இஸ்லாம் போதிக்கும் நற்குணங்கள்
கிப்லா ஆசிரியர் N. அப்துஸ்ஸலாம் ஆலிம் வானொலியில் நிகழ்த்திய உரை
இஸ்லாத்தின் சிறப்பே நற்குணம் தான். வணக்க வழிபாடுகளை மட்டுமல்ல நற்பண்புகளைப் பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய குணநலன்களை இஸ்லாம் விரிவாக விவரிக்கிறது.
இன்னின்ன குணங்கள் இருந்தாலே அவன் முஸ்லிம் என்று நற்பண்புகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது இஸ்லாம்.
நற்பண்புகள்
தங்களுடைய வருகையின் நோக்கத்தைக் குறித்து நபிகள் நாயகம் குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறார்கள்; ‘நற்குணங்களைப் பரிபூரணம் செய்வதற்காகவே நான் அனுப்பப் பட்டுள்ளேன்’(மாலிக்)
ஒரு சமூகத்தில் ஏமாற்று, மோசடி, நம்பிக்கைத் துரோகம்,வஞ்சனை என்ற கெட்ட செயல்கள் குடி கொண்டிருந்தால் அந்த சமூகத்திற்கு இறைவனின்அருள் எவ்வாறு கிடைக்கும்..? அல்லது, ஒரே குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் வெறுப்புடனும் பொறாமையுடனும் நடந்து கொண்டால் அந்த குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் எவ்வாறு கிடைக்கும்...?ஆக, இங்கே நாம் புரிந்து கொள்வது
என்னவென்றால் ஆண்டவனின் அருளுக்கும் நற்குணங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதே.
இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளின் நோக்கமே நற்குணங்கள் தாம் என்பதை அருள்மறை குர்ஆனைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம்.
நோக்கங்களைச் சரியாக புரிந்து கொள்ளாவிடில் வணக்கங்கள் அனைத்தும் வெறும் உடற்பயிற்சிகளாகவே மாறிவிடும்.
தொழுகை
இஸ்லாம் கூறும் கட்டாயக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவைகளின் நோக்கங்களைப் பார்த்தாலே இதனைப் புரிந்து கொள்ளமுடியும். எடுத்துக் காட்டாக தொழுகையின் நோக்கத்தைக் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது :
‘திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது.’ (29:45)
எனவே, தீய செயல்களை விடாதவனுக்கு தொழுகை என்பது ஓர் உடற்பயிற்சியாக மட்டுமே மாறும்.
இன்று சிலரைப் பாருங்கள்.. தொழுது கொண்டே மோசடி, தொழுது கொண்டே ஏமாற்று, தொழுது கொண்டே மனைவியை அடித்தல்... போன்ற தீய செயல்களைச் செய்கின்றனர். அவர்களுக்கு ஏன் தொழுகையின் நோக்கம் தெரியவில்லை? கடைசியில் இது போன்ற மக்களுக்கு மிஞ்சியதெல்லாம் நெற்றியில் இருக்கும் தொழுகைக்கான ஒரு கறுப்பு அடையாளம் மட்டுமே.
ஜகாத்
ஜகாத் எனும் தர்மத்தின் நோக்கமும் நற்குணமே! இறைவன் கூறுகிறான் :
‘(நபியே) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்து கொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக’ . (9:103)
தூய்மையாக்குதல் என்றால் எதிலிருந்து.? கஞ்சத்தனத்திலிருந்து தூய்மை, ஏழைகள் மீது இரக்கமின்மையிலிருந்து தூய்மை, தர்மம் என்றாலே பணமாகத்தான் இருக்க வேண்டும என்ற சிந்தனையை முதலில்அடித்து நொறுக்கியது இஸ்லாம் மட்டுமே.
இஸ்லாம் கூறும் தர்மம் என்பது வெறும் காசு, பணம்மட்டுமல்ல, மாறாக, நற்குணங்களைக் கூட இஸ்லாம் தர்மம் என்றே அழைக்கின்றது.
நபிகள் நாயகம் கூறினார்கள் :
‘உனது சகோதரனைப் பார்த்து நீ சிரிக்கும் சிரிப்பு ஒரு தர்மம், நன்மையை ஏவி தீமையை தடுப்பது ஒரு தர்மம்.முகவரி தெரியாதவனுக்கு வழி காட்டிக் கொடுப்பது ஒரு தர்மம், தாகித்தவனுக்குத் தண்ணீர் கொடுப்பது ஒரு தர்மம். பாதையில் கிடக்கும் நோவினை தரும் பொருட்களை நீக்கித் தள்ளுவது ஒரு தர்மம். பார்வை அற்றவரை கருணையுடன் நீ பார்க்கும் பார்வை ஒரு தர்மம். உனது வாகனத்தில் பிறரை ஏற்றிச் செல்வது ஒரு தர்மம். தர்மத்திலேயே உயர்ந்த தர்மம் உனது மனைவிக்கு நீ ஊட்டி விடும் ஒரு கவளம் உணவு.’ (திர்மதி)
நபிகள் நாயகம் கூறிய இந்த வாக்கியத்தைப் படிக்கும் எவருக்கும் தர்மத்தைக் குறித்த புரிதல் விசாலமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்னொரு புறம்பார்த்தால் இவை அனைத்தும் நற்குணங்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
நோன்பு
நோன்பும் அவ்வாறு தான். நோன்பைக் குறித்து நபிகள் நாயகம் கூறும்போது :
‘நோன்பு வைத்த நிலையிலும் கெட்ட பேச்சு, கெட்ட செயல்ஆகியவற்றை எவர் விடவில்லையோ, அவர் தாகித்திருக்க வேண்டும்.பசித்திருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இறைவனுக்கு இல்லை. ’
மேலும் அண்ணலார் கூறினார்கள் :
‘உங்களிலிருந்து எவராவது நோன்பு வைத்தால் அவர் கெட்ட வார்த்தை பேச வேண்டாம், பிறரை ஏச வேண்டாம்.’ (முஸ்லிம், இப்னு மாஜா) இதுவும் நற்குணங்களையே வலியுறுத்துகின்றது.
ஹஜ்
ஹஜ் எனும் புனிதக் கடமையும் இவ்வாறே !
இறைவன் கூறுகிறான் : ‘ஹஜ்ஜின் போது இச்சைகளைத் தூண்டக் கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை, சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது’. (2:197)
ஹஜ்ஜின் போதுஉயர்ந்த சப்தத்தில் பேசக்கூடாது. எவரையும் ஏசக் கூடாது, சண்டை கூடவே கூடாது. வேறுபட்ட நிறங்கள்,வேறுபட்ட மொழிகள், பல்வேறு மனிதர்கள் என்று 35லட்சத்திற்கு அதிகமாக ஓரிடத்தில் ஒன்று கூடும் மக்களுக்கு ஒரு சேர போதிக்கப்படும் போதனையை சற்று கவனித்துப் பாருங்கள். அத்தனையும் நற்குணங்களே.
இந்த அளவுக்கு இஸ்லாம் நற்குணங்களை வலியுறுத்தி இருக்க; சிலரிடம் ஏன் இந்த நற்குணங்கள் இல்லாமல் போயின ?
ஒற்றை வரியில் பதில் சொல்வதென்றால்.. வாழ்வையும் வணக்கத்தையும் தனித்தனியே பிரித்தது தானே தவிர, வேறொன்றுமில்லை.
வாழ்வுக்கும் வணக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற மனோபாவம் எப்போது தோன்றியதோ அப்போதே நற்குணங்களின் வீழ்ச்சியும் தோன்றிவிட்டது.
கிண்டலுக்காக ஒரு பழமொழி சொல்வார்கள். தொழுகிறேன்... தொழுகிறேன்.... அல்லாஹ்வுக்காக. வைக்கோல் திருடுகிறேன் மாட்டுக்காக. அதாவது தொழுகை என்பது இறைவனுக்காக மட்டுமே. ஆனால், தொழுது விட்டு வரும் வழியில் திருடப்படும்
வைக்கோல் மாட்டுக்காக மட்டுமே. அதில் எனது தவறு எதுவும் இல்லை எனும் சிந்தனை, இந்த மனோபாவம் தான் இன்று அனேக நபர்களிடம் குடிகொண்டுள்ளது.
பள்ளிவாசலில் இறைவனுக்கு முன்னால் கை கட்டி நிற்கும் ஒரு முஸ்லிம், பள்ளிவாசலை விட்டு வெளியே வந்துவிட்டால் கூடவே ஆண்டவனையும் அதே பள்ளி வாசலில் பூட்டி வைத்து விட்டு வெளியே வருகின்றான்.
பள்ளிவாசலில் தன்னைக் கவனித்துக் கொண்டிருந்த அதே அல்லாஹ் வெளியேயும் தன்னைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்ற எந்தச் சிந்தனையும் அவனுக்கு இருப்பதில்லை.
நற்குணங்களின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். இன்றைய முஸ்லிம்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள்.
ஒன்று : நல்ல வணக்கசாலிகளாக இருக்கின்றார்கள். ஆனால், நற்குணங்களில் பலவீனம்.
இரண்டு : நல்ல நற்குணங்கள் இருக்கின்றன. ஆனால் வணக்க வழிபாடுகளில் பலவீனம்.
தொழுவான், வணக்க வழிபாடுகளில் இவனை அடித்துக் கொள்ள ஆளே இருக்காது... ஆனால், உண்மை நேர்மை போன்றவை இருக்காது. நேரம் தவறாமை, வாக்குச் சுத்தம், நீதி, நியாயம் எல்லாம் இருக்கும்... ஆனால், தொழுகைக்காக பள்ளி வாசலின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான். இரண்டுமே தவறு தான்.
‘நற்குணங்களில் பலவீனமாக இருப்பவன் இறை நம்பிக்கையிலும் (ஈமான்) பலவீனமானவனாகவே இருப்பான்‘ என்று இஸ்லாம் கூறுகின்றது.
நபிகள் நாயம் கூறினார்கள் :
‘இறைவன் மீதுஆணை ! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை ! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல !’.
மூன்று தடவை இவ்வாறு இறைவனின் தூதர் கூறவும் நபித்தோழர்கள் கேட்டனர் ; அல்லாஹ்வின் தூதரே ! யாரைக் குறித்து இவ்வாறு கூறுகின்றீர்கள் ? அதற்கு அண்ணலார் கூறினார்: ‘எவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்‘. (முஸ்லிம், அஹ்மத்)
திருமணங்களின் போதும், விழாக்காலங்களிலும் காது ஜவ்வுகிழியும் அளவுக்கு ஒலி பெருக்கிகளை சப்தமாக வைத்து அண்டை வீட்டாருககு தொந்தரவுதரும் அனைவருக்கும் இந்த நபிமொழி அர்ப்பணமாகட்டும்.
தொழுகைக்காக பள்ளி வாசலுக்கு போகின்றவர்கள், போகும்அவசரத்தில் வாகனங்களை சாலைகளில் கண்ட இடத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.அவர்களுக்குத் தெரிவ தில்லை.தான் நிறுத்திய வாகனத்தால் எத்தனைபேருக்கு இடையூறு என்று. அவர்கள் இந்த நபிமொழியை மீண்டும் படிக்கட்டும் ஏன் தெரியுமா...?. நற்குணங்கள் இல்லாமல் இறைவனை மட்டும் வணங்கினால் போதும் என்ற மனோநிலை இவர்களிடம் இருப்பதால் தான்.
மேலும், நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘வெட்கமும் இறை நம்பிக்கையும் இரண்டு கொம்புகள். ஒன்று போனால் மற்றொன்றும் போய்விடும்.’ (தபரானி, ஹாகிம்)
முழுமையாக இறைநம்பிக்கை கொண்ட ஒருவர் ஒரு நாளும் வெட்கம் கெட்ட செயலை செய்ய மாட்டார் என்பதையேஅண்ணல் நபி இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள்.
இது மட்டுமல்ல, இறை மறையில் எங்கெல்லாம் வணக்க வழிபாடுகளைக் குறித்துக் கூறப்படுகின்றதோ அங்கெல்லாம் நற்குணங்களையும் சேர்த்தே இறைவன் கூறுகின்றான்.