மன்னிப்பின் மறுபெயர் மாநபியோ!
எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கிய காலகட்டத்தில் கஃபாவில் அவர்களை நுழையவிடாமல் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்தனர் மக்கத்துக் காபிர்கள் !
ஒருமுறை எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவிற்குள் நுழைய முற்பட்டபோது- உதுமான் இப்னு தல்ஹா இடையூறு செய்தார். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள், உதுமான் இப்னு தல்ஹாவிடம்.... என்றைக்காவது ஒரு நாள் கஃபாவின் திறவுகோல் என் கையிலிருக்கும். அப்போது நான் அதனை யாருக்கு விரும்புகிறேனோ அவரிடம் கொடுப்பேன் என சூளுரைத்தார்கள். உடனே உதுமான் இப்னு தல்ஹா, அன்றைய தினத்தில் குறைஷிகள் தாழ்த்தப்பட்டு நாசமடைவர் எனத் திமிராகப் பதிலளித்தார்.
உடனே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இல்லை - அந்த நாள் ஓர் இனிய நாள், குறைஷிகள் நாள் ஓர் இனிய நாள், குறைஷிகள் மேன்மைப்படுத்தப்படும் இனிய நாள் ! என்றார்கள்.
மக்கா வெற்றிக்குப்பின்-
கஃபாவின்அப்போதைய காவலராக இருந்த அதே உதுமான் இப்னு தல்ஹாவை அழைத்து வரும்படி ஹள்ரத் பிலால் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
உதுமான் வந்தார். கஃபாவின் திறவுகோலை அவரிடமிருந்து பெற்று கஃபாவிற்குள்ளே சென்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு வெளியே வந்தார்கள்.
ஞாலத்தின் திறவுகோலான - கஃபாவின் சாவியை ஞானத்தின் திறவுகோலான பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பெறப்போகும் அதிருஷ்டசாலி யார் ? என அறிய எல்லோரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர் !
கஃபாவிலிருந்து வெளிப்பட்ட ரசூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள். உதுமான் இப்னு தல்ஹா அவர்களை அழைத்து அவரிடமே கஃபாவின் திறவுகோலை வழங்கி.... இஃது எப்போதும் உம்மிடமும் உம்முடைய சந்ததிகளிடமும் இருந்து வரும் என்று அருளினார்கள். இவ்வினிய வார்த்தைகளைக் கேட்டபோது முன்பு பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த நாள்.....இனிய நாள் செய்தி நினைவுக்கு வந்தது உதுமான் அவர்களுக்கு. அப்புறம் என்ன ? வள்ளல் நபியின் திருக்கரங்களைப் பற்றி இஸ்லாத்தில் இணைந்தார்... உதுமான் தல்ஹா (ரலி) அவர்கள்!
வள்ளல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் வாக்குப்படி.... அன்று முதல் இன்று வரை... உதுமான் இப்னு தல்ஹா (ரலி) அவர்களின் வாரிசுகளிடமே கஃபாவின் திறவுகோல் இருந்து வருகிறது.