பயமா ? பக்தியா ?
ஷாருக்கான் ஹக்கிய்யுல் காதிரிய் , பெரம்பலூர்
நீக்கமற நிறைந்திருக்கும் இறையைப் போற்றி ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சலாமும் சலாத்தும் சொன்னவனாக ,சங்கைக்குரிய என் ஆருயிர்த் தந்தை சைகுனா வாப்பா நாயகம் அவர்களின்அருள்நோக்கால் இக்கட்டுரையைத் தொடங்குகிறேன் .
மக்கள் இன்று தக்வா என்னும் இறையச்சத்தை ஃபேசனாக மாற்றிவிட்டார்கள் .எவர் ஆயினும் பக்தி தேவை .ஆனால் அந்த பக்தி காலப் போக்கில் பயமாக மாறிவிட்டது .இதனையே பயபக்தி என்கிறார்கள் .ஈமான் பயத்துக்கும் ஆதரவுக்கும் இடையே இருப்பது என்பது நபிமொழி .
பக்தி என்பது இறைவன் மீது நாம் கொண்டுள்ள அன்பு .அதுவே நம்மை அறிவதற்கான நுழைவாயில் .நம்முடைய தாற்பரியத்தை அறிய உதவுவதும் ஓர் உணர்வு .இறைவன் மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் .இன்று நாம் பயத்துடனே இறைவனை நோக்குகிறோம் என்பதில் ஐயமில்லை .ஆனால் நாம் இறையிடத்தில் கொள்ள வேண்டியது பக்தியே .நம்முடைய பயம் நமக்கு பாஸிடிவ் ஆக இருக்க வேண்டும் .நாம் நம் பிள்ளைகளிடம் இறைவனை அறிமுகப்படுத்தும் போது இறைவனின் நல்ல விதத்தை எடுத்தியம்ப வேண்டும் .இதைச் செய்யாதே !இறைவன் தண்டிப்பான் என்று சொல்வதோடு இதைவிட நல்ல காரியங்களை செய் !இறைவன் உனக்கு அருள் புரிவான் என்று உரைத்தால் ,அவர்கள் இறைவனை நன்கு அறிந்து கொள்வார்கள் .
முல்லாவைப் பற்றிய சம்பவத்தைப் பார்ப்போம் .முல்லாவும் ,அவருடைய மனைவியும் கடலில் பயணம் மேற்கொண்டார்கள் .அவர்கள் பயணத்தின் போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது .கப்பல் அங்கும் இங்குமாய் வானில் ஊசலாடும் பட்டத்தைப் போல தத்தளித்தது .கப்பலில் இருந்த அனைவரும் இறைவா !எங்களைக் காப்பாற்று !என்று பயத்துடன் அலறினர் .ஆனால் முல்லாவோ ,பதற்றமே அடையாமல் உணவு உண்டு கொண்டிருந்தார் .அதனைக் கண்ட அவருடைய மனைவிக்கு ஒரே ஆச்சரியம் .முல்லாவிற்கு அருகில் வந்து ,மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து கதறுகின்றனர் .தாங்கள் மட்டும் அமைதியாக உள்ளீரே ?என்று வினவினாள் .அதற்கு முல்லா தன் அருகில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மனைவியின் கழுத்தில் அறுக்கும் வண்ணம் வைத்திருந்தார் .முல்லா தன் மனைவியிடம் இந்தக் கத்தி உன் உயிரை எடுத்துவிடாதா ?என்று கேட்டார் .அதற்கு அவள் கத்தி உயிரைப்பறிக்கக் கூடியதே .ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக் கணவர் ஆயிற்றே !என்று பதிலுரைத்தாள் .முல்லா அதற்கு ,இந்தக் கடல் கொந்தளிப்பும் அவ்வாறே .இறைவனிடம் பிரார்த்திப்போம் .இறைவன் நம்மைக் கைவிடமாட்டான்என்று முல்லா உரைத்தார் .
இது பக்திக்கு ஓர் நற்சான்று .முல்லா அப்போது பயத்தை வெளிப்படுத்தவில்லை .அவ்வாறே நாமும் நடக்க வேண்டும் .அந்த உணர்வுதான் மேன்மையானது .பக்தி மெய்ஞ் ஞானத்தின் முதல் படி .அதனை சரியாக அறிவோமாக !இந்த உணர்வுதான் ஈருலக இரட்சகர் ,கண்மணி நாயகம் எம்பெருமானார் இரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் காட்டியது .இதுவே மஹ் ஷரில் நமக்காக அஹ்மது நாயகம் இரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மன்றாட வைப்பது .இதுவே சூஃபிகளின் வழி .நமக்குத் தேவை பயம் அகலாத பக்தியே அன்றி இல்லை .
பரிசுத்த மெய்ஞ்ஞானமே பக்தியைக் காட்டுவதற்குரிய ஒரே வழி என்பது சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் அமுதமொழி .அந்த மெய்ஞ்ஞானத்திற்கு பக்தியே முதல் படித்தரம் .
இந்த நூற்றாண்டிற்கு நாம் உள்ளோம் .இனி வரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையிலேயே நடைபெறும் .எம்மை இந்த ஜமானில்( காலத்தில் )அண்டியவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள் என்று சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நாம் பெரும் பேறு பெற்றவர்கள் .நாம் செய்கு நாயகம் அவர்களிடம் கொண்டுள்ள பக்தி நம்மை ஹக்கிடம் கொண்டு சேர்க்கும் .
செய்கிடம் நாம் வைக்கும் அன்பு ,போகப் போக இறைவனிடத்தில் நம்மைக் கொண்டு சேர்க்கும் .நாம் பக்தியில் முக்தியடைய செய்கு நாயகம் அவர்களின் மீது கடல் நுரையளவு பக்தி கொள்வோமாக .பயம் இல்லாத பக்தியைக் கொள்வோமாக .ஈருலகிலும் ஜெயம் பெறுவோமாக .ஆமீன் .யாரப்பல் ஆலமீன் .
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹி அலா முஹம்மத் யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம் .