• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Sep 2012   »  ​மாஷா


தமிழகத்தின்

 ஐன்ஸ்டீன்

மாஷா


    நிஜாமுதீன் ஓர் அரசு  ஊழியர். ஆவணங்களைத் துணியால் பொதிந்து மெழுகை உருக்கி சீல் வைக்கும் வேலையை அடிக்கடி அவர் செய்ய வேண்டியதிருக்கும்.


      தீயில் மெழுகை உருக்கி சீல் வைக்கும்போது அவ்வப்போது அவரது கையில் சூடான மெழுகுத்துளிகள் விழுந்து அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். அருகிலிருந்த மகளிடம், இதுக்கு ஏதாச்சும் மெஷின் இருந்தா நல்லது என ஒருநாள் போகிற போக்கில் சொன்னார். அவரது மகள் மாஷாவுக்கு நெருப்பில்லா முத்திரைவைக்கும் ஒரு மெஷினை கண்டுபிடித்தால் என்ன ? என்று தோன்றவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இப்போது வெற்றியும் பெற்றுவிட்டார். ‘நெருப்பில்லா முத்திரை வைப்பான் ’ரெடி


யார் இந்த மாஷா ?


      இரண்டு சர்வதேச விருதுகள், 5 தேசிய விருதுகள், ஒரு தென்னிந்திய  விருது, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பரிசு என கலக்கி வரும் மாஷா நசீம் கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர் கடையைச் சேர்ந்தவர். தற்போது சென்னை கேளம்பாக்கம் எஸ்.எஸ்.என். கல்லூரியில் பொறியியல் படிக்கிறார். இது மாஷாவின் முதல் கண்டுபிடிப்பல்ல.


      ஒன்பதாவது வயதிலேயே சின்னச்சின்ன கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் உலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர்.


     “என்னோட அப்பா நாகர்கோவில் அரசு கருவூலத்தில் அதிகாரியா இருக்கார். உதவியாளர் இல்லாத வேளைகளில் அரக்கை உருக்கி ஆவணங்கள், கடிதங்களுக்கு சீல் வைப்பார். அதற்குத் தீர்வு காண முடியுமா என யோசித்தபோது உருவானது தான் இந்த‘நெருப்பில்லா முத்திரை வைப்பான்’ கருவி. வெறும் 130 கிராம் எடையுள்ள இந்தகையடக்கக் கருவியில் அரக்குக் குச்சியை உள்ளே செலுத்திவிட்டு சுவிட்சை ஆன் செய்துவிட்டால் வட்ட வடிவில் சீல் விழுந்து விடும். கால் மணி  நேரத்தில் மின்னல் வேகத்தில் 100 சீல்கள் வைத்து விடலாம்.


      தற்போது நாடுமுழுக்க தினசரி ஆறு லட்சத்துக்கு மேற்பட்ட சீல்கள் நெருப்பில் காட்டித்தான் வைக்கப்படுகிறது. சென்ற ஆண்டு  சட்டசபைத் தேர்தலில் தேர்தல் கமி­ஷன் அனுமதியோடு நாகர்கோவில் தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் இந்த சீல் மேக்கர் கருவியைப் பயன்படுத்தி சீல் வைச்சாங்க. அதைத் தொடர்ந்து டெல்லிக்கு என்னை அழைத்தப் பேசினார் தலைமை தேர்தல் கமி­ஷனர் குரேஷி.  வரும் தேர்தல்களில் இந்தக்கருவியை பயன்படுத்தி சீல் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு, கேரளா,குஜராத், டெல்லி மாநில அரசுகளும் இந்தக் கருவியைப் பயன்படுத்துவது குறித்து எனக்குக் கடிதம் எழுதியுள்ளன!” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் மாஷா.


      “ஆனால் அரசாங்கம்  ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் படிப்பவர்களுக்கு படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கி  வருகிறது. அதுபோல் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் என்னைப் போன்றவர்களுக்கு அறிவியல் கோட்டாவில் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வழங்கினால் எங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அதிக நேரம் செலவிட முடியும்” என்றார் மாஷா !  அரசாங்கம் இந்த இளம் விஞ்ஞானியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தியாக்குமா?  

                                                                                               தகவல்: AMD. ஸாதிக், B.B.A., திருச்சி