில் பால் கறக்கும் (குறைந்த) நேரமாகிலும் சரியே. பகலில் ஆயிரம் ரக்கஅத்துகள் நஃபில் (உபரி) தொழுவதைக்கான இரவில் இரண்டு ரக்கஅத்துகள் தொழுவது சிறப்பாகும்.  இரவில் நஃபில் (உபரி) வணக்கம் புரிபவன், பகலில் நபில் (உபரி) வணக்கம் செய்பவனை விட அழகிய முகத்தடன் மறுமையில் காட்சியளிப்பான்.


கேடயம்

நாள்தோறும் பாவமன்னிப்புத் தேடுங்கள். பாவமன்னிப்பு அதிகம் கோருங்கள். அது நரகிலிருந்து காப்பாற்றும் கேடயமாகும்.


விரும்பிய வாயில்

அல்லாஹ்வின் அருள் கிட்டியவன் நன்றி செலுத்தட்டும். சோதனை கிட்டியவன் பொறுமையாக (இருக்கட்டும்) இருந்தால் அவர்கள் விரும்பிய வாயில் வழியாக சுவர்க்கம் நுழைவார்கள்.


வேண்டாம் சாபம்

ஒரு முஸ்லிம் (மனிதன்) இதர ஊர்வனவற்றை சபிக்க வேண்டாம். ஏனெனின் அந்த சாபம் உன் பக்கமே மீளும்.


வேண்டாம் தூக்கம்

அதிகத் தூக்கம் கல்பை மரணிக்கச் செய்யும் (நற் சிந்தனையை இழக்கச் செய்யும்).  கவலையை உண்டாக்கும்.


கேள்

முக மலர்ச்சியானவர்களிடம், இறை நாணமுடையவர்களிடம், உன் தேவையைக் கேள்.  அது உள்ளத்திற்கு அமைதி தரும்.


செல்வந்தன்

உலகில் (ஹலாலாக) நேர்மையாகப் பொருள் ஈட்டினால் மன அமைதி பெறுவான்.  அவனே செல்வந்தன். ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின் வெட்டலைப் போன்று கடப்பான். இறைவன் அவனைப் பொருந்திக் கொள்வான். உலகில் (ஹராமான) நேர்மையற்ற முறையில் பொருள் தேடினால் தன் ரப்பை, கோபமாகிய நிலையில் சந்திப்பான்.