மகளிர் பக்கம் நெடுந்தொடர் ....
நல்ல பெண்மணி
( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு- எம். ஆர். எம். முகம்மது முஸ்தபா)
பெற்றோர் பொறுப்பு
பெற்றோர் குழந்தைகளை ஒழுங்காக வளர்ப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல கல்வி அளிக்க வேண்டும். சிறந்த ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும். சத்தான உணவும், நடுத்தர உடையும் வழங்கத் தவறக் கூடாது.
குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் ஆவர். அந்த அமானிதத்தை நல்ல முறையில் காக்க வேண்டிய கடமை பெற்றோர்களுடையது. “விசுவாசிகளே ! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும்,மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாக ஆகக் கூடிய நரக நெருப்பிலிருந்தும் இரட்சித்துக் கொள்ளுங்கள்!” (66:6) என்று அல்லாஹ் கூறுகிறான். குடும்பத்தினர் என்பதில் குழந்தைகளும் அடங்குவர்.
“குழந்தைகளை உலகின் நெருப்புத் தீண்டாமல் காப்பாற்றுவதை விட, நரகின் நெருப்புத் தீண்டாமல் காப்பாற்றுவதே மேலானதாகும்” என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். நரக நெருப்பிலிருந்து காப்பதென்றால் குழந்தைகளுக்கு நல்ல
ஒழுக்கங்களைக் கற்பித்து, அவற்றின்படி அவர்களை நடக்க வைப்பதாகும். அவர்களைத் தீய ஒழுக்கங்கள் பற்றிக் கொள்ளாமல் கவனித்துக் கண்காணிப்பதாகும். இதில் தவறும் பெற்றோர், தங்களையும் நரகிற்கு இரையாக்கிக் கொள்பவர்கள் ஆவர். தங்கள் குழந்தைகளையும் நரகிற்கு விறகாக்கி விட்டவர்கள் ஆவர். எனவே, குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாய் வளர்ப்பதில் தாயும், தந்தையும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் தந்தையைவிடத் தாய்க்குப் பொறுப்பு அதிகம் உண்டு. ஏனெனில், தந்தை பொருள் ஈட்டுவதற்காக அயல் ஊருக்கோ, அயல் நாட்டிற்கோ சென்று விடுகிறார். அவரால் குழந்தையைக் கவனிக்கவோ, கண்காணிக்கவோ இயலுவதில்லை. குழந்தைகள் பேசும் வயதை அடைந்ததும் அவர்களுக்கு அல்லாஹ் என்னும் சொல்லைத்தான் முதலில் சொல்லிக் கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு நான்கு வயதானதும் அவர்களுக்குக் கலிமாவை ஒப்புக்குச் சொல்லிக்கொடுத்து, அதுபின்னர் தெரியாமல் போய்விடுகிறது. எனவே மனப்பாடம் செய்யச் சொல்ல வேண்டும். இதனைச்சிறு வயதிலேயே சில பெற்றோர் செய்யாததால் தான் சிலருக்கு இறுதி வரையில் கூடக் கலிமா தெரிவதில்லை. குழந்தைகளுக்கு அவர்களின் முன்னோர்களைப் பற்றியும் கூற வேண்டும். குறைந்தது நான்கு தலை முறைகளையாவது குழந்தைகள் அறிந்திருப்பது அவசியம். பெரும்பாலானவர்களுக்குப் பாட்டனாரைப்பற்றித்தான் ஓரளவு தெரியும். பாட்டனாரைப் பெற்றவரைப் பற்றி அதிகம் தெரியாது.அல்லது ஒன்றுமே தெரியாது. குழந்தையின் பாட்டனார்களில் ஒருவர் குறிப்பிடத்தக்க வராகஇருந்தால், அவரைப் பற்றிக் குழந்தையிடம் கூறி,அவரைப் போல் அவனும் ஆக வேண்டும என்று உணர்த்த வேண்டும். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழைகளுக்கு, எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, இயலாதவர்களுக்கு உதவி செய்வதைப் பார்த்து, அபூஜஹ்ல்,“முஹம்மதால் குடும்ப கெளரவமே பாழாகிறது” என்று கூறிய போது, “நான் ஹாஷிமின் பெயரன். ஹாஷிம் ஏழைகளுக்கு உதவினார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.பாட்டனாரைப் பற்றிக் குழந்தைகளுக்குக் கூறுவது இவ்வித நல்ல விளைவை உண்டு பண்ணும்.பாட்டனார் வரலாற்றைக் கேட்டு, அவரைப்போல் ஆக வேண்டும் என்று விரும்பி, அவ்விதமே ஆன பெயரர்கள் பலர் உண்டு. குழந்தைகள் தம் பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமைப் படலாம். ஆனால் கர்வம் கொள்ளக் கூடாது. கர்வம் தன்னை உயர்த்தியும், பிறரைத் தாழ்த்தியும் எண்ணச் செய்யும்.
(தொடரும்)
4��