அண்ணல் நபி் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அற்புத வரலாறு
அத்தியாயம் : 80
உஹதுப் போரின் உச்சம்
ஹன்ளலா வீர மரணமடைந்து விட்டார். உஹதுப் போர் உச்சகட்டத்தை எட்டியது. மக்கத்துப் படையினர் பின் தள்ளப்பட்டு முஸ்லிம் வீரர்கள் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்றிருந்த இடத்தை விட்டு படையினர் விலகி மக்கத்துப் படையினரை பின் தள்ளியவாறு வீராவேசத்துடன் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் யுத்தகளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் துல்லியமாக அவதானிக்க முடியவில்லையாயினும்
தங்கள் வீரர்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும உணர முடிந்தது.
அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விண்ணை நோக்கி பார்வையைச் செலுத்தி ஏதோ பறவைகள் பறந்து செல்வதை அவதானிப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பின்னர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்மோடிருந்தவர்களிடம் “உங்கள் தோழர் ஹன்ளலாவை எதிரிகள் கொன்றுவிட்டார்கள். வானவர்கள் அவரைக் கழுவுகின்றனர்” என்று கூறினார்கள்.
ஹன்ளலா புதிதாக கல்யாணம் செய்திருந்தார். அதனால் அவர் யுத்தத்திற்குப் போகவில்லை. முஸ்லிம் படைகளுக்கு வீழ்ச்சி ஏற்படுகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே வாளை உருவிக் கொண்டு குளிக்காமல் அப்படியே யுத்தகளம் நோக்கி ஓடி வீராவேசத்துடன் போரிட்டு ஷஹீதானார்.
குறைஷியரின் படையமைப்பில் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து போகும்படி முஸ்லிம் படைகள் முன்னேறிச் சென்று விட்டது. அப்பகுதியில் ஏற்பட்ட வெற்றிடம் எதிரிகளின் பாசறைக்குள் செல்ல வழியைத் திறந்து விட்டது. அவ்வழியாகச் சென்று எதிரிகளின் பொருட்களைக் கைப்பற்றலாம் என்னும் எண்ணத்தில் முஸ்லிம் வீரர்கள் பலர் யுத்தம் புரிவதை விட்டு விட்டு பாசறை நோக்கி ஓடலானார்கள். இதைக் கண்ட உஹது மலையின் கணவாயில் நிறுத்தப்பட்டிருந்த வில்வீரர்கள் யுத்தம் முடிந்து விட்டது எனக் கூக்குரலிட்டபடி மலையிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டார்கள்.
“எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் இருந்த இடத்தை விட்டு நகரக் கூடாது” என்னும் நபிகளாரின் உத்திரவையும் மீறி அவர்கள் நடந்து கொண்டார்கள். அவர்களின் தலைவராக நியமிக்கப் பட்டிருந்த அப்துல்லா இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை.
உஹது மலையின் கணவாய்ப் பகுதியில் நடப்பவற்றை கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்த எதிரிகளின் குதிரைப் படைத் தளபதி காலித் இப்போது உஷார் ஆகி விட்டார். உடனே தம் குதிரைப் படையினரை அந்த கணவாய்ப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு நின்ற அப்துல்லா இப்னு ஜுபைர் (ரலி) மற்றுமுள்ள பத்து ஸஹாபாக்கள் அந்த குதிரைப் படையினரை எவ்வளவோ வில் எய்து தடுத்தும் அவர்களால் முடியவில்லை. இறுதியாக தம்மிடமுள்ள ஈட்டி, வாள் இவைகளைக் கொண்டு போராடி வீழ்ந்து விட்டார்கள். ஆம், அவ்வளவு பேரும் ஹீதாகி விட்டார்கள்.
இப்போது காலித் தம் குதிரைப் படையினருடன் வந்து முஸ்லிம் படையினருடன் வந்து முஸ்லிம் படைகளை பின்புறமாக தாக்கத் தொடங்கி விட்டார். பொருள்களைக் கைப்பற்றச் சென்றவர்கள் திரும்பிப் பார்க்க, நிலைமை மோசமானதை யுணர்ந்து மீண்டும் போர்க்களத்திற்கு மீண்டனர்.
யுத்தத்தின் போக்குத் தாறு மாறாகப் போய்விட்டது. எதிரிகள் யார்? தம் முஸ்லிம் சகோதரர்கள் யார்? என்று தெரிந்து கொள்ள முடியாமல் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர். இந்தக் குழப்பத்திற்கிடையில் தோற்றத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல உள்ள ஒரு தோழர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களை ஒரு குறைஷி கொன்று விட்டான். அவர் கீழே விழவும் நபிகளாரைக் கொன்று விட்டார்கள் (அல்லாஹ் பாதுகாப்பானாக) என்னும் செய்தி பரவி விட்டது. இதைக் கேட்ட முஸ்லிம் படையினரின் கை கால்கள் தளர்ச்சியுற்றன.
முஸ்லிம் படையில் எங்கு பார்த்தாலும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு விட்டது. ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் தங்கள் வீரவாளை வீசிக் கொண்டு எதிரிப் படையினர் மத்தியில் பாய்ந்தார்கள். அப்போது நபிகளார் எங்கு நிற்கின்றார்கள் என யாருக்கும் தெரியவில்லை. எதிரிப் படையினரின் தாக்குதல் அண்ணலாரின் அருகில் தான் அதிகமாக இருந்தது.
அனஸ் இப்னு நலர் (ரலி) என்ற தோழர் வீரத்துடன் போரிட்டுக் கொண்டே சென்ற போது ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் வாளைக் கீழே போட்டு சோர்ந்து போய் நிற்பதைக் கண்டார்கள். “ஓய்! உமர்! ஏன் இப்படி நிற்கிறீர்கள்? வாளை கையிலெடுக்கவும்” என்று சொல்ல அதற்கு உமர் (ரலி), இப்போது சண்டை செய்து என்ன ஆகப் போகிறது? எம்பெருமான் அவர்களே போய்விட்டார்கள்! என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னார்கள்.
அதற்கு இப்னு நலர் (ரலி) அவர்கள், “ஓ உமரே! பெருமானாரை இழந்து நாம் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறோம்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொர்க்கத்தின் வாடை உஹது மலைப் பகுதியிலிருந்து வீசுகிறது” என சொல்லிக் கொண்டு எதிரிகளின் மத்தியில் போரிட்டவாறே ஹீதாகிவிட்டார்கள்.
சண்டை முடிந்தபின் அவர்கள் சரீரத்தைப் பார்த்த போது அவர்களின் உடலில் வாளினாலும் ஈட்டியாலும் அம்புகளாலும் எற்பட்ட காயங்கள் எண்பதிற்கும் மேலாக இருந்து உடல் சிதைந்து போய்விட்டது. அடையாளங் கூட காண முடியவில்லை,அவரின் சகோதரி யுத்த களத்திற்கு வந்து ஒரு விரலின் அடையாளத்தை வைத்து கண்டு பிடித்தார்.
- தொடரும் -