• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Sep 2012   »  ​புனித  ஹஜ்


திருமறைப்  பக்கம்


​புனித  ஹஜ் 

 

“எவர்கள் (பைத்துல்லாஹ்வுக்கு) யாத்திரை செல்ல சக்தி வாய்ந்தவர்களாயிருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது, அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாக்கப்பட்டிருக்கிறது”.               (3-96)

 

    ஹஜ்ஜு செய்வது இஸ்லாத்தின் ஐந்து கடமை (பர்ளு) களில் ஒன்றாகும். இதனை முற்காலத்து முஸ்லிம்கள் ஆர்வத்தோடும்,மனமகிழ்ச்சியோடும் நிறைவேற்றி வந்தனர். அவ்வேளை போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவு. போகும் வழிகளில், கொலை,கொள்ளை செய்பவர்களின் பயங்கரச் செயல்கள் தாண்டவமாடி வந்தன. இவைகளை எல்லாம் பொருட்படுத்தாமல், தவக்கல் வைத்து கடமை உணர்ச்சி மிக்கவர்களாக 5,6 மாதங்கள் வரை நடந்தும் அப்போதுள்ள வசதி இல்லா வாகனங்களில் பிரயாணம் (சவாரி) செய்தும், ஹஜ்ஜின் கடமையை நிறைவேற்றித் திரும்பினரென்றால் அவர்களின் பக்திப்பெருக்கை என்னவென்றுரைப்பது?


      இக்காலத்திலோ அவ்வாறன்று. தம்முடைய வசதிக்கேற்ப போக்குவரத்து வசதிகள், பயமின்றிச் செல்ல வழிகளில் பாதுகாப்பு, உணவிற்கான ஏற்பாடுகள், சென்றுவர குறைந்த நாட்கள், இவ்வளவு வசதிகளிருந்தும் கூடசெல்வந்தர்களும், நடுத்தரவாதிகளும் இக்கடமையைச் செய்துமுடிக்கத் தயங்குகின்றனர், ஏனோ?! 


      சிலர் அடுத்த ஆண்டு போய்வரலாமென்பதைப் பார்க்கின்றோம். அதுவரை ஜீவித்திருப்போமா ? என்பதனை அவர்கள் நினைப்பதில்லை. நாளை என்பது நம் கையிலில்லையே.


      சுருங்கக்  கூறின் ஒரு மனிதனுக்கு கடன் இல்லாமலிருந்து தான் ஹஜ்ஜு செய்து     வரும்வரை வீட்டில் மனைவி மக்களுக்குப் போதுமான செலவுக்குக் கொடுக்கவும், தனக்கு வழிச்செலவுக்குள்ள பணமும் இருப்பவருக்கு ஹஜ்ஜின் கடமை ஏற்பட்டு விடுகிறது.


      “கொல்லன் உலையானது, இரும்பின் துருவை நீக்குவதுபோல ஹஜ்ஜும் உம்ராவும் வறுமையையும், பாவங்களையும் நீக்கிவிடும். மேலும் ஹஜ்ஜு யாத்திரை செய்பவன் செல்லும் பொழுதும் மீளும்பொழுதும் அல்லாஹுவின் காவலில் இருக்கின்றான்”. என்று ரசூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மொழிந்துள்ளார்கள். எனவே :-


      இதனைக் கவனிக்காமல் இருப்பவர் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட குற்றத்திற்குள்ளாகிவிடுகிறார். எனவே தகுதியுடைய ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் ஹஜ்ஜின் கடமையைக் காலம் கடத்தாமல் நிறைவேற்றிவிட வேண்டியது அவசியமாகும்.                   - ஹத்யா ­ஷரீபிலிருந்து - 

 

 

 

