வறலாற்றுச் சிறப்புமிக்க வலிகமாவில்
எழுச்சிமிகும் விழா
லால்பேட்டை தளபதி, மெளலவி அல்ஹாஜ் பீகுர் ரஹ்மான்
ஆலிம் மன்பஈ அவர்களின் உரையிலிருந்து .....
வெலிகம மீலாது மாநாடு
மீலாது விழாக்கள் நடத்தப்படுவதால் என்ன நன்மை? என சிலர் கேட்கிறார்கள். மீலாது விழாக்களில் என்ன நடக்கின்றது?இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஏனைய சமய அறிஞர்கள் ஆய்வாளர்கள் கல்வியாளர்கள் அழைக்கப்பட்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றைக் கேட்பவர்களும் சொல்பவர்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிச் சிந்திக்கின்றார்கள்.
சென்னை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரங்கில் நடைபெற்ற மீலாது விழாவில் முனீருல் மில்லத் பேராசிரியர் காதிர் முஹிய்யுத்தீன் அவர்கள் உரை நிகழ்த்திய போது ஒரு கருத்தைச் சொன்னார்கள்.
மீலாது நாளன்று தமிழக அரசு விடுமுறை அளித்திருக்கின்றது. மத்திய அரசும் விடுமுறை அளித்திருக்கின்றது. பள்ளிகளுக்கும் அலுவலங்களுக்கும் வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் சிறுவர்கள் தங்கள் வீட்டில் அம்மா! இன்று எனக்குப் பள்ளி விடுமுறை ஏனென்றால் இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்களாம் என்று சொல்வார்கள். அதேபோல ஆசிரியர்களும் அலுவலர்களும் தங்களுக்கு மத்தியில் அன்றைய தினத்தில் இன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த நாள்.
எனவே, எங்களுக்கு விடுமுறை என்பதாகப் பேசிக் கொள்வார்கள். எனவே, மீலாது அன்று விடுமுறை அளிப்பதால் நமது நாட்டிலுள்ள அனைத்துச் சாராரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னும் பெயரை உச்சரிப்பதற்கும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதாகக் கூறினார். எனவே, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாண்புகளை அறியாதவர்களும் ஞானம் அறியாதவர்களும் தாம் மீலாது விழாக்கள் நடத்துவதை விரும்ப மாட்டார்கள்.
நானும் கலீஃபா ஆலிம் புலவரும் கலீஃபா ஹபீபுல்லாஹ் அவர்களும் கலீஃபா சிராஜுத்தீன் அவர்களும் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தோம். அங்கு ஸுபுஹான மவ்லிதை அழகாக ஓதி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகளை பைத்துக்களாகப் பாடிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கேட்பதற்கு இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்த போது ஒரு நாள் மூதாட்டி ஒருவர் தமது பெட்டி, படுக்கை, சாமான்களை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே ஒட்டகம் நிற்கக்கூடிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தச் சீமாட்டியிடம் தங்களின் உடமைகளை நானே சுமந்து வருகிறேன் என விரும்பிக் கேட்டு அவற்றை வாங்கிச் செல்லும்போது, அம்மையார் அவர்களே! தாங்கள் இந்நகரை விட்டு இடம்பெயர்ந்து செல்வது ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த அம்மையார், முஹம்மது என்பவரின் உபதேசங்களைக் கேட்டு மக்களெல்லாம் இஸ்லாத்தில் அணி அணியாக இணைந்து கொண்டிருக்கிறார்கள். முஹம்மது அவர்களின் உபதேசங்கள் எனது காதில் விழுந்துவிட்டால் நானும் மனம் மாறி மதம் மாறிச் சென்று விடுவேனா என்று அஞ்சுகிறேன்.
எனவேதான் நகரை விட்டுச் செல்கின்றேன் என்றார் அந்த மூதாட்டி. அத்துடன் அவர்களுக்கு கூலியைக் கொடுக்க முன்வந்தபோது, நான் பொற் காசுகளுக்காக வேலை செய்யவில்லை. நன்மையை நாடித்தான் தங்களுக்கு ஊழியஞ் செய்தேன் என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.. இதனைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த அம்மூதாட்டி, ஒரு சிறுவேலைக்கு பன்மடங்கு கூலியைக் கேட்கும் வேலையாட்களுக்கு மத்தியில் ஒரு சல்லிக் காசுகூட ஊதியமாகப் பெற விரும்பாமல் இருக்கின்றீர்களே, மகனே! தாங்கள் யார் ?என்று கேட்டார்.
இவ்வளவு நேரம் யாரைப்பற்றி ஏசிப் பேசி வந்தீர்களோ அந்த முஹம்மது நான்தான் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதிர்ச்சி அடைந்த அம்மூதாட்டி இவ்வளவு சிறப்புமிக்க தங்களையா நான் ஏசிப் பேசினேன். இத்தகு மாட்சியாளரை இனி நான் எங்கு காண்பேன் என உருக்கத்துடன் கூறி, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்னக யா ரசூலல்லாஹ் என உரைத்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின் தொடர்ந்து ஊர்திரும்பினார் அம்மூதாட்டி.
இப்படிப்பட்ட உன்னதமான செய்திகளை மக்களுக்கு மத்தியில் எடுத்துக் கூறி, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாண்புகளை நினைவுபடுத்துவதற்காகத் தான் மீலாது விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. திருமறையில் அருளப்படும் ஒவ்வொரு வசனமும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவத்தைத் தான் எடுத்து இயம்புகின்றன. அந்தக் காலத்தில் கஃபாவில் சிறந்த கவிஞர்கள் தங்களின் கவிதைகளை எழுதித் தொங்க விடுவர். சிறந்த கவிதைகளுக்கு பரிசுகளும் வெகுவாகக் கிடைக்கும்.
இன்னா அஃதய்னாகல் கவ்ஸர். ஃபஸல்லி லிரப்பிக வன்ஹர். இன்ன ஷானிஅக ஹுவல் அப்தர் என்னும் திருவசனம் இறங்கியபோது ஸஹாபி ஒருவர் இவ்வசனத்தைக் கஃபாவில் தொங்கவிட்டார்கள். காலையில் கூடிய கவிஞர்கள் பெரியோர்களும், இவ்வசனங்களைப் பார்த்து -மாஹாதா கலாமுல் பர்- இது மனிதனின் சொல்லாக இருக்க முடியாது என வியந்து கூறினர். இதற்கு இணையான கவிகள் புனையப்பட முடியாததால் இவ் வசனங்களே கஃபாவை அலங்கரித்தன. இப்படிப்பட்ட திருமறையை வழங்கிய மாநபியவர்களைப் போற்றாமல் வேறு எவரைத் தான் போற்றுவது?
மற்றொரு முக்கியச் செய்தியைச் சொல்லி முடிக்கின்றேன். ஹள்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவாக வீற்றிருந்த போது ஒரு நாட்டிற்கு அபூமூஸா என்பவரை ஆளுநராக நியமனம் செய்திருந்தார்கள். ஒருமுறை அவர் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தனது நாட்டின் நிலவரங்களை விரிவாக எழுதி கடைசியில் அலா ஹாதா அபூமூஸா எனக் கையயாப்பம் இட்டிருந்தார். நாட்டு நிலவரச் செய்திகளை அவதானித்துக் கொண்ட கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அலா ஹாதா அபூமூஸா என்று எழுதியவர் தங்களின் ஆளுநர் தானா என்பதனை விசாரித்து அறிந்து கொண்டு அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள்.
அறபு இலக்கண முறைப்படி அலாஹாதா அபீ மூஸா என்று தான் எழுதப்பட்ட வேண்டும். இந்த அடிப்படை இலக்கணத்தைக் கூட அறியாத ஒருவர் தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டில் ஆளுநராக இருப்பதற்குக் கூடத் தகுதி இல்லை என்பதாக கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கருதினார்கள். இதை ஏன் நான் குறிப்படுகின்றேன் என்றால் அறபு மொழியில் தேர்ந்த அறிவும் ஞானமும் நுட்பமும் தெரிந்தவர்களால் தாம் அறபுமொழி அகராதி அளிக்க முடியும். ஷெய்குல் மில்லத் அல்லாமா இமாம் வாப்பா நாயகமவர்கள் அறபு மொழியில் பேரறிஞராக இருப்பதால் தான் தங்கள் தந்தை ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானா ரலில்லாஹு அன்ஹு நாயகமவர்களின் அருள் பொக்கிஷமான அறபு - அறபுத்தமிழ் அகராதியை அழகுத் தமிழில் யாத்தளித்து இப்புனித விழாவில் வெளியீடு செய்ய இருக்கிறார்கள். எனது ஆசிரியப் பெருந்தகை அப்துல்ஹமீது ஹள்ரத் அவர்கள் ஒருமுறை கூறினார்கள். “மன் லாலஹு காமூஸ் ஃபஹுவ ஜாமூஸ்” யார் ஒருவரிடம் அகராதி இல்லையோ அவர் எருமைமாடு போலாவார்.
சங்கைமிகு வாப்பா நாயகமவர்களால் உருவாக்கப்பட்டுள்ள காமூஸ் இஸ்லாமிய இலக்கிய உலகிற்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் என்பதனை பெருமிதத்துடன் கூறி வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் பங்கேற்கச் செய்த வல்லோன் அல்லாஹ்வைப் போற்றி என் உரையை நிறைவு செய்கின்றேன்.
உரைத் தொகுப்பு : ஆஷிகுல் கலீல் B.com திருச்சி