இஸ்லாத்தில் ஆன்மிக நெறி
காயல்
ஆலிமா பேரவை
இறைவணக்கத்திற்குப் பள்ளிவாயில் பழமைக்குரிய சிறப்பினைப்பெற்றது போலவே, திருச்சி மாநகரில் தான் முதன் முதலாக (இந்தியாவிலேயே முதல் ஸுஃபி ஞானி நத்தஹர் வலி தங்கியிருந்து இஸ்லாத்தை வளர்த்தார்.) இவருடைய காலம் (கி.பி.969 முதல் 1039) வரையாகும். மைசூர் பல்கலைக்கழகப் பேராசிரியை ஹபீபா பேகம் ‘தக்காணத்தில் ஸுஃபிகள்’ எனும் ஆய்வுக்கட்டுரையில் நத்தஹர் வலி அவர்களின் அரும்பணி குறித்துச் சிறப்புறக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களின் காலத்திற்குப்பின் தான் (காஜா முயீனுத்தீன் சிஷ்தி (1143-1198) ஹிஜ்ரி 530-586இல் அஜ்மீரில் தங்கி இஸ்லாமியப்பணி செய்தார்கள்.)
ஸுஃபிகளில் மூன்று வகையினர் உள்ளனர். தம்மளவில் சதா தவம் புரிந்து இறைவனுக்குரியோராகி நெருங்கியவர்கள் முதல் வகை. தாம் பெற்ற அனுபவத்தைத் தம் சீடர்களுக்கு உபதேசித்து “ஷெய்கு” எனத் திகழ்ந்தவர்கள் இரண்டாவது வகை. முயன்று பெற்ற அனுபவத்தை “யாம்பெற்ற பேறு பெறுக இவ்வையகம்” எனப் பாட்டாலும் உரையாலும் பரப்பியவர்கள் மூன்றாவது வகை. தமிழகத்தில் வாழ்ந்த சூஃபிகளில் பலர் மூன்றாவது வகையினராய் அவர்களின் இறையனுபவங்களை எழிலான பாடல்களாக உவந்து தந்துள்ளனர்.
சூஃபிகளின் மெய்ஞ்ஞான இலக்கியங்கள்
‘ஒரு மதத்தின் உண்மையான கோட்பாட்டை உணரமாட்டாத ஒருவன் வெறும் தத்துவ ஞானம் மட்டும் பேசுவதனால் அவன் பெரிய நன்மை ஒன்றும் அடையமாட்டான்’ என்கிறார் ரூஸோ. முஸ்லிம் புலவர்கள் காப்பியங்கள் முதற்கொண்டு சிற்றிலக்கியங்கள் வரை படைத்துள்ளனர். இஸ்லாமிய மார்க்க ஞானம் பெற்றவர்களாக விளங்கினர். இஸ்லாமிய இலக்கியங்களை இஸ்லாமிய ஞானம் அறியாதவன் படைக்க இயலாது. நினைத்தவர்களெல்லாம் எழுதுகோலைத் தொடவும் முடியாது. இதனைவிட உயர்ந்தநிலை இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்களைப் படைப்பதாகும். இஸ்லாமியத் தத்துவத்தில் கரைந்து போனவரால் மட்டுமே மெய்ஞ்ஞான இலக்கியங்களைப் படைக்க இயலும் தன்னை அவனில் உருகச் செய்து, அவனில் காணாமல் போன உள்ளத்தால் மட்டுமே இஸ்லாமிய மெய்ஞ்ஞானங்களை உணரவும், எழுதவும் இயலும்.
தமிழகத்தில் ஞான இலக்கியங்கள் சைவத்திலும், வைணவத்திலும் பல்கியுள்ளன.
மெய்ஞ்ஞான உணர்வு பூத்துநின்ற இம்மண்ணில் இஸ்லாமியப் புலவர்களாகவும் சூஃபிகளாகவும் வாழ்ந்தவர்கள் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத்தை எளிதாகவும் சுயமாகவும் எழுத்துவடிவில் விளக்கினர். மண்ணின் மைந்தர்களாகவும், மகத்துவ மிக்க ஓரிறைக் கொள்கைக்குரியோர்களாகவும் வாழ்ந்த சூஃபிகள் இரண்டையும் தனித்துவம் கெடாது படைத்துள்ளனர்.
தமிழகத்தில் தோன்றிய சூஃபிகளில் முதல்வரான தக்கலை பீர்முகமது ஒலியுல்லா ஞானப் புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப்பூட்டு,ஞானமணிமாலை, ஞானக்குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, திருமெய்ஞ்ஞானச் சரநூல், ஞான நடனம்,ஞானமுச்சுடர் பதிகங்கள், ஞானவிகடச் சமர்த்து, மஃரிபத்துமாலை, மெய்ஞ்ஞான அமிர்தக்கலை, பிசுமில்குறம், ஞானத்திறவுகோல், ஞானசித்தி, ஞான உலக உருளை, ஞானக்கண், ஞான மலைவளம், மெய்ஞ்ஞானக் களஞ்சியம் முதலியன படைத்துள்ளார். இவர்களுக்குப்பின் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட சூஃபிக் கவிஞர்கள் மெய்ஞ்ஞான இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.
