வஹாபிகள் ஸஹாபிய வேடங்களில்..கிளியின் கதை
இத்தகைய அநியாயக்கார சிற்றறிவுடையவர்களை ,மெளலானா ஜலாலுத்தீன் ரூமி ( ரஹ் )அவர்கள் மஸ்னவி ஷரீபில் குறிப்பிடுகின்ற வழுக்கைத் தலையுடைய கிளிக்கு ஒப்பாகத்தான் சொல்ல வேண்டும் .எவ்வாறெனில் :-
பலசரக்குக் கடை வைத்திருந்த ஒரு வியாபாரி கிளியொன்று வளர்த்தான் .அது ,இனிய குரலோசையும் ,பஞ்சவர்ண நிறமும் பெற்றிருந்தது .பேசும் தன்மையுள்ள அந்தக் கிளி அவனது கடைக்கு காவலாகவும் இருக்கும் .வாடிக்கைக்காரர்களிடம் விசுவாசமாகவும் பேசும் .ஒரு நாள் கடைக்காரன் வீட்டிற்குப் போயிருந்த சமயம் கடைக்குக் காவலாய் இருந்தது கிளி .
பூனையொன்று எலியைப் பிடிப்பதற்கு திடீரென கடையினுள் குதித்தது .அதைக் கண்டதும் உயிருக்கஞ்சி கிளி விரண்டு பறந்தோடிற்று .அதனால் கடையில் அடுக்கி வைத்திருந்த பாதாம் எண்ணெய் சீசாக்கள் கீழே விழுந்து உடைந்தன .
கடைக்காரன் திரும்பி வந்தான் .சீசாக்கள் உடைந்து எண்ணெய் கொட்டிக் கிடப்பதைக் கண்டு ஆத்திரம் கொண்டு கிளியின் தலையில் அடிகள் பல கொடுத்தான் .அதனால் அதன் தலை வழுக்கையாகிவிட்டது .பேச்சையும் அது மறந்து போயிற்று .இந்நிலையைக் கண்டு கடைக்காரன் கைசேதப்பட்டு தன்னைத்தானே நொந்து கொண்டான் .அது மீளவும் மதுர மொழி பேசாதா என்று ஏங்கி நின்றான் .
நாட்கள் சில கழிந்தன .கம்பளி ஆடை அணிந்த பரதேசியொருவர் ,திறந்த வழுக்கைத் தலையுடன் அவ்வழியே சென்றார் .அவரைக் கண்டதும் கிளி உரக்கக் கத்தி ஓ வழுக்கைத் தலையாரே !யாது காரணத்தால் நீயும் வழுக்கை இனத்தைச் சேர்ந்தீர் ?என்னைப் போலவே சீசாவை உடைத்து எண்ணையைக் கொட்டி அதன் மூலம் இந்த கதி அடைந்தீரா ?என்று பேச ஆரம்பித்தது .
கிளியின் இத்தகைய ஊகத்தைக் கண்டு அங்கிருந்த யாவரும் நகைத்துச் சிரித்தனர் .ஏனெனில் கம்பளித் துணி அணிந்தவரை அது தன்னைப் போலவே பாவித்ததனாலேயாம் .
மெளலானா ரூமி ( ரஹ் )அவர்கள் மேலும் அறிவுறுத்துகிறார்கள் .அது வருமாறு :-
பரிசுத்த மஹான்களின் செயல்களை உனது சிற்றறிவு கொண்டு முடிவு செய்துவிடாதே .ஷேர் ,ஷீர் என்று வரைவதில் எழுத்துக்கள் ( ஷீன் ,ஏ ,ரே )ஒத்திருந்த போதிலும் அர்த்தத்தில் வித்தியாசம் உண்டு .மனிதனை அடித்துக் கொன்று புசிக்கும் புலிக்கு ஷேர் எனப்படுகின்றது .அவன் குடித்துப் பருகும் பாலுக்கு ஷீர் எனப்படுகின்றது .மேற்சொன்ன இந்தக் கிளியைப் போல் புத்தி படைத்த குறைமதியாளர்கள் தப்பபிப்பிராயம் கொண்ட காரணத்தினாலேயே உலகத்தினர் வழி பிசகிப் போய்விட்டனர் .அவ்லியாக்களின் செயல்களை நல்லறிவு படைத்த ஒரு சிலரே விளங்கிக் கொண்டார்கள் .துர்பாக்கியவான்களான நஸீப் அற்ற மற்றவர்களுக்கு அதுபற்றிய உண்மை அறிவுகள் உண்டாகி இருக்கவில்லை ஆதலின் ,அவர்களுடைய பார்வைக்கு நல்லதும் ,கெட்டதும் ஒன்று போலவே தோன்றின .தங்களின் தவறான எண்ணத்தின் காரணத்தினால் அவர்கள் அன்பியாக்களைத் தங்களுக்கு இணையாக்கினார்கள் .அவ்லியாக்களை தங்களைப் போலவே சமமாக எண்ணிக் கொண்டார்கள் .நாமும் மனிதர்கள் தாம் ,அவர்களும் மனிதர்கள் தாம் எனவும் ,நாமும் உண்ணுகிறோம் ,உறங்குகிறோம் .அவர்களும் உண்ணுகிறார்கள் ,உறங்குகிறார்கள் எனவும் சமப்படுத்தித் தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்கள் .அவர்களுக்கும் ,தங்களுக்கும் இடையே மலை போன்ற வித்தியாசங்கள் உண்டாகி இருந்ததை அவர்கள் குருட்டுத் தன்மையால் அறிந்திருக்கவில்லை .பாருங்கள் !குளவி ,தேனீ இந்த இரு ஜந்துக்களும் ஒரே இடத்திலிருந்தே ,அதாவது மலர்களிலிருந்தே மதுவை அருந்துகின்றன .ஆனால் ,குளவியிலிருந்து விஷ எச்சிலும் ,தேனீயிலிருந்து மதுரமான தேனும் உற்பத்தியாகின்றன .
இருவகை மான்கள் புல்லையும் தண்ணீரையும் தான் அருந்துகின்றன .ஒரு வகையிலிருந்து வெறும் புளுக்கையும் ,விட்டையும் மற்ற வகையிலிருந்து கஸ்தூரியும் உண்டாக வில்லையா ?இருவித நாணல்கள் ஆற்றங்கரையில் ஒரே தண்ணீரைத் தான் அருந்துகின்றன .அவற்றுள் ஒன்று வெறும் மூங்கிலாகின்றது .மற்றது மதுரமான இன்பரசத்துடன் கரும்பாகின்றது .இவ்விதமாக எத்தனையோ உதாரணங்கள் கூறலாம் .
இன்னும் பாருங்கள் !ஒருவன் உண்ணுகிறான் .அவனில் நின்றும் வெறும் அசுத்தமே வெளியாகின்றது .மற்றொருவரும் உண்ணுகின்றார் .அது முற்றிலும் இறைவனது ( நூர் )ஜோதியாக மாறுகின்றது .தீயவன் உண்ணுகிறான் .அதிலிருந்து கோபம் ,பொறாமை முதலியவை உண்டாகின்றன .நல்லவர் உண்ணுகிறார் .அதன் மூலம் இறை ஜோதிப் பிரகாசமும் ,ஞானமும் ,தெய்வீகக் காதலும் உண்டாகின்றன .நற்கருமங்கள் புரியும் நல்லவர் சுத்தமான வளமுடைய நிலமாக இருக்கின்றார் .தீய காரியங்களில் தலையிடும் கெட்டவர் உபயோகமற்ற உவர் நிலமாக இருக்கின்றார் .முந்தியவர் பரிசுத்தவானாக இருக்கின்றார் .பிந்தியவர் மோசமான துஷ்டராகவும் ,நாசகார அசுரராகவும் இருக்கின்றார் .காணும் தோற்றத்தில் அவ்விருவரும் ஒன்று போலவே ஒத்திருந்த போதிலும் என்ன ?
மேலும் பாருங்கள் !மதுரமான நல்ல தண்ணீரும் ,கசப்பான உப்புத் தண்ணீரும் பார்வைக்கு ஒன்று போலவே இருக்கின்றன .ஆனால் நாவில் வைத்து ருசி பார்த்தற்கப்பால் தான் இரண்டிற்கும் வித்தியாசம் தெரிய வருகிறது .அனுபவித்து அறிபவனைத் தவிர வேறு எவனும் அந்த நீரின் தன்மையை அறிய மாட்டான் .அப்படிப்பட்ட அனுபவசாலிகளையே நீ தேடியடைதல் வேண்டும் .ஏனெனில் ,அவர்களே கசப்பான நீரையும் ,மதுர நீரையும் ,பிரித்தறிவார்கள் .பதார்த்தங்களின் சுவையை ருசிப்பவர்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார் .தேனையும் ,மெழுகையும் எப்படி வேறுபடுத்தி அறிய முடியும் ?
( தொடரும் )