முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
வாழ்க்கை வரலாறு
மூலம் : திருநபி சரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சி
தொடர்ந்தவெற்றி
முஸ்லிம்கள் அனைவரும் எதைத் தோல்வியென்று கருதியிருந்தாகளோ அதையே அல்லாஹ் வெற்றி என்று அருளினான் .பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ( ரலி )அவர்களை அழைத்து அவ்வி ஷயத்தை அறிவிக்க ,அவர்கள் அதிக திருப்தி கொண்டார்கள் .பின்வரும் சம்பவங்கள் மேலே கூறும் வாக்கியங்களின் உண்மையைத் தெளிவு படுத்துகின்றன .இவ்வுடன்படிக்கை நடந்து சுமார் 21/2வருடத்திற்குப் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிற்குச் செல்லும் போது 10,000முஸ்லிம்களுடன் சென்றார்கள் .இதுவரை முஸ்லிம்களுக்கும் மக்காவாசிகளுக்கும் இடையில் ஓயாது சண்டை நடந்து வந்ததால் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழக வழியில்லாதிருந்தது .இப்போது உடன்படிக்கையின் காரணமாக ,அவர்களுக்குள் போக்குவரவு ஏற்பட்டது .வியாபாரம் காரணமாகவும் குடும்ப சம்மந்தமான காரியங்களுக்காகவும் மக்காவாசிகள் மதீனாவிற்கு அடிக்கடி வரவும் ,அங்குச் சில காலம் தாமதிக்வும் ஏற்பட்டது .அங்கிருக்கும் காலங்களில் அவர்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து பழகி வந்ததால் இஸ்லாத்தைப் பற்றியும் ,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ஒழுக்கத்தைப் பற்றியும் மக்காவாசிகள் நேரில் அறிந்து கொள்ளச் சந்தர்ப்பம் உண்டாயிற்று .
முஸ்லிம்களின் தூய்மையான பக்தியும் மேன்மையான ஒழுக்கமும் நற்செய்கைகளும் அவர்களின் போற்றத்தக்க நற்குணங்களும் மக்காவாசிகளின் மனதில் நன்கு பதிந்து நூதன மாறுதலை உண்டாக்கின .முஸ்லிம்கள் மக்காவிற்குப் போய் வருவதாலும் ,அங்குள்ளவர்கள் முஸ்லிம்களை நன்கு தெரிந்து கொண்டார்கள் .முஸ்லிம்களின் உன்னத ஒழுக்கங்கள் குறைஷிகளை இஸ்லாத்தின் பக்கம் இழுத்தன .குறைஷிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தில் வந்து சேர்ந்தார்கள் .
இவ்வருடம் அறபு நாட்டின் பல பாகங்களிலுள்ள பல பல தலைவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்தார்கள் .தலைவர்கள் சேர்ந்ததும் அவர்களைச் சேர்ந்தவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள் .ஹுதைபிய்யா உடன்படிக்கை இவ்விதம் இஸ்லாத்தின் வெற்றி முரசாயிற்று .
சண்டை சச்சரவு நின்று ,பகைமை ஒழிந்து இஸ்லாத்தின் ஆத்மீக சக்தியையும் போதனைகளையும் தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு வருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .இவ்வுடன்படிக்கையினால் குறைஷிகள் முஸ்லிம்களுடன் சேர்ந்து பழகுவதற்கும் அவர்களுடைய ஒழுக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அதன் மூலமாக இஸ்லாத்தின் போதனைகளை விளங்கிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .இவ்வுடன்படிக்கைநடந்ததிலிருந்து மக்கா வெற்றி கிடைக்கும் வரை இரண்டரை வருடத்திற்குள்ளாக ஏராளமானமக்கள் இஸ்லாத்தில் வந்து சேர்ந்தார்கள் .இவ்வளவு அதிகமாக வேறு எந்தக் காலத்திலும் இஸ்லாத்தில் மற்ற மதத்தினர் சேர்ந்ததில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள் .
குறைஷிகளுள் பெயர் பெற்ற வீரரும் ,உஹத் சண்டையில் தோற்றுப் போகக் கூடிய நிலைமையிலிருந்த குறைஷியர்களை ஊக்கப்படுத்தி முன்னேறும்படிச் செய்தவரும் ,ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த சந்தர்ப்பத்தில் குறைஷிகளின் முன்னணிச் சேனைக்குத் தலைவராகஇருந்தவருமான காலித் இப்னு வலீத் என்பவர் ,ஹுதைபிய்யா உடன் படிக்கைக்குப் பின் சிறிது நாட்கள் கழித்து இஸ்லாத்தைத் தழுவினார் .அம்ரு இப்னு ஆஸ் என்பவரும் இஸ்லாத்தைத் தழுவினார் .இவ்விருவரும் மதீனா வந்தே இஸ்லாத்தை ஏற்றனர் .இதுவரை இஸ்லாத்திற்குப் பரம விரோதிகளாயிருந்த இவ்விருவரும் இதுமுதல் இஸ்லாத்திற்காகத் தங்களின் உடல் ,பொருள் ,ஆவி மூன்றையும் அர்ப்பணம் செய்துவிட்டார்கள் .இவர்களின் வீர பராக்கிரமத் தினாலேயே ,பிற்காலத்தில் மிஸ்ரும் ( எகிப்தும் ),ஷாமும் ( சிரியாவும் )முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டன .
உடன்படிக்கையின் காரணமாய் மக்காவிலிருக்கும்படி ஏற்பட்ட முஸ்லிம்களை குறைஷிகள் கடுமையான துன்பங்களுக்குள்ளாக்கினார்கள் .அதிலிருந்து தப்புவதற்காக அநேகர் மதீனாவிற்கு ஓடி வந்தார்கள் .அவ்விதம் முதன்முதலாக ஓடி வந்தவர்கள் அபூபஸீர் ( ரலி )என்னும் பெயருள்ள ஒருவர் .அவர் மதீனா போய்ச் சேர்ந்தார் என்று குறைஷிகளுக்குத் தெரிந்ததும் அவரை அழைத்து வரும்படி அவருக்குப் பின் இருவரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அனுப்பினார்கள் .அபூபஸீரை மக்காவிற்குத் திரும்பிப் போகும்படியாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள் .அப்போது அவர் ,இஸ்லாத்தைக் கைவிடும்படி என்னை நிர்பந்திக்கும் பகைவர்களிடமா என்னை ஒப்படைக்கிறீர்கள் ?என்று கேட்க பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ,அல்லாஹ் அதற்கு ஏதாவது வழியுண்டு பண்ணுவான் என்று சொல்லி அவர்களைக் குறைஷித் தூதுவர்களுடன் அனுப்பி வைத்தார்கள் .
மக்காவிற்குத் திரும்பி வரும் வழியில் அபூபஸீர் ( ரலி )குறைஷித் தூதர் இருவரில் ஒருவரை வாளினால் வெட்டினார் .மற்றொருவர் அதைக் கண்டு மதீனாவிற்கு ஓடி வந்து நடந்த விருத்தாந்தங்களைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொல்லி முறையிட்டான் .அவன் வந்த சமயம் அபூபஸீரும் ( ரலி )மதீனாவிற்கு வந்துவிட்டார் .அவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ,தாங்கள் உடன்படிக்கைப் பிரகாரம் என்னைத் தங்களிடமிருந்து திரும்ப அனுப்பி விட்டீர்கள் .இப்போது தங்கள்மீது ஒருவிதப் பொறுப்புமில்லை என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார் .அவர் மதீனாவை விட்டுச் சென்று சமுத்திரக்கரையோரமாயுள்ள அயிஸ் என்னுமிடத்தில் போய்த் தங்கிக் கொண்டார் .அவர் அங்குச் சென்று தங்கியிருக்கும் செய்தி மக்காவில் ஆதரவில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்குத் தெரியவே அவர்கள் குறைஷிகளின் கொடுமையிலிருந்து தப்ப வழி ஏற்பட்டு விட்டதென்று கருதி அயிஸ் என்னும் அவ்வூருக்கு ஒருவர் பின்னால் ஒருவராய் பலர் மறைந்து சென்றார்கள் .நாளுக்கு நாள் முஸ்லிம்களின் எண்ணிக்கை அயிஸில் கூடிக் கொண்டே போயிற்று .நாளடைவில் அவர்கள் அங்கேயே பலமாய் நிலைத்து விட்டார்கள் .அவ்வூரின் வழியாகத்தான் குறைஷிகளின் வியாபாரச் சரக்குகள் ஷாமுக்குச் செல்ல வேண்டியிருந்தது .அவ்வழியாகச் செல்லும் குறைஷிகளுடைய சரக்குகளை முஸ்லிம் கூட்டத்தார் அபகரிக்கத் தொடங்கினார்கள் .
இவ்விஷ யம் குறைஷிகளுக்குத் தெரிந்ததும் அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள் .அக்கடிதத்தில் முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குப் போனால் அவர்களைத் திருப்பி அனுப்பி விட வேண்டுமென்று ஹுதைபிய்யா உடன்படிக்கையில் குறிப்பிட்டபடி ஐந்தாவது உடன்படிக்கையை நிபந்தனையிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்றும் ,அதைப் பற்றி குறைஷிகள் ஆட்சேபிப்பதில்லை என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள் .அதன்படியே பெருமானார் அவர்கள் அயிஸிலுள்ள ஆதரவில்லாத முஸ்லிம்களையெல்லாம் மதீனாவிற்கு அழைத்துக் கொண்டார்கள் .அபூஜந்தல் அவர்களும் ,அவர்களுடன் சேர்ந்த மற்ற முஸ்லிம்களும் மதீனாவில் வந்து சேர்ந்தார்கள் .குறைஷிகள் வியாபாரத்திற்கு அதுமுதல் தொந்தரவு இல்லாமலிருந்தது .பயங்கரமான நிபந்தனை என்று கருதிக் கொண்டிருந்த மக்களுக்கு .நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுமையாக இருந்து கொள்ளுங்கள் ;அல்லாஹ் அதற்கு வழிவிடுவான் என்று சமாதானப் படுத்திய வார்த்தைகளுக்கு அல்லாஹ் மதிப்பளித்தான் .குறைஷிகள் தாங்களாகவே முன்வந்து அந்த நிபந்தனையைத் திரும்பப் பெற்றார்கள் .உண்மைக்கும் பொறுமைக்கும் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை இந்த நடவடிக்கைகள் நிரூபித்துவிட்டன .
( வெற்றிகள்தொடரும் )