• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Sep 2012   »  ​அவன் வெளியே இல்லை


அவன் வெளியே இல்லை...

மெளலவி, அல்ஹாஜ் ஜியாவுத்தீன்பாகவி,  அய்யம்பேட்டை

 

    புறக்கண்களுக்குப் புலப்படாத வல்லான் அல்லாஹ்வைப் புரிந்து கொள்வதற்கு ஆன்மிக வாதிகள் பல்வேறு வழிகளைக் கையாண்டிருக்கிறார்கள்.  சிலர் காடு கழனிகளில் தனித்திருந்து, தவமிருந்து அவன் கிடைப்பானா எனத் தேடினார்கள். வேறுசிலர் பசித்திருந்து, விழித்திருந்து, சன்னியாசம் பூண்டு அலைந்தார்கள்.  இன்னும் சிலர் குர்ஆன், ஹதீஸ்களை வைத்துக்கொண்டு ஆய்வுகளில் ஈடுபட்டார்கள்.


      இவர்கள் அனைவரும் ஆட்டைத் தோளில் போட்டுக்கொண்டு தேடிய இடையனைப் போன்றானார்கள். விளக்கின் அருகே இருந்து கொண்டு வெளிச்சத்தை தேடியவர்கள். ஏனெனில் நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கிறான் (அல்குர்ஆன்)  என்று இறைவன் கூறுவது, நடைமுறை சாத்தியமாவது எப்படி என்கிற ரகசியம் தெரியாதவர்கள் என்கிறார்கள் ஷைகு முஹிய்யுத்தீன் இப்னு அரபி (ரஹ்)     (நூல் : புதூஹாத்துல் மக்கிய்யா)

   

   ஆம்! அல்லாஹ்வின் படைப்பினங்கள் வி­ஷயத்தில் சிந்தனை செய்யுங்கள். அவனது தாத்தாகிய உள்ளமையைச் சிந்திக்காதீர் என நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள்.  (நூல் : ஜாமியுல் மஸானிது                10503 அறிவிப்பு - இப்னு உமர்ரலி)

 

 வானத்தைப்பார் ! பூமியைப் பார் ! கடல், மலைகள் ஆகாயத்தைப் பார்! ஒட்டகத்தையும்உயிரினங்களையும் பார், என்று தான் இறைவன்  தூண்டுகிறானே தவிர தன் தாத்தைப்பற்றி ஆய்வு செய்யுமாறு வலியுறுத்தவில்லை. ஏனென்றால் எந்தப்பொருளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் தெய்வீக சக்தி ஒன்று இருப்பதைஅது எண்பித்துக்காட்டும்.


      இன்னும்சொல்லப் போனால் தன்னை எங்கே தேடுவது? எப்படித் தேடுவது? என பல வசனங்களில் சொல்லித்தருகிறான். இதோ அது தொடர்பான வசனங்கள்


      நிச்சயமாக, அவர்கள் தங்கள் ரட்சகனைச் சந்திப்பது பற்றி சந்தேகத்திலிருக்கிறார்கள் என்பதை            (நபியே நீங்கள் ) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்து கொண்டிருக்கிறான்                                                      (41-54) 


      மற்றொரு வசனத்தையும் பாருங்கள் (பத்ருப் போரில் பகைவர்களாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை  எனினும் அல்லா ஹ்தான் அவர்களைக் கொன்றான். (மண்எடுத்து அவர்கள் மீது) நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை எனினும் அல்லாஹ்வே  எறிந்தான்(குர்ஆன் 08-17)

 

  (நபியே! ஹுதைபிய்யா என்னுமிடத்தில்) நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்  செய்து கொடுக்கின்றார்களோ.அவர்கள்  வாக்குறுதி செய்து கொடுப்பதெல்லாம் அல்லாஹ்விடமே தான். அல்லாஹ்வின் கையானது அவர்களது கைகளுக்குமேலுள்ளது               (குர்ஆன்48-10)

     

    இதுபோன்ற வசனங்கள்தாம் அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்கு மஃரிஃபாவின் வழியைக் காட்டக்கூடிய ஆதாரசுருதியாகும். இவற்றின் வெளிப்படையான பொருள் அல்லாஹ்வைப் பற்றிய தேடலை நமக்கு இலகுவாக்கிவிடுகிறது.


      மற்றொரு பக்கம் பார்த்தால் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொன்மொழிகள் அல்லாஹ்வைப் பார்ப்பதற்கான வெளிச்சத்தைக் காட்டுகிறது. முஸ்லிம் ஷரீபில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய அறிவிப்பு வருகிறது.அல்லாஹ் கூறுவதாக நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். மறுமையில் அல்லாஹ் கேட்பான் ஆதமின் மகனே ! நான் நோயாளியாயிருந்தேன்;  நீ என்னை நலம் விசாரிக்கவில்லை.


