தரீகத்துல் ஹக்கிய்யத்துல்காதிரிய்யாவின் கண்ணியமிகு தொடர்....
கலீபா பெருந்தகைகள்
ஒரு சிறப்புப் பார்வை!
மெளலவி என்.எஸ்.என். ஆலிம்.பி.காம்.திருச்சி
கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் குடும்ப நிலவரங்களை கொஞ்சம் அவதானிப்போமா?
கலீபா வலிய்யுல் அஹ்ஸனிற்கு உடன் பிறந்தவர் ஒரு சகோதரி மட்டுமே. அவரைத்தான் நைனார் முஹம்மது ஆலிம் அவர்கள் மணந்தார்கள். அன்னவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். 1 ஆண் 1 பெண். சிறிது காலத்தில் சகோதரியவர்கள் மறைந்து போகவே மனமுடைந்த கலீபா அவர்கள் தனது மூத்த மகளை (வயது சுமார் 15 ஆன நிலையில்) நைனார் முஹம்மது ஆலிம் அவர்களுக்கு மணமுடித்துத் தந்தார்கள். அவர் பெயர் ரஹ்மதுன்னிஸா. அவருக்கு 3 ஆண்கள் 2 பெண்கள். ஆம்! அந்த ஆண்களில் மூத்தவர் தான் அடியேன். மற்ற இரண்டு சகோதரர்கள் முறையே மெளலவி ஸயீது முஹம்மது ஆலிம் மற்றும் மெளலவி முஹம்மது ரபீவுத்தீன் ஆலிம்.
கலீபா அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளில் மூத்தவர் மெளலவி H அஹ்மது ஆலிம். இளையவர் மெளலவி H. அப்துல் கறீம் ஆலிம் இரண்டு பெண் பிள்ளைகளில் மூத்தவர் எங்கள் தாயார் (ரஹ்மத்துன்னிஸா) இளையவர் உம்முஸல்மா. இவரை மெளலவி ஷாஹுல் ஹமீது மணந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண்மக்கள். மூத்தவர் பக்ருத்தீன்; இளையவர் முஹம்மது அனஸ். கலீபா அவர்களின் குடும்ப அங்கத்தினர்களை மீண்டும் நோட்டமிட்டுப் பாருங்கள்.
1. இரண்டு மருமகன்களும் ஆலிம்கள்.
2. இரண்டு மகன்களும் ஆலிம்கள்.
3. மூன்று பேரர்களும் ஆலிம்கள்.
ஆக ஒரு சிறு ஆலிம்கள் சமுதாயத்தை உருவாக்கிடும் பாக்கியத்தை கலீபா பெற்றார்கள். (அல்ஹம்துலில்லாஹ்) கலீபா அவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் மூத்தமகன் மெளலவி H. பஷீர் அஹ்மது. இவர் நல்ல பேச்சாளர். தரீகா சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த ஆர்வமுடையவர். சுன்னத் வல்ஜமாஅத் கொள்கைகளை நன்கு உருக்கமாகப் பேசக்கூடியவர்.
இவரை சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் முரீதாக்கி விட வேண்டும் என கலீபா அவர்கள் பெரிய போராட்டமே நடத்தினார்கள். பெரும் முயற்சி செய்தார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ அது இதுநாள் வரை கானல் நீராகவே ஆயிற்று. எனினும் மூத்தமகன் வேறு ஒரு தரீகாவில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதுதான் ஆறுதலான விஷயம். இவரைப் பற்றி ஒரேயொரு செய்தியை பதிவு செய்தே ஆக வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்னர், வஹ்ததுல் வுஜுதைப் பற்றி பிரச்சனை எழுந்தது! ஊரில் பெரிய சலசலப்பு. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என ஜமாஅத்தார்கள் கோரினார்கள். நமது தரப்பில் சில ஆலிம்களும் ஜமாஅத் தரப்பில் சில ஆலிம்களும் உட்கார்ந்து பேசுவது என முடிவாயிற்று.அதன் முன்னோட்டமாக ஜமாஅத் நிருவாகிகள் நமது தரப்பு ஆலிம்களை அழைத்தனர்.
அப்போது நமது தரப்பிலிருந்து கலீபா வலிய்யுல் அஹ்ஸன், கலீபாவின் மூத்தமகன் மெளலவி H. பஷீர் அஹ்மது ஆலிம் மிஸ்பாஹி மற்றும் நான், ஜமாஅத் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசச் சென்றோம். (எங்களுடன் தியாகி முஹம்மது இராவுத்தர் அவர்களின் தந்தையும் இருந்தார்) நமது தரப்பில் மெளலவி பஷீர் அஹ்மது ஆலிம் அவர்கள் வாதத்தைத் தொடங்கி, வஹ்ததுல் வுஜூது என்பது இஸ்லாத்தின் உச்சகட்ட உண்மையான கொள்கை. இஸ்லாத்தின் அடிப்படையும் அதுதான்.அதனைத் திருமறையில் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது? ஹதீஸில் எவ்வாறு சொல்லப் பட்டிருகின்றது? என்பதனை ஆலிம்களிடம் கூறுகிறோம். நிருவாகிகள் பார்வையாளர்களாக இருங்கள் என்றார். ஆனால் நிருவாகிகள், எங்களுக்குத் தெரியாத இஸ்லாமா ? ஆலிம்கள் அரபியில் படித்திருப்பீர்கள். நாங்கள் தமிழில் படித்திருக்கின்றோம். எனவே, எங்களிடமே கூறுங்கள் எனப்பிடிவாதமாகக் கூறினார்கள். எவ்வளவோ சொல்லியும் நிருவாகிகள் நமது கூற்றை ஏற்கவில்லை!
வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, மெளலவி பஷீர் அஹ்மது ஆலிம் அவர்கள், உங்களிடமே விளக்கம் கூறுகிறோம். ஆனால் இங்குள்ள நிருவாகிகள் அனைவரும் ஐந்தாம் கலிமாவைக் கூறுங்கள் பார்க்கலாம் எனக் கூறவே, நிருவாகிகள் அதிர்ச்சியடைந்து, எங்களைப் பார்த்து எப்படி கலிமா தெரியுமா? எனக் கேட்கலாம் என கர்ஜித்தார்களேயன்றி யாரும் கலிமாவைக் கூறவில்லை. அவர்களுக்கு ஐந்தாம் கலிமா தெரியவில்லை. எனவே ஐந்தாம் கலிமா தெரியாதவர்களுக்கு வஹ்ததுல் வுஜூது பற்றிக் கூறினால் விளங்காது என அடித்துக் கூறினார். H. பஷீர் அஹ்மது ஆலிம்.
சங்கைமிகு வாப்பா நாயகமவர்களின் முரீதாக வில்லையென்றாலும் ஒரு நெருக்கடியில் மகன் செய்தஅறிவுப்பூர்வமான வாதத்தை கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் தங்கள் இறுதிக்காலம் வரையில் நன்றியுடன் நினைவு கூர்ந்து வந்தார்கள்.
கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொருவர்?
(இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்)