வசப்படுத்தும் கலை
நாம் அனைவரும் அடிப்படையில் ஆணவமும், சுயநலமும் மிக்கவர்கள் தாம். காஷ்மீரில் தினந்தோறும் செத்துக் கொண்டிருப்பவர்களின் வலியைவிட, நம் சுண்டுவிரலில் அடிபட்ட வலி தான் நமக்கு பெரிதாகத் தோன்றும். எனவே ஒருவரை நம்வழிக்குக் கொண்டுவர, முதலில் அவருடைய உடனடித் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு உரிய முக்கியவத்துவம் கொடுக்க வேண்டும். யாரையும் எவரும் எளிதில் மாற்றிவிட முடியாது. எந்த ஒரு மாற்றமோ, முடிவோ அவராகவே சொந்தமாக எடுக்கப்பட்டதுபோல் அமைய வேண்டும். செயலின் வெற்றியின் களிப்பை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும்.
பிறரால் கொடுக்கப்படும் எந்த ஒரு கருத்தும் அவரது சுயமதிப்பை பாதித்து விடக் கூடாது. அவரது உள்மனம் நம் கருத்தை எவ்வித சந்தேகத்திற்கிடமின்றி ஏற்குமாறு செய்ய வேண்டும். அதற்கு அவர் தரப்பு நியாயங்களை,பிரச்சினைகளைக் காதுகொடுத்து கவனமாக செவிமடுக்க வேண்டும். உடனே மறுத்துப் பேசுதல், எதிர்வாதம் புரிதல் போன்றவைகள் நிச்சயம் உதவாது. கேலி செய்தல்,கிண்டலடித்தல், பழித்துக் காட்டுதல்,போன்றசெயல்கள் அவரைச் சீண்டி விட்டு விடும். உடனே அவர் நம்மை எதிரியாக நினைத்து மூர்க்கத்தனமாக எதிர்க்கத் தொடங்கிவிடுவார்.
பிரச்சனைகள் வேறு, ஆட்கள் வேறு என்று வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் தேவை. மூன்றாம் நபர் பார்வையில் பிரச்சனைகளை அலசும் திறன், சற்றேவிட்டுக் கொடுத்துப் போவது போன்றவைகள் நம் மீது அவர் கொள்ளும் நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன. மொத்தத்தில் நாம் அவருக்கு வழங்கும் ஆலோசனைகளால் அவருக்கு தனிப்பட்ட முறையில் வரும் லாபங்கள் யாவை? அவரது தற்போதைய நிலையில் காணப்படும் குறைபாடுகள் யாவை?அவைகளுக்கான நிவாரணங்கள் யாவை?
இவைகளை கட்டளையிடும் பாணியிலோ மிகவும் வலியுறுத்தும் வகையிலோ அழுத்திக் கூறாமல் பட்டும் படாமல் பொதுவாக ஆலோசனைகள் போன்று வழங்குவது நிச்சயம் பலன் கொடுக்கும். பிறகு அவரது மாறிய நடத்தையை விலகி நின்று கவனித்து அவ்வப்போது ஊக்கம் தரும் வகையில் உற்சாகம் ஊட்டி, அச்செயலின் வெற்றி அவரது சொந்த வெற்றி போல அவர் நினைக்கும்படிச் செய்தால் போதும் நாம் நினைத்தது அவர் மூலம் நிச்சயம் நடக்கும்.
தகவல் : A.M.N. ஸாதிக், B.B.A., திருச்சி.