மனிதன் :- இறைவா நீ தானே ரப்புல் ஆலமீன், நான் எப்படி உன்னை நலம் விசாரிப்பேன்?


இறைவன் :- நீ அறிந்திருக்கவில்லையா எனது இன்ன அடியான் நோயுற்றிருந்தான்; அவனை நீ நலம் விசாரிக்கவில்லை; அப்படி அவனை நலம் விசாரித்திருந்தால் அங்கே என்னைப் பெற்றுக் கொண்டிருப்பாய்.


இறைவன்: மனிதா ! உன்னிடம் உணவு தேடினேன்;  நீ எனக்கு உணவளிக்க வில்லை.


மனிதன்: இறைவா  நீதான் ரப்புல் ஆலமீன். நான் எப்படி உனக்கு உணவளிப்பேன்?


இறைவன்: எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கத் தேடினான்; அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. அவனுக்கு உணவளித்திருந்தால் அங்கே என்னை அடைந்திருப்பாய்.(நூல் முஸ்லிம். அறிவிப்பு அபூஹுரைரா (ரலி) 6508)


      பிரிதொரு ஹதீஸைப் பாருங்கள். ஒருபடி மேலே போய் அவன் வெளியே இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் கூறுவதாக நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் எனது நேசர்களை பகைத்துக் கொண்டார்களோ அவரோடு நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். என் அடியானின் மீது நான் விதித்துள்ள ஒன்றை விட   எனக்கு மிக விருப்பத்திற்குரிய ஒன்றின் மூலம் அவன் என்னை நெருங்குவதில்லை. எனது அடியான் உபரி வணக்கங்களின் மூலம் நான் விரும்புகிறவரை என்னை நெருங்கிக் கொண்டிருக்கின்றான்.  நான் அவனை விரும்பிவிட்டால் அவன் கேட்கும் செவியாகி விடுவேன் இன்னும் அவன் பார்க்கும் பார்வையாகி விடுவேன்; அவன் நடக்கும் கால்களாவேன். அவன் என்னிடம் கேட்டால் கொடுப்பேன். (இந்த நிலைகளை அடைந்தே தவிர)(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரி 6502)

 

    இந்தக் கருத்தை திருக்குர்ஆன் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கிறது. நீங்கள் எந்தப்பக்கம் திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் திருமுகம் உண்டு (02-115)  எனவே இறைத்தேடலின் தாகத்தை  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படுத்திய விதம் வித்தியாசமானது.


      நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹள்ரத் முஆத் (ரலி) அறிவிக்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வை உள்ளால் உள்ளபடி (முறைப்படி) அறிந்து கொண்டால் கடல்களின் மீதும் நடந்து செல்வீர்கள்.           

                                                                                              நூல் :  ஜாமிவுல் மஸானிது - 17823)

      

    இந்த ஞானப்பாட்டையில் செல்பவர்களுக்கு ஓர்  இறுதித் தீர்ப்பையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  குறிப்பால் உணர்த்தினார்கள்.பெருமானார் கூறியதாக ஹள்ரத் அபூகத்தாதா (ரலி) அறிவிக்கிறார்கள். எவர் என்னைப் பார்த்தாரோ அவர் நிச்சயமாக (ஹக்கை) அல்லாஹ்வைப் பார்த்தவராவார்         (புகாரி 6995-6996) 


      இத்தகைய தத்துவார்த்தங்களுக்கு ஆதார சுருதியாக இருப்பதே ஆதம் (அலை) வுடைய நிகழ்வு தான்.அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  மலக்குமார்களிடம் எனக்கு ஸுஜூது செய்யுங்கள் என உத்தரவிடாமல் ஆதமுக்கு சஜ்தா செய்யுங்கள் என்று உத்தரவிட்டது ஏன்? படைப்பினங்களுக்கு ஸஜ்தா செய்வது தவறல்லவா?அப்படியிருந்தும் இறைக்கட்டளை என்பதற்காக அனைவரும் தலைவணங்கினர்.  அத்துடன் அல்லாஹ் யாரை கண்ணியப்படுத்தச் சொல்கிறானோ அவரை கண்ணியப்படுத்தினால் அல்லாஹ்வையே கண்ணியப்படுத்தியதாக ஆகும். எனவே ஹக்கையும் - ஹகீகத்தையும் விளங்கிக் கொள்கிற பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக ஆமீன்.