காஃபூரன், ஜன்ஜபீல் பானங்கள்
இறைபக்தியிலும் தியானத்திலும் தங்களையே அழித்தவர்களுக்கு இறைவன் அவர்களுடைய உள்ளத்தையும் பார்வையையும் விருப்பங்களையும் தூய்மைப்படுத்துவதற்கு ஒரு பானத்தைப் பருகக் கொடுக்கின்றான். இப்பானத்தின்
பெயர் “காஃபூர்” என இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
காஃபூரன்’ என்பது கற்பூரமாகும். இது பானமல்ல. திடப்பொருள். சுவர்க்கத்தில் ஒரு நதியுண்டு. அது மக்காமுல் முஹம்மதியாவிலிருந்து உற்பத்தியாகிறது. இந்நதியின் நீர் வெண்மையில், தெளிவில் கற்பூர நிறத்தை ஒத்திருக்கும். வாடையிலும் குளிர்ச்சியிலும் கற்பூரத்துக்கு நிகரானது. இந்நதிக்குக் ‘காஃபூர்’ என்று பெயர். இது அஹ்லுல் முஹப்பத்துக்களாகிய பேரின்பப்பெருக்கிலுள்ள மெய்ஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. இறைவனிடம் முழுமையாகச் சார்ந்து அவனையே புகலிடமாகக் கருதி நிற்கும் நன்னெறியாளர்கள்)ன் விகார அக்கினி குளிர்ச்சி பெறவும், பஞ்சேந்திரிய (ஆசைகள் அனைத்தும் அழியவும் இப்பானம்) கொடுக்கப்படுகிறது.இப்பானத்திற்குப்பின் அவர்களுக்கு “ஜன்ஜபீல்” 37 என்னும் பானம் வழங்கப்படுவதை இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
‘ஜன்ஜபீல்’ என்பது ‘சுக்கு’ ஆகும். ‘ஸல்ஸபீல்’ என்பது சுவர்க்கத்தில் உள்ள சுனையாகும்.‘ஜன்ஜபீல்’ என்பது ஜனா ஜபல் எனும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். ஜனா என்பது மேலே ஏறுதல் என்றும் ஜபல் என்பது மலை என்றும் பொருட்படும். வலிமையற்ற ஒருவனுடைய உடம்பிற்கு ஊக்கத்தையும் உஷ்ணத்தையும் கொடுத்து அவனை மலைமீது ஏறிச் செல்வதற்குரிய வல்லமை யுள்ளவனாக் குகிறது. ஆன்மீகப் பயணத்தில் இருக்கும் சூஃபிகளுக்குக் கடக்க வேண்டிய படித்தரங்களைக் கடக்க இவைகள் வல்லமையைத் தருகின்றன. காஃபூர் பானம் சூஃபிகளின் கீழடக்கும் நிலையையும் ‘ஜன்ஜபீல்’ பானம் மேலேறுவதற்குரிய வல்லமையையும் குறித்து நிற்கின்றன. இவ்விரு பானங்களும் மெய்ஞ்ஞானிகளான சூஃபியாக்களுக்கு இறைவன் வழங்கும் பானங்களாகும்).
மெய்ஞ்ஞான குரு
எவர் ஒருவர் நம்மையடையும் பொருட்டுத் தம் முழுச் சக்தியுடன் முயல்கின்றாரோ அவருடைய கொள்கையின் பயனாக நாம் அவரை நம்முடைய நேரான வழியில் செலுத்துகின்றோம் என்று இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான். இறையருள் ரகசியமானது.அகமியத்தில் அவனே குருவாய் அமர்ந்து வழிகாட்டுவது. பரமரகசியமானது. மீண்டும் திருமறையில் மெய்ஞ்ஞானிகளுக்கு இறைவனே தன்னிடம் வரும் வழியை அறிவிப்பதாக இறைவன் குறிப்பிடும்போது “அல்லாஹ் தான் விரும்பியவர்களையே தன் வழியில் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான் எனக் கூறுகிறான். தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான் எனக் கூறுகிறான்.
சூஃபி ஞானிகள் இறைவனைக் குருவாகக் கொண்டு பாடும்போது குரல் நெரியவே கதறிக் கூப்பிட்டுக் கருவே குருவே என்கண்ணே றகுமானே” என்று குறிப்பிடுவர். சூஃபித்துவம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலேயே தொடக்கம் பெற்றது. இறை சிந்தனைகளைத் தனித்திருந்து வளர்த்துக் கொண்டனர். இந்நிலையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஞான குருவாகக் கொண்டு பாடுகின்ற மரபுகாணப்படுகிறது.
கொள்ளக் குறையாதே குரு தூதர் தம் வடிவை
விள்ளத் தொலையாதே எவர்க்கும்
மேலடி தோழிப் பெண்ணே எனும் பாடலிலும்
அண்டர் முனிவரும் சது மறையு
மனேக சாஸ்திர முயிரனைத்தும்
விண்டு தெரியாம லுன்னைத் தேடி
வெறியா லுறவிலோர் கெதியுங்காணேங்
கொண்டல் குடைமேவும் நபியிறசூல்
குருவா மவர்கள்தம் பொருட்டினாலே
துண்டு படுத்தாம லென்கிளையும்
யானும் நினைசேரத் துணைசெய் யாஹூ
எனும் பாடலிலும் பெருமானார் அவர்களைக் குருவாகக் கொண்டு அவர்களைப் போற்றியும் வாழ்த்தியும் சூஃபிகள் கொண்டுள்ள மரபு வெளிப்படுகிறது.
(தொடரும்)