ஞானத் துளிகள்
தொகுத்தவர்: -
திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை
- இவ்வுலகம் நித்தியமானது அல்ல என்பது எல்லாருடைய அனுபவம் ஆகிறது. உற்றார் உறவினர் என்பார் எத்தனை யெத்தனையோ பேர் இவ்வுலகுக்குள் வந்தாய்விட்டது. வந்த பிறகு வெளியேகியாகி விட்டது. இங்கு யாருக்கும் எதுவும் சொந்தமாக நிலைத்திருப்பதில்லை.
- உலகம் அநித்தியமானதா ? ஆம்! இறைவனுக்குப் புறம்பாக வைத்து இவ்வுலகைப் பற்றிப் பிடிக்க நீ முயன்றால் அது அநித்தியமானதே.
- பனிக்காலத்தில் ரோஜாச் செடியின் வேரில் பனி படியும்படி தோட்டக்காரன் மண்ணைக் கிளறி வைக்கிறான். பனிபடுவதால் ரோஜாச்செடி செழித்து வளர்ந்து நல்ல புஷ்பங்களைத் தருகிறது. அதே விதத்தில் ஆத்ம சாதகன் ஒருவனுக்குச் சில வேளைகளில் வருகின்ற நோய் அவனுடைய சரீரத்தை அருள் ஒளிக்கு மேலும் மேலும் தகுதியுடையதாக மாற்றியமைக்கிறது.
- நல்ல பிராமணன் ஒருவனுக்குச் சுயநலப்பற்று சிறிதேனும் இல்லாதிருக்கு மாகில் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதுபவர்களிடத்திருந்தும் அவன் சமைத்த உணவை ஏற்றுக் கொள்ளலாம். அதில் தோஷ்மில்லை. அத்தகைய உணவை அவன் தேடிப் போவதில்லை. அது தானாக வந்து சேருகிறது. எல்லாம் ஈசன் மயம் என்றால் பாப புண்ணியம் இல்லையென ஆகின்றதல்லவா?
- மனிதனிடத்து அகங்காரம் இருக்கிறபொழுது வேற்றுமை புத்தியும் வருகிறது. வேற்றுமை புத்தி இருக்கிற வரையில் பாப புண்ணியமும் உண்டு.அகங்காரம் அற்ற விடத்து வேற்றுமையில்லை. பாப புண்ணியமில்லை. எல்லாம் ஈசன் மயம்.
- புற ஆசாரத்தில் அளவு கடந்த பித்துக்கொள்ள வேண்டாம். தாகம் கொண்டிருந்த சாது ஒருவர், ஒருவன் தோல் பையில் தண்ணீர் கொண்டுவருவதைப் பார்த்தார். அந்நீரை அருந்த விரும்பிய சாது ‘அது சுத்தமான தோல் பையா?’ என்று கேட்டார். நீரைச் சுமந்து வந்தவன் ‘சுவாமி, நான் வைத்திருக்கும் தோல் பை சுத்தமானதே. ஆனால் நீங்கள் தாங்கியுள்ள தோல் பைக்குள் எல்லாவித ஆபாசங்களும் அடைபட்டுக் கிடக்கின்றனவே ! என்றான்.
- தட்டான் ஒருவனுக்குத் தற்செயலாய் நாவானது மேல்நோக்கி மடிந்து நாசித் துவாரங்களை அடைத்துவிட்டது. அதனால் அவனுக்கு ஜடசமாதி வாய்த்தது. பல நாட்கள் அந்நிலையில் இருந்தான். மக்கள் அவனை மகாயோகி என்று கருதிக் கூட்டங்கூடி வழுத்தினர். பல நாட்களுக்குப் பிறகு நாசி தற்செயலாய் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது. பொன் வேலைக்காரனுக்குப் பழைய ஞாபகங்களெல்லாம் உள்ளபடி வந்துவிட்டன. தட்டார வேலை செய்யவும் தொடங்கினான்.
- மாமி ஒருத்தி தனது நாட்டுப் பெண்களுக்குச் சமைப்பதற்கு அரிசியை நாள்தோறும் அளந்து கொடுப்பது வழக்கம். ஒரு நாள் ஆழாக்கு உடைந்து போய்விட்டது. ‘மாமியார் இனி எதைக் கொண்டு அளப்பார் பார்க்கலாம்?’ என்று மருமக்கள் மகிழ்வுற்றிருந்தனர். ‘சிறுமிகாள், ஆழாக்கு உடைந்து போனதை முன்னிட்டு நீங்கள் மகிழ்வுறுகிறீர்கள். ஆனால் நான் கணக்காக கையைக் கொண்டே அளந்து தர முடியும்’ என்றாள். அதே விதத்தில் யார் யாருக்கு எந்தெந்த வேளையில் எது அவசியமோ அதை இறைவன் சரியாக அளந்து கொடுக்கிறான்.
- சாதனத்தில் ஆரம்பதசையில் இருப்பவனுக்கு நலம் கேடு ஆகியவைகளைப் பற்றிய பாகுபாடு இருந்தே ஆகவேண்டும். இல்லையேல் அவன் ஒருவேளை நெறி பிறழ்ந்து போய்விடலாம்..
- ஆத்ம சாதகன் ஒருவன் மரணத்தைத் திரும்பத் திரும்ப நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். மரணத்திற்குப் பிறகு ஒருவனுக்கு உலகில் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை. கிராமப்பக்கங்களினின்று வெவ்வேறு அலுவல்களை முன்னிட்டு மக்கள் பட்டணங்களுக்கு வருகிறார்கள். அதே விதத்தில் நமது கிருத்தியங்கள் சிலவற்றைச் செய்து முடிக்க நாம் இவ்வுலகினுள் வந்துள்ளோம். வந்த காரியம் முடிந்த பிறகு யாரும் இவ்வுலகில் தங்கியிருப்பதில்லை.
- மன இயல்புக்கும் உடல் அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நல்ல மனமுடையவர்க்கே நல்ல உடலமைப்பு வாய்க்கிறது.
- உலகப் பற்றில் உறைந்து கிடப்பவன் ஒருவனுக்கு உய்வு அடைதல் அரிதிலும் அரிதாம்.
- ஒவ்வொருவனும் தன் கடிகாரமே சரியாகக் காலம் காட்டுகிறது என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால் ஒவ்வொரு கடிகாரத்திலும் சிறிதளவாவது பிழை இருக்கிறது. அதே விதத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் அனுஷ்டிக்கிறதே மேலானது என எண்ணிக்கொள்கிறான். உண்மையில் ஒவ்வொரு அனுஷ்டானத்திலும் சிறிதளவாவது குறைபாடு இருக்கத்தான் செய்கிறது . ஆனால் இந்தக் குறைபாட்டால் சாதனத்துக்கு இடைஞ்சல் ஒன்றும் வந்து விடாது.வேறொரு சரியான கடிகாரத்தோடு சீர்தூக்கித்தன் கடிகாரத்தைத் திருத்தியமைத்துக் கொள்ளுதற்கு ஒருவனுக்கு சந்தர்ப்பம் வாய்க்கிறது. அதே விதத்தில் சான்றோர் கூட்டுறவால் சாதகன் ஒருவன் தன்னிடத்துள்ள குறைபாட்டைத் திருத்தி அமைத்துக் கொள்ளலாம்.
- பொய்யையும்அநீதியையும் காணுமிடத்து அவைகளை எதிர்த்துப் போராட வேண்டும். ஒழுக்கமில்லாத மாது ஒருத்தி சன்மார்க்கத்தில் செல்பவனைக் கெடுக்கப் பார்த்தால் அவன், ‘பேயே, உன்னைத்துண்டு துண்டாக வெட்டித் தள்ளி விடுவேன்’ என்று வீராவேசத்துடன் கூறி அவளை விரட்டவேண்டும்.
- ஒருவன் துறவறம் பூண எத்தனித்துக் கொண்டிருந்தான். அதை அறிய வந்த அவன் மனைவி பகரலானாள்; “தாங்கள் துறவியாய்ப் போய்ப் புதியதாய் என்ன பெறப் போகின்றீர்கள்? பிக்ஷையின் பொருட்டு எட்டு,பத்து வீடுகளின் முன் போய் நின்றாக வேண்டும். இங்கு ஒரே இடத்தில் உங்களுக்கு வேண்டிய உணவு அகப்படுகிறது.”
- யோகிகளுள் வியக்த யோகி, குப்த யோகி என இருதரத்தார் உளர். தன்யோக நிலையை உலகுக்குக் காட்டிக் கொள்ளாது இருப்பவன் குப்த யோகி. குடும்பஸ்தன் ஒருவன் குப்த யோகியாக முயல வேண்டும்.
- மனதில் ஒரு சிறு பகுதி தேகாபிமானம் உடைத்திருக்கிறது. அப்படியில்லையேல் தேகம் நெடுநாளைக்கு நிலைத்து இருக்காது. சத்சங்கத்திலும் மனது சிறிது ஆசை வைத்திருக்கிறது. அத்தகைய ஆசையில் தோஷம் ஒன்றும் இல்லை. முள் நிறைந்துள்ள இடத்தில் தயங்காது நடக்கலாம். சாதனங்கள் புரிந்து அருளுக்குப் பாத்திரமாயிருக்கிறவன் உலகில் எதற்கும் அஞ்சவேண்டிது இல்லை.
- சாஸ்திரங்களைக் கற்பதைவிட அவைகளை சான்றோர் விளக்கக் கேட்பது மேல். அதிலும் மேலானது அவ்வுண்மைகளை ஓர்தல்.
- ஜயப்பூரில் கோவிந்தனுடைய ஆலயத்தில் அர்ச்சகர்களாக அமர்ந்திருந்தவர்கள் முதலில் பிரம்மசாரிகளாக இருந்தார்கள். ராஜா அவர்களைத் தம்மிடம் வரும்படி சொல்லியனுப்பிய பொழுது அவர்கள் அங்குச் செல்ல மறுத்து விட்டனர். ராஜா தங்களிடம் வரட்டும் என்று சொல்லியனுப்பினார்கள்.
பின்பு ராஜா மந்திரிகளோடு ஆலோசனை செய்து அந்த பிரம்மசாரி அர்ச்சகர்களுக்கெல்லாம் விவாகம் செய்து வைத்துவிட்டார். அதன் பிறகு அவர்கள் தாமாகவே ராஜாவிடம் இதை முன்னிட்டு, அதை முன்னிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். போகும் பொழுதெல்லாம் பிரசாதத்தைக் கையில் எடுத்துச் சென்று அரசனுக்கு வழங்கினார்கள். குடும்பிகள் ஆன பிறகு பிள்ளைகளைப் பெற்றெடுத்தான பிறகு அவர்களின் தேவைகள் அதிகரித்தன. சுதந்தர உணர்வும் அவர்களை விட்டுப் போய்விட்டது.