முரீதுகளின் அனுபவக் கூற்று !
மு . முஹம்மது அலி ஹக்கிய்யுல் காதிரி . காந்தி மார்க்கெட் , திருச்சி .
அன்று சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் 70- ஆவது பிறந்த நாள் என எங்கள் பகுதியில் போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தி இருந்தார்கள் .நான் போஸ்டரைப் பார்த்தேன் .நபிகள் நாதரின் 34ஆவது வாரிசு என இருந்ததைப் படித்தேன் .மனதில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாரிசைப் பார்க்க வேண்டும் என்ற அவா !இதை என் அத்தாவிடமும் ,எனது சகோதரர் பக்ருதீன் அலி அஹமதுவிடம் சொல்லி யாஸீன் மதுரஸா இருக்கிறது .அதில் விழா சிறப்பாக நடைபெறுகிறது .அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன் .சரி போகலாம் என்று சொன்னார்கள் .அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சி தப்லே ஆலம் பாதுஷா அவர்களின் சந்தனக் கூடு நடைபெறும் சமயம் எமது நண்பர் நாஸர் ஹள்ரத் அவர்கள் புக் ஒன்றை வாங்கி வந்தார்கள் .அந்த இதழை என்னிடம் கொடுத்தார்கள் .ஆன்மிக மாத இதழ் “மறைஞானப்பேழை” என்று இருந்தது .முதல் பக்கத்திலே திருப்பியவுடன் அதிலே சங்கைமிகு செய்கு நாயகம் ,நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் அஷ்ஷைகுல் காமில் குத்புஸ்ஸமான்ஷ ம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் மறைஞானப் பேழை பக்கத்தை அலங்கரித்தது .பார்த்தவுடன் என்னுள் சந்திப்போம் விரைவில் என்று மனதில் நினைத்துக் கொண்டேன் .மறைஞானப் பேழையில் அமுத மொழிகள் வாப்பா நாயகம் அருளியிருந்தார்கள் .“ இறந்து மடிந்து போன உள்ளங்களை ஹயாத் தாக்கவே நாம் அருவாயிருந்து உருவானோம்” என்று அருளியிருக்கிறார்கள் .இதைப் படித்தவுடன் எனது மனதில் படிந்து விட்டது .ஒரு வருடம் வரை மறைஞானப் பேழையின் இதழைப் படித்துக் கொண்டு இருந்தேன் .நான் கனவில் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களைப் பார்த்தேன் .இதழில் இருந்ததற்கும் நாம் பார்த்ததற்கும் வித்தியாசமாக இருக்கிறதே என்று நண்பர்களிடம் சொல்வேன் .
வாப்பா நாயகம் அவர்களின் 70- ஆவது பிறந்த நாள் விழா அன்று மதுரஸாவிற்கு எனது சகோதரர் பக்ருதீன் அலி அஹமது மற்றும் எனது அத்தா அவர்களும் சென்றோம் .நாம் நபிகளாரின் பேரரைச் சந்திக்கப் போகிறோம் என்று நாங்கள் அனைவரும் நினைத்து இருந்தோம் .ஆனால் சங்கைமிகு செய்கு நாயகம் விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது .நானும் எனது சகோதரர் பக்ருதீன் அலி அஹமது அவர்களும் நபிகளாரின் பேரர் வாப்பா நாயகம் அவர்களைத் தேடினோம் .பிறகு தான் தெரிந்தது .நிகழ்வுகளுக்கெல்லாம் அவர்கள் வர மாட்டார்கள் .முக்கியமான மஜ்லிஸில் மட்டும் அமருவார்கள் என அங்குள்ள முரீதுகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம் .பிறகு இனிதாக விழா முடிந்தது .அங்கு சில நூல்களும் வாங்கினோம் .கேஸட் ஒன்றினையும் ( ஞானப்பாடல் )வாங்கினோம் .ஞானப்பாடல் கேஸட்டிலே வாப்பா நாயகம் அவர்களின் திருஉருவம் அதிலே இருந்தது .நான் தினசரி எங்கள் வீட்டிலே கேஸட்டைப் போட்டு பாடல்களைக் கேட்போம் .எங்கள் அத்தா மற்றும் யூசுப் சாஹிப் அவர்கள் அடிக்கடி அந்தப் பாடலைப் போடு என்பார்கள் .நானும் மனம் உவந்து அந்த ஞானப்பாடலைப் போட்டு சத்தம் அதிகமாக வைப்பேன் .அந்த ஞானப்பாடல்களில் அருவாகி உருவாகி அருவுருவேயாகி என்ற பாடலை விரும்பிக் கேட்பார்கள் .பிறகு காந்தி மார்க்கெட்டுக்கு மதுரஸாவிற்காக காய்கறி வாங்க ரபீயுத்தீன் ஹள்ரத் அவர்களைச் சந்தித்தேன் .அவர்களை நான் என் தம்பி கடைக்கு அழைத்து வந்து தம்பி பக்ருதீன் அலி அஹமதுவிடம் அறிமுகம் செய்து வைத்தேன் .பிறகு பேசிக் கொண்டு இருந்தோம் .நபிகளாரின் பேரர் வாப்பா நாயகம் அவர்களின் பேச்சு வந்தபோது ரபீஉத்தீன் அவர்கள் கூறினார்கள் .
திருமுல்லைவாசலில் சங்கைமிகு யாஸீன் மெளலானா ( ரலி )அவர்களின் உரூஸ் நடைபெறுகிறது .அங்கு சங்கைமிகு வாப்பா நாயகம் வருகை தர இருக்கிறார்கள் .தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் .திண்டுக்கல்லில் இருந்து வேன் வருகிறது தாங்கள் வந்துவிடுங்கள் என்பதாகக் கூறியவுடன் எங்களுக்கு சந்தோஷ ம் தாங்கவில்லை .நபிகளாரின் பேரர் அவர்களை தரிசிப்பதற்காக ஆர்வம் கொண்டோம் .அந்த இனிய நாளும் வந்தது .ஆனால் நாங்கள் சொந்தமாக வேன் வைத்து திருமுல்லைவாசல் சன்னிதானத்திற்குச் சென்றோம் .சிறப்புமிக்க மஜ்லிஸ் நடக்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்கள் .அங்குதான் நபிகளாரின் பேரர் அவர்களை கண்குளிர தரிசித்தோம் .பிறகு ஒவ்வொரு நபராக சங்கைமிகு வாப்பா நாயகம் ( எமது ஆத்மீக குரு )அவர்களை முஸாபஹா செய்தோம் .அவர்கள் என்னை ஏறிட்டுப் பார்த்தார்கள் .எங்கிருந்து வருகிறீர்கள் என்று வினவினார்கள் .நான் திருச்சியிலிருந்து எனச் சொன்னேன் .அதற்கு அவர்கள் தலையை மட்டும் அசைத்தார்கள் .நான் வந்து விட்டேன் .நான் அடிக்கடி ஞானக் கூட்டங்களுக்குச் சென்று கொண்டு இருந்தேன் .சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் திருச்சிக்கு வந்த போது நடந்த மஸ்லிஸில் “நாம் எங்கிருந்து வந்தோம் .எங்கே போகப் போகிறோம் என்பதை நமது பிள்ளைகள் ( முரீது )ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எம் அவா” என்று சொன்னார்கள் .என் மனதில் பொறி தட்டியது .எங்கிருந்து வருகிறீர்கள் என்பதின் அர்த்தம் புரிந்தது .
ஆடி அடங்கும் வாழ்க்கையடா அதற்குமுன்
அஹ்ல பைத்தினர் ,நம் சொந்தமடா -இதை
எண்ணிப் பார்ப்பது நம் கடமையடா இதை -
எண்ணாமல் இருப்பது மடமையடா